தீபாவளி : நவீன யுகத்தில் நெருப்புப் போர்!
கெளதம்புராவில் அச்சத்தையூட்டும் பாரம்பரியப் போர்!
வண்ண விளக்குகள் ஏற்றி, பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி முடித்த உங்களுக்கு, இப்பண்டிகையை அச்சம்தரும் முறையில் கொண்டாடப்படுவதை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்தூர் நகரில் இருந்து 55 கி.மீ. தூரத்தில் உள்ள கெளதம்புரா என்ற இடத்தில் ஹிங்கோட் போர் எனும் பாரம்பரிய போர் விளையாட்டை உங்களுக்கு காட்டப் போகின்றோம். ஒரு போரைப் போல இந்த பாரம்பரிய விளையாட்டு கெளதம்புராவில் ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும் நடைபெறுகிறது. இந்தப் போர் விளையாட்டில் ஈடுபடும் கெளதம்புரா கிராமத்தினர் பலர் காயமடைகின்றனர். ஆயினும் அவர்கள் துணிச்சலை இழப்பதில்லை.
ஹிங்கோட் எனும் முள் செடியில் காய்க்கும் பழத்தை எடுத்து அதன் உள்ளீடுகளை அகற்றிவிட்டு ஒரு மாதம் வரை நன்கு காயவைத்து அதற்குள் பட்டாசில் பயன்படுத்தப்படும் வெடிக்கும் பொருட்களை நிரப்பி அவற்றை மூடி அதன்மீது மூங்கில் குச்சிகளை கட்டி, களிமண்ணால் பூசி பார்ப்பதற்கு ராக்கெட் போல தெரியும் ஆயுதங்களை உருவாக்குகின்றனர்.
தீபாவளி பண்டிகையின் இரண்டாவது நாளன்று இந்த ஹிங்கோட் போர் நடத்தப்படுகிறது. கெளதம்புராவைச் சேர்ந்த கிராமத்தினர் காலங்கா, துர்ரா என்ற இரண்டு பிரிவினராகப் பிரிந்து எதிரும் புதிருமாக நின்று போரிடுகின்றனர். ஒரு அணி மற்றொரு அணியின் மீது ஹிங்கோட்டை வீசுகிறது. அது மறுபக்கத்தில் விழுந்து வெடிக்கிறது. அந்த அணியும் இதேபோன்று ஹிங்கோட் ராக்கெட்டை வீசுகிறது. அது மறுபக்கத்தில் விழுந்து வெடிக்கிறது.
இந்த அபாயகரமான யுத்த விளையாட்டில் 40 முதல் 50 பேர் வரை காயமடைகின்றனர். ஆயினும் இப்போரில் ஈடுபடும் அக்கிராம மக்களுக்கு உற்சாகம் குறைவதில்லை. இக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெளியூர்களில் இருந்தாலும் இப்போரைக் காண்பதற்கென்றே தங்களது கிராமத்திற்கு வருகின்றனர். இந்த விளையாட்டுப் போர் பாரம்பரியம் எப்போது துவங்கியது என்று ஒருவருக்கும் தெரியவில்லை. ஆனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இதனைக் காண்பதற்கு கெளதம்புராவில் குழுமுகிறார்கள். போர் துவங்குவதற்கு முன் அனைவரும் பிரார்த்தனை செய்கின்றனர். போர் துவங்கி ஒரு அணியின் மீது மற்றொரு அணி தங்களிடம் உள்ள அனைத்து ஆயுதங்களும் தீரும் வரை போர் நடைபெறுகிறது.இந்த விளையாட்டைப் போலவே ஹிங்கோட்டை ஆயுதமாக்கும் அந்தச் செயலும் அபாயகரமானதுதான். ஹிங்கோட்டில் வெடிபொருளை நிரப்பும்போதே அது வெடித்ததாகவும், அதனால் பல நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். இந்தப் போர் விளையாட்டில் ஈடுபடுபவர்கள் முதலில் நன்கு குடித்துவிட்டுத்தான் களமிறங்குகின்றனர். போரின் போது கலவரம் ஏதும் ஏற்பட்டுவிடாமல் தடுக்க அதிரடி காவற்படைப் பிரிவுகள் பணியில் அமர்த்தப்படுகின்றனர்.
இந்த விளையாட்டை தீபாவளியின் ஒரு முக்கிய அங்கமாக புத்தாடை உடுத்தி அக்கிராமத்தினர் கொண்டாடுகின்றனர். விளையாட்டு முடிவு சிலருக்கு சோகமாகி விடுகிறது. இப்படிப்பட்ட ஒரு பாரம்பரியத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். எங்களுக்கு எழுதுங்கள்.