சாலையில் நடந்து போகும்போது தெரு நாய் ஒன்று உங்களைக் கடித்துவிட்டது அல்லது நீங்கள் செல்லமாக வளர்க்கும் நாயின் பல் பட்டு உங்களுக்கு காயம் ஏற்பட்டுவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனால் ஏற்படும் நோயைத் தடுக்க குக்ரேல் நாலா எனும் கால்வாயில் (சாக்கடை என்றே அழையுங்கள்) இறங்கி குளித்தால் போதும். நம்ப முடிகிறதா? உத்திரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் உள்ள பைசாபாத் சாலையில் இந்த சாக்கடை கால்வாய் ஓடுகிறது. அதில் நாய்க்கடிக்கு சிகிச்சையாக பலரும் இறங்கி குளித்துள்ளனர். லக்னோவில் மட்டுமல்ல, அம்மாநிலத்தின் பல்வேறுப் பகுதிகளிலும் நாய்க்கடிக்கு ஆளானவர்கள் இங்கு வந்து குளித்துவிட்டுப் போகின்றனர்.ஐ.ஏ.எஸ். போன்ற அரசு உயர் அதிகாரிகள் சிலர் கூட நாய்க்கடி பட்டப்பின் இங்கு வந்து குளித்துச் சென்றதாக சிலர் கூறுகின்றனர்.
இந்த கால்வாயின் ஒரு பக்கத்தில் சேரிப் பகுதியாக உள்ளது. அதன் இடதுப் பக்கத்தில் தான் இப்படி நாய்க்கடிப்பட்டவர்கள் இறங்கிக் குளிக்கின்றனர்.
இந்தக் கால்வாய் லக்னோவில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள பக்சிகா தாலாப் என்று அழைக்கப்படும் குளத்தில் இருந்து உருவாகி பைசாகுண்ட் அருகில் உள்ள கோமதி பைராஜில் சென்று கலக்கிறது.
குக்ரேல் நாலா என்று ழைக்கப்படும் இந்த கால்வாயில் பைசாபாத் சாலையில் அமைந்துள்ள பாலத்திற்கு கீழே சென்று குளித்தால் நாய்க்கடியால் உடலில் ஏறும் விஷம் முறிந்துவிடுகிறது என்று கூறுகின்றனர்.
ஒவ்வொரு நாள் காலையிலும் இவ்விடத்திற்கு வந்து பார்த்தால் நாய்க்கடி பட்டவர்கள் இங்குப் 'புனித நீராட' வரிசையில் நின்று கொண்டிருப்பதை பார்க்கலாம். இங்கு குளித்தப் பிறகு கோதுமையும், பருப்புப் பொடிகளை வெள்ளப் பாகில் கலந்து சிறப்பு பூஜை செய்கின்றனர். இந்த பூஜை செய்வதற்கென்றே அங்கு சிலர் இருக்கின்றனர்.
சஞ்சய் தோஷி, நோம்தார், நூர்ஜஹான் ஆகியோர் அந்த பூஜை செய்பவர்களில் சிலர். இந்த பூஜையை நான்கு தலைமுறையாக நாங்கள் செய்து வருவதாகவும், இப்போது நானும் செய்வதாகவும் சஞ்சய் தோஷி கூறுகிறார். இவர் அங்குள்ள மன்காமேஷ்வர் கோயில் காலனியில் குடியிருக்கிறார்.நாய்க்கடி பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க இரும்பால் செய்யப்பட்ட பல்லை எங்களிடம் காண்பித்தார். நாய்க்கடி பட்டவர்களுக்கு செய்யக்கூடிய அந்த சிறைப்பு பூஜை என்ன என்று கேட்டதற்கு, அதனை விளக்க மறுத்த சஞ்சய் தோஷி அது பைரவர் சாமிக்கு செய்யப்படும் பூஜை என்று கூறினார்.30
ஆண்டுகளுக்கு முன்பு தனது தாய் நைமூல் நிஷா செய்து வந்த அந்த சிறப்பு பூஜையை இந்த வயதான காலத்திலும் தான் செய்து வருவதாக நூர்ஜஹான் கூறுகிறார்.இந்த குளிக்குமிடத்தை அரசாங்கம் நன்கு பாதுகாக்க வேண்டும் என்றும், பெண்கள் குளிப்பதற்கு தனி மறைவிடம் கட்டித் தர வேண்டும் என்றும் இவர் கூறுகிறார்.தற்பொழுது ஆண்களைப் போலவே பெண்களும் அங்கு வெளிப்படையாகவே குளிக்க வேண்டி உள்ளதாம். நாய் கடித்த காயத்துடன் தனது தந்தையுடன் இங்கு நீராட வந்த மான்புர் லால் கிராமத்தைச் சேர்ந்த விஷால் என்பவர், இந்த கால்வாயில் ஞாயிற்றுக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் குளித்தால் போதும். நாய்க்கடிக்காக சிறப்பாக ஊசி எதுவும் போட்டுக் கொள்ள வேண்டாம் என்று தனது தந்தை கூறியதாகத் தெரிவித்தார்.இதேப் போல லக்னோ ரே பரேலி சாலை சாரதா நகர் செக்டார் 8 ரஜனி கன்ட் எனும் இடத்தில் வசிக்கும் மொஹம்மது அப்துல் ரகுமானின் மகன், மொஹம்மது சாகிப்பும் நாய் கடித்ததால் இங்கு நீராட வந்திருந்தார்.9
ஆண்டுகளுக்கு முன்னர் தன்னை நாய் கடித்தபோது இங்கு நீராடியதால் தான் குணமடைந்ததாகவும், தற்பொழுது மீண்டும் நாய் கடித்ததால் நீராட மீண்டும் வந்துள்ளதாகக் கூறினார்.
