நம்பினால் நம்புங்கள் என்ற இப்பகுதியில் நமது சமூகத்தில் நிலவும் பல்வேறு மூடநம்பிக்கைகளையும், அதன் அடிப்படையில் நிகழும் பல்வேறு சம்பவங்களையும் உங்களுக்கு அளித்துள்ளோம். அவைகளில் சில, நோய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளும் ஆகும். நோய்வாய்பட்ட ஒருவர் எல்லா சிகிச்சைக்குப் பின்னரும் குணமாகாத நிலையில், இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளை நோக்கி திரும்புகிறார். அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் இந்த மோசடிக்காரர்களை புரிந்துகொள்ள வேண்டும் என்பதே தமிழ் வெப்துனியா வாசகர்களுக்கு நாம் விடுக்கும் வேண்டுகோளாகும். அந்தக் கோணத்தில்தான் நமது சமூகத்தில் நிலவும் இந்த மூட நம்பிக்கைகளை உங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறோம். அம்முயற்சியின் ஓர் அங்கமாக, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் நிலவும் மூட நம்பிக்கையை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். சாச்சவா எனும் பயங்கரமான இந்த சிகிச்சை முறையில், நோயாளிகளின் உடலில் பழுக்க காய்ச்சிய கம்பிகளால் சுடுகின்றனர். விதீஷா, கண்டாவா, பைடூல், தார், குவாலியர், விந்த்-முறைனா ஆகிய கிராமப் பகுதிகளில் இந்த சிகிச்சை முறை இப்பொழுதும் உள்ளது. இந்த சிகிச்சை அளிப்பவரை பாபா என்று கிராமத்தினர் அழைக்கின்றனர். அவர் நோயாளியிடம் இருந்து நோய் குணத்தை அறிந்துகொண்டு பிறகு உடலின் சில இடங்களில் சாம்பலால் குறியிட்டு விட்டு அந்த இடங்களில் பழுக்க காய்ச்சிய கம்பியின் முனையால் தொடுகிறார். இவ்வாறு செய்வதால் நோய் குணமாகிறது என்று இந்த பாபா கூறுகிறார். இந்தத் தகவல் கிடைத்ததும் மோக்கா பிப்லியா என்ற கிராமத்தில் சிகிச்சை அளிக்கும் ஓர் பாபாவை சந்தித்தோம். அவரது பெயர் அம்பாராம்ஜி. இந்த சிகிச்சையை 20 ஆண்டுக்காலமாக அளித்து வருவதாகக் கூறினார். அவரது தந்தையும் இந்த சிகிச்சையை செய்து வந்தாராம். வயிற்று வலி, வாயுப் பிரச்சனை, மூலம், பருக்கள், காச நோய், பக்கவாதம் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்களை இந்த சாச்சாவா சிகிச்சையின் மூலம் தன்னால் குணப்படுத்த முடியும் என்று கூறுகிறார்.
மனித உடலில் உள்ள நோய்களை சாச்சாவா சிகிச்சை எரித்துவிடுகிறது என்று அம்பாராம் ஜி கூறுகிறார். அவரது சிகிச்சையால் ஆச்சரியப்படும் மக்கள், அவரை டாக்டர் என்றும் அழைக்கின்றனர். பல நோயாளிகள் இவரிடம் சிகிச்சை பெற்றதற்கான சூடு பட்ட தழும்புடன் உள்ளனர். அவர்களில் சந்தர்சிங்கும் ஒருவர். அவரது உடலில் சாச்சாவா கிசிச்சையால் சுடப்பட்ட 11 தழும்புகள் உள்ளன. சாச்சாவா சிகிச்சை பெற்ற உடனேயே தனக்கு நிவாரணம் கிடைக்கிறது என்று கூறுகிறார் சந்தர் சிங். இவர் வயிற்று வலி, தலை வலி, ஈரல் வலி ஆகியவற்றிற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கான தழும்புகளைக் காட்டினார்.
சாச்சாவா சிகிச்சையின் மூலம் ஏற்படும் இந்தத் தழும்பு உடலில் இருந்து மறைவதில்லை. நோயை குணப்படுத்துவதற்கான இடங்கள் என்று கழுத்து, தலை, வயிற்றுப் பகுதிகளில் அம்பாராம் சுடு கோலை வைத்து சிகிச்சை அளிக்கிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை அன்றும் இந்த பாபாவின் இல்லத்தின் அருகே ஏராளமானவர்கள் வரிசையில் நின்று சிகிச்சை பெறுகின்றனர். இளைஞர்கள், வயதானவர்கள் மட்டுமின்றி, சிறுபிள்ளைகள் கூட இந்த சிகிச்சைக்கு வருகின்றனர். அங்கு குழந்தையோடு நின்றுக் கொண்டிருந்த ஒரு பெண்மணியை சாச்சாவா சிகிச்சையை குழந்தைக்கு அளிக்க வேண்டாம் என்று நாம் தடுத்த போது, தனது குழந்தைக்கு தொடர்ந்து வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது என்றும், சாச்சாவா செய்யவில்லை என்றால் குழந்தை இறந்துவிடும் என்றும் கோபமாகக் கத்தியதோடு மட்டுமின்றி, எது நல்லது என்று எங்களுக்குத் தெரியும் என்றும் கூறினார். அந்தக் குழந்தைக்கு 5 நிமிடத்திற்கு சாச்சாவா சிகிச்சை நடந்தது. இப்படிப்பட்ட சிகிச்சைகள் குறித்து எம்.பி.பி.எஸ். பயின்ற ஒரு மருத்துவரிடம் கேட்டபோது, இவையெல்லாம் அடிப்படையற்ற சிகிச்சை முறைகள் என்றார். அவர்கள் நோயாளியிடம் ஏற்படும் சந்தேகத்திற்கு வேண்டுமானால் சிகிச்சை அளிக்களாமேயே ஒழிய நோயை குணப்படுத்த முடியாது என்று கூறினார். இப்படிப்பட்ட சுத்தமற்ற சிகிச்சையால் நோய் பரவும் அபாயமும் உள்ளது என்றார்.
இப்படிப்பட்ட சிகிச்சைக்கு ஆட்படுத்தப்பட்ட ஒரு குழந்தையுடன் தன்னை ஒரு தம்பதியினர் சந்தித்ததாகவும், அந்தக் குழந்தைக்கு தொப்புள் அருகே சாச்சாவா சிகிச்சை செய்துகொண்டதற்கான தழும்பு இருந்தது என்றும் கூறியவர், ஒரு மாத கால சிகிச்சைக்குப் பிறகு அந்த தழும்பு குணப்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
அறியாமையின் காரணமாகவே இப்படிப்பட்ட மோசடிக்காரர்களிடம் மக்கள் சிக்கிக்கொண்டு ஏராளமான பணத்தை செலவழிக்கின்றனர். இப்படிப்பட்ட சிகிச்சைகளால் பலர் உயிரையும் இழக்கின்றனர். நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?