மா ஆந்திரி என்று அழைக்கப்படும் சக்திக் கோயிலுக்குச் செல்வோம். இங்குள்ள மாகாளிக்கு தங்களுடைய நாக்கை காணிக்கையாக அளிப்பவர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு தங்களது நாக்கை காணிக்கையாக்கியுள்ளனர் என்று இக்கோயில் பூசாரி கூறுகிறார்.மனோகர் ஸ்வரூப் என்ற பக்தர், தனது நாக்கை மாகாளிக்கு அளிக்கின்றார். 12 ஆண்டுகளாக தனக்கு குழந்தை பிறக்காத நிலையில் இங்கு வந்த மனோகர் ஸ்வரூப், மா ஆந்திரியிடம் தனக்கு பிள்ளை வரம் அளித்தால் நாக்கை அறுத்து காணிக்கை அளிப்பதாக வேண்டிக் கொண்டார். அதன்படியே அவருக்கு குழந்தை பிறந்தது. எனவே தனது வேண்டுதலை நிறைவேற்ற அவர் இங்கு வந்துள்ளார் என்று அவரது சகோதரர் கூறினார். எங்களது கண்ணிற்கு முன் தனது நாக்கை அறுத்து மனோகர் ஸ்வரூப் காணிக்கையாக்கினார். இவரைப் போலவே மேலும் பலர் நாக்கை அறுத்து காணிக்கையாக்கினர்.
நாக்கை அறுத்து காணிக்கையாக்கியப் பிறகு மேலும் சில நாட்கள் இந்த கோயிலில்தான் தங்க வேண்டுமாம், தங்க வேண்டும் என்பது கட்டாயம் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது. 8 முதல் 10 நாட்கள் வரை இந்த கோயிலில் தங்கியிருக்கும்போது நாக்கை அறுத்ததினால் இழந்த பேச்சாற்றாலை அவர்கள் திரும்பப் பெறுகின்றனர். தான் அவ்வாறு பேச்சாற்றலை திரும்பப் பெற்றதாக பிரபாத் தேவ் என்பவர் எங்களிடம் தெரிவித்தார்.
மா ஆந்திரி மாதாவிற்கு இப்படி நாக்கை அறுத்து காணிக்கை செலுத்தும் காட்சியைக் கண்ட நாங்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தோம். இந்த காட்சி எங்கள் மனதில் பல கேள்விகளை எழுப்பியது. தங்களது உடலை வறுத்திக் கொள்வதால் மா துர்காவை திருப்தி செய்ய முடியுமா? அப்படிப்பட்ட நடவடிக்கையால் அவர்கள் நினைத்தது நிறைவேறுமா? சாமியாடுகிறார்களே அவர்களது உடலுக்குள் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி இறங்குகிறதா? இந்த கேள்விகளுக்கு எல்லாம் எங்களுக்கு பதில் கிட்டவில்லை.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்... எங்களுக்கு எழுதுங்கள்.