இதேப்போல மாஹிபுல்லாப்பூரைச் சேர்ந்த முன்னாலால் குப்தா என்பவரின் 10 வயது மகன் அன்கூரும் நாய் கடிக்கு சிகிச்சை பெற வந்துள்ளார்.
3 ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரனை நாய் கடித்தபோதும் இங்கு வந்து நீராடியதால்தான் அவனுக்கு குணமானதாக அன்கூர் கூறினார்.
இந்த நம்பிக்கைக்கு அடிப்படை என்ன?சக்தி நகர் காலனியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற துணைப் பதிவாளர் சி.என். சிங்கிடம் கேட்டோம். ஒரு காலத்தில் தான் வளர்த்த பெட்டை நாயுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து ஒரு வணிகன் இங்கு வந்தார். தான் கொண்டு வந்த பணம் இங்கே காணாமல் போய்விட்டது. தன்னோடு கொண்டு வந்த நாயை அங்குள்ள வீட்டின் உரிமையாளரிடம் அடகு வைத்துவிட்டு அதன் பேரில் கொஞ்சம் பணம் பெற்றுக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.ஒரு நாள் அவருடைய வீட்டில் புகுந்த திருடர்கள் பணத்தைக் களவாடிச் சென்று விட்டனர். களவாடிய பணத்தை ஒரு கிணற்றில் மறைத்து வைத்தனர். அந்த திருடர்களை தொடர்ந்து சென்ற அந்த நாய் அந்த இடத்தை தெரிந்து வந்து கொண்டு அந்த வீட்டின் உரிமையாளரிடம் கூற அவர் களவு போன பணம் அனைத்தையும் மீட்டுக் கொண்டு வந்தார்.அந்த நாயின் நன்றி உணர்ச்சியால் மகிழ்ந்த வீட்டு உரிமையாளர், அதனை அவிழ்த்துவிட்டார். சில நாட்கள் கழித்து ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பிய அந்த வணிகர், தான் விட்டுச் சென்ற அந்த பெட்டை நாய் அங்கு இல்லாததைக் கண்டு ஏமாற்றமடைந்தார். அங்கிருந்து திரும்பும் வழியில் ஓரிடத்தில் அதனைக் கண்டார். கோபத்தால் அதனை திட்டியவர், அந்த கிணற்றில் குதித்து சாகுமாறு கட்டளையிட்டார். அந்த பெட்டை நாயும் அவ்வாறு குதித்து செத்து விட்டதாம்.ஆனால் அது செத்ததற்கு அந்த வணிகர் மிகவும் வருத்தப்பட்டுள்ளார். ஒரு நாள் அந்த பெட்டை நாயின் ஆத்மா அவரிடம் வந்து தான் இறந்த இந்த கிணற்றில் உள்ள தண்ணீரில் குளிப்பவர்களுக்கு நாய்க்கடியால் எந்த நோயும் ஏற்படாது என்று கூறியதாம்.
இந்த குக்ரேல் நாலா கால்வாய் அந்த கிணற்றில் இருந்துதான் உருவாகிறது என்று துணைப் பதிவாளர் சி.என். சிங் கூறினார்.
விஞ்ஞானத்தின் பார்வை
இது குறித்து அங்குள்ள மருத்துவர் ஹெராம் அக்னிஹோத்ரியிடம் கேட்டோம். அவர், இந்த நம்பிக்கைக்கு எந்த விஞ்ஞானப் பூர்வ ஆதாரமும் இல்லை என்று கூறினார்.
நாய்க்கடியால் ராபிஸ் என்ற நோய் ஏற்படும் என்றும், அது நரம்பு மண்டலத்தை தாக்கி முதுகெலும்பு வழியாக மூளையைத் தாக்கும் நுண்ணுயிரியை உருவாக்கும் என்று கூறினார்.
நாய்க்கடி பட்ட சிலருக்கு இதற்கான அறிகுறிகளை ஒரு மாதத்தில் காணலாம். 10 ஆண்டுகள் கழித்தும் தெரியலாம். நாய்க்கடிக்காக போட வேண்டிய ஊசி மருந்து விலை உயர்ந்தது. அதனை ஏழைகள் வாங்கி போட்டுக் கொள்ள முடியாது. எனவே அரசே இப்பொழுதெல்லாம் ஊசி மருந்தை பெற்று குறைந்த விலையில் நோயாளிகளுக்கு வழங்குகிறது.
நாய்க்கடிபட்டவர்கள் உடனடியாக குளிக்க வேண்டியதே அவசியமாக செய்ய வேண்டிய முதலுதவி என்று தாங்கள் கூறுவதாகவும், அந்த நோயைக் குணப்படுத்தக் கூடிய - அதாவது நாய்க்கடியால் உருவாகும் நுண்ணுயிரிகளைக் கொல்லக் கூடிய எந்த குணமும் அந்த சாக்கடையில் இருப்பதற்கு விஞ்ஞானப் பூர்வ அடிப்படை இல்லை.