நெய் ஆறு ஓடுவதை நீங்கள் எங்காவது கண்டதுண்டா? நிச்சயம் இல்லை என்றே கூறுவீர்கள். ஸ்ரீராமன் ஆண்ட காலத்தில் பாலும், நெய்யும் ஆறாக ஓடியதாக நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால், நெய் ஆறு ஓடுவதை குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கண்டோம். நம்பினால் நம்புங்கள் என்ற தொடரில் இந்த வாரம் தாங்கள் வணங்கும் தெய்வத்திற்கு 6 லட்சம் கிலோ நெய்யை நிவேதனமாக அளிக்கும் ஒரு கிராமத்திற்கு உங்களை அழைத்துச் செல்கின்றோம். குஜராத் மாநிலம் ரூபால் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் தாங்கள் வணங்கும் தெய்வமான அத்திய சக்தி வர்த்தாயினி மாதாவிற்கு நவராத்திரி பண்டிகையின் 9வது நாளன்று ஒரு பெரும் ஊர்வலத்தை நடத்தி தெருவிற்குத் தெரு லட்சக்கணக்கான கிலோ நெய்யை நிவேதனம் செய்து வழிபடுகின்றனர். பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொள்கின்றனர். வர்த்தாயினி மாதாவிற்கு நெய் நிவேதனம் செய்தால், தாங்கள் எதிர்பார்ப்பதை அச்சக்தி நிறைவேற்றும் என்று நம்புகின்றனர். இந்த நிவேதன விழாவின் போது சட்டையிலும், பெண்களின் ஆடைகளிலும் சிந்தும் நெய் சாதாரணமாக துவைத்தாலே போய்விடுகிறது. ஆனால், நமது அன்றாட வாழ்வில் நெய் கறை ஏற்பட்டால் அதனை அகற்றுவது மிகக் கடினமாகும். இப்படியெல்லாம் கூறப்பட்டதைக் கேட்ட நாங்கள், இவை உண்மைதானா என்பதை அறிய அக்கிராமத்திற்குச் சென்றோம். பல்லி மகோத்சவம் என்ற அந்த 9வது நாள் நவராத்திரி விழாவை காணச் சென்றோம். ஊர்வலம் புறப்படத் தயாராக இருந்தது. பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டிருந்தனர். பொதுவாக நள்ளிரவு 12 மணிக்குப் புறப்பட வேண்டிய அத்திய சக்தி வர்த்தாயினி மாதா வீதி உலா, கீச்ரா எனும் பாரம்பரிய உணவு தயாரிப்பதில் ஏற்பட்ட தாமதத்தினால் அதிகாலை 3.30 மணிக்குத்தான் துவங்கியது.
அந்த கிராமத்தில் உள்ள 27 தெருக்களிலும் பெரிய வண்டிகளில் நெய்கள் நிரப்பட்ட டின்கள் வைக்கப்பட்டிருந்தன. வர்த்தாயினி மாதாவின் பல்லக்கு ஒவ்வொரு தெரு முனைக்கும் வரும்போது வாளிகளில் நெய்யை ஊற்றி அம்மனுக்கு நிவேதனம் செய்தனர்.
கடந்த ஆண்டு 4.5 லட்சம் கிலோ நெய் நிவேதனம் செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டு 6 லட்சம் கிலோ நெய் நிவேதனம் அளிக்கப்பட்டதாகவும் வர்த்தாயினி தேவஸ்தானத்தின் அறங்காவலர் நித்தின்பாய் பட்டேல் எங்களிடம் தெரிவித்தார்.
இந்த நெய்யை எடுத்து குழந்தைகளின் உடலில் பூசினால் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்றும், அவர்களை எந்த தீய சக்தியும் தீண்டாது என்றும் நம்புகின்றனர். புதிதாக திருமணமான பெண்களும், தங்களது கணவன்மார்களுடன் வந்து வர்த்தாயினி மாதாவை தரிசிக்கின்றனர். வர்த்தாயினி வீதி உலா வரும் போது நெய் நிவேதனம் செய்தால் பிள்ளையில்லாதோருக்கு பிள்ளை பிறக்கும் என்று கிராமத்தினர் கூறுகின்றனர்.
பக்தர்கள் நிவேதனமாய் அளித்த நெய் ரூபால் கிராமத் தெருக்களிலும் ஆறாகத்தான் ஓடியது. அதனை வால்மீகி என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சேகரித்து தூய்மைபடுத்தி சந்தையில் விற்கின்றனர். அவர்கள்தான் எடுக்க வேண்டு என்பது ஒரு கட்டுப்பாடாக உள்ளது. இங்குள்ள மக்களில் பலர் இதனை ஒரு பாரம்பரியமாக நம்புகின்றனர். சிலர் மூட நம்பிக்கையாகக் கருதுகின்றனர். இந்த விழாவை எடுக்கும் பல்லி பரிவர்தன் அபியான் என்ற அமைப்பின் நிறுவனர் லோகேஷ் சக்கரவர்த்தி, இப்படி நெய்யை கொட்டி வீணாக்குவதைத் தவிர்த்து அதை ஏழை மக்களுக்குக் கொடுத்தால் அவர்கள் வாழ்த்துவார்கள். அந்த நெய்யை குறைந்த விலைக்கு விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு மருத்துவமனை, பள்ளி, நூலகம் ஆகியவற்றை இந்த கிராமத்தில் உருவாக்கலாம் என்று கூறினார். இவருடைய கருத்தை எதிர்க்கும் கிராமத்து மக்கள், அவரை இலங்கையின் இராவணன் என்று பழிக்கின்றனர். லோகேஷ் சக்கரவர்த்தியின் கருத்தை நாங்களும் ஏற்கிறோம். கெளதம புத்தர் கூறியது போல, மதமும் நம்பிக்கைகளும்தான் இந்த நாட்டை ஆட்டிப் படைக்கின்றன. ஒவ்வொரு விஷயத்திலும் மக்கள் கொண்டுள்ள கருத்துக்கள் ஏற்கத்தக்கவையாக இல்லை என்று கூறினார்."
நமது புராணங்களில் உள்ள அனைத்தும் உண்மை என்றே மக்கள் நம்புகின்றனர். ஆனால் எது செய்தாலும் நன்கு சிந்தித்துவிட்டுச் செய்யுங்கள்" என்று புத்தர் கூறினார். அவர் கூறியதை கடைபிடிக்குமாறு நாங்களும் எமது வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். நம்பிக்கைக்கும், மூட நம்பிக்¨க்கும் ஒரு சிறிய இடைவெளியே உள்ளது. எனவே, விவேகமாக சிந்தித்து புரிந்துகொள்ளுங்கள். ஏன் இந்த விழா?
மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களும், அவர்களின் மனைவி துரோபதியும் யாரும் அறியக்கூடாத இரகசிய வாழ்க்கை வாழ்ந்தபோது வர்த்தாயினி மாதாவை தரிசித்து வேண்டினராம். ஓராண்டு கால இரகசிய வாழ்க்கை முடிந்ததும் அவர்கள் மீண்டும் இக்கிராமத்திற்கு வந்து வர்த்தாயினி மாதாவிற்கு நெய்யை நிவேதனம் செய்து வழிபட்டனராம். அதனை இம்மக்கள் இன்று வரை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி 9வது நாள் வர்த்தாயினி மாதா வீதி உலா நடைபெறுகிறது.
வர்த்தாயினி மாதா வரும் பல்லக்கை அந்த கிராமத்தைச் சேர்ந்த முடிதிருத்துவோர் அலங்கரிக்கின்றனர். குயவர்கள் 5 பானைகளைச் செய்து அதில் வைக்கின்றனர். தோட்டக்காரர்களால் பல்லக்கு அலங்கரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக தயாரிக்கப்படும் இந்தப் பல்லக்கில் ஒரு ஆணி கூட பயன்படுத்தப்படுவதில்லை. வீதி உலா துவங்குவதற்கு முன்பு அந்த ஊரின் ஜோதிடரான சைலேஷ் பாய் பந்தாதி, இந்த ஆண்டு எவ்வளவு மழை பெய்யும் என்று கணித்துக் கூறுகின்றார். கடந்த ஆண்டு இவர் கணித்தது போலவே மழை பெய்ததாம். இந்த ஆண்டும் பயிர்களுக்குத் தேவையான அளவு நல்ல மழை பெய்யும் என்று கூறியுள்ளார்.