மக்களிடையே நாளுக்கு நாள் நம்பிக்கைகள் அதிகரித்து வரும் காலம் இது. மருந்துகளால் வியாதிகளை குணப்படுத்த முடியும். ஆனால் கையால் தொடுவதாலும், புனிதத் தீர்த்தத்தை மருந்தாக அளிப்பதாலும் நோயை குணப்படுத்துவது சாத்தியமா?மிகக் கொடுமையான வியாதிகளைக் கூட தனது விரல்களால் தொடுவதன் மூலமும், நோய்வாய் பட்டவர்கள் உடலின் மீது சில சக்திகளை செலுத்துவதன் மூலமும் குணப்படுத்திக் கொண்டிருக்கும் ஒருவரை நாம் சந்திக்கப் போகின்றோம். இந்த சிகிச்சை முறைக்குப் பெயர் பிரம்ம ஞானம், அதாவது பிரபஞ்ச சக்தி. கேரளாவில் உள்ள இடத்தில் தொடுவதால் வியாதிகளை குணப்படுத்தும் பிரம்ம குரு எம்.டி. ரவி மாஸ்டர் என்பவரிடம் சிகிச்சை பெற்று குணமடைந்த நூற்றுக்கணக்கான மக்கள் உள்ளனர். அவர் இலவசமாகவே சிகிச்சை செய்கிறார். எம்.டி. ரவி மாஸ்டர் மருத்துவர் அல்ல. ஒரு தையல்காரர். அடிப்படை கல்வி கூட கற்காதவர். முன் பிறவி பாவங்களால்தான் எல்லா வியாதிகளும், கஷ்டங்களும் மனிதனுக்கு வருவதாகக் கூறுகின்றார். தன்னுடைய உடல் எல்லையை கடந்து சென்று இறையை எட்டுவதன் மூலம் ஒரு மனிதன் தனக்குள்ள எல்லா வியாதிகளில் இருந்தும் குணம் காண முடியும் என்கிறார்.
ரவி மாஸ்டர் நடத்திவரும் சிகிச்சை மையத்திற்குப் பெயர் பிரம்ம தர்ம ஆலயம். கேரள மாநிலத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 135 கி.மீ. தூரத்தில் உள்ள சங்கனாசேரியில் (கோட்டயம் மாவட்டம்) இவர் வாழ்ந்து வருகிறார். இவ்விடம் கொச்சியில் இருந்து 87 கி.மீ. தூரத்தில் உள்ளது. தான் பிரார்த்தனை செய்யும் போது எல்லா கடவுள்களிடமும் பேச முடியும் என்று கூறும் ரவி மாஸ்டர், நான் ஒரு மனித கடவுள் அல்ல என்று கூறுகிறார். மக்களுக்கு சேவை செய்வதே இந்த வாழ்க்கையில் தனக்கு விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.
இவர், பிரம்ம ஞானம் என்றழைக்கும் ஆன்மீகச் சக்தியைத் தவிர வேறு எந்தவொரு மருந்தையும் பயன்படுத்தவில்லை. ஆனால், எப்படிப்பட்ட வியாதியையும், அது பிறவி ரீதியிலானதாக இருந்தாலும் கூட தனது விரல்களால் குணப்படுத்த முடியும் என்று கூறுகிறார். தனது விரல்களின் மூலம் பாயும் பிரம்ம சக்தியே நோய்களைத் தீர்க்கிறது என்று கூறுகிறார். கடுமையான தோல் வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளோரை விரல்களால் தொட்டு இவர் குணப்படுத்துகிறார் என்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது. சங்கனாசேரியில் உள்ள பிரம்ம கிசிச்சை கேந்திரம் எனும் ஆசிரமத்தில்தான் இவர் இச்சிகிச்சையை அளிக்கின்றார். அங்கு இவருடைய சிகிச்சைக்காக ஏராளமான மக்கள் காத்திருக்கின்றனர். மன நோயிலிருந்து உடல் நோய் உள்ளவர்கள் வரை ரவி மாஸ்டரிடம் சிகிச்சை பெற வந்துள்ளனர். இந்த ஆசிரமத்தில் கடவுள் என்று வணங்குவதற்கு ஏதுமில்லை. ஈஸ்வரன், அல்லா, ஏசு ஆகியோரைத் தாண்டியதே பிரபஞ்ச சக்தி. அதாவது பிரம்ம சக்தி என்று நம்பப்படுகிறது.
போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் இவரிடம் சிகிச்சைக்கு வரும் போது அவர்களால் ரவி மாஸ்டரின் முகத்தை பார்க்க முடிவதில்லை. ஏனெனில் அவருடை நெற்றியில் இருந்தும், விரல்களில் இருந்தும் வெளியேறும் சக்தியைக் கண்டு அவர்கள் அஞ்சுகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது அவர்களைப் பீடித்துள்ள அந்த மயக்கத்தை ரவி மாஸ்டர் வெளியேற்றி அவர்களை விடுவிக்கின்றனார். எல்லா பழக்க அடிமைத்தனமும் ஒரு மயக்கமே என்கிறார். மிக பயங்கரமாக தொல்லை கொடுக்கும் மன நோயால் பீடிக்கப்பட்டவர்களையும் இவர் அமைதிபடுத்துகிறார்.
ரவி மாஸ்டர் பிரம்ம குருவானது எப்படி?
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள திருவாஞ்சூரில் 1953 ஆம் ஆண்டு ரவி மாஸ்டர் பிறந்தார். சிறுவனாய் இருந்தபோதே எதிர்காலத்தை இவர் கணித்துக் கூறுவது உண்மையாவதைக் கண்டவர்கள் ஆச்சரியப்பட்டனர். வளர்ந்த பிறகு ஒரு தையல்காரராக தனது வாழ்க்கையைத் துவக்கிய ரவி மாஸ்டர், அதில் நிபுணராக உள்ளார்.
கிறித்தவ பெண் ஒரு வரை மணந்துகொண்ட ரவி மாஸ்டருக்கு 1986 ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்தான். அக்குழந்தை பிறக்கும் போது 750 கிராம் எடை மட்டுமே இருந்தது. அந்தக் குழந்தைக்கு பார்வை இல்லாததும், அதனால் நடக்க இயலாததும் பிறகு தெரியவந்தது. அதனை பல மருத்துவர்களிடம் கொண்டு சென்று சிகிச்சை செய்தனர். ஆனால் எந்த நவீன மருத்துவமும் பயனளிக்கவில்லை. ஒரே ஒரு வழிதான் இருந்தது. இறைவனிடம் பிரார்த்தனை செய்வதே. 1993
ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரார்த்தனை செய்வதற்காக ரவி மாஸ்டர் விளக்கை ஏற்ற எத்தனித்தபோது, மின்னலைப் போன்றதொரு ஒரு ஒளி மேலிருந்து அவருடைய உடம்பிற்குள் இடியைப் போல் இறங்கியது. தான் ஏற்றுவதற்காக இருந்த விளக்கு அந்த ஒளியினால் ஏற்றப்பட்டிருந்ததைக் கண்ட ரவி மாஸ்டர் ஆச்சரியமடைந்தார். அப்பொழுது அவருடைய காதில் ஒரு மென்மையான குரல் ஒலித்தது. அச்சப்படவோ, குழப்பமடையவோ வேண்டாம் என்று கூறியது. நானே பிரம்மம். உயிர் சக்தியும், இந்தப் பிரபஞ்சபத்தை உருவாக்கியவனகும் ஆகும். நான் உன்னுள் நுழைந்திருக்கிறேன். உன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் நோய்களில் இருந்து விடுபட்டு வாழ்க்கையில் அமைதி பெறுவார்கள். உனது மகனைப் பற்றி நீ கவலைப்படாதே. அவனுக்கு பார்வையும், நடையும் நான்கு நாட்களில் கிட்டும் என்று அக்குரல் மேலும் கூறியது. முதலில் இதனை ஒரு கனவாகத்தான் ரவி மாஸ்டர் நினைத்துள்ளார். ஆனால், அக்குரல் கூறியபடியே 4வது நாள் தன் கண் முன்னே தனது மகன் நடப்பதைக் கண்டு பிரம்மன் தன்னுள் இறங்கியிருப்பதை அறிந்தார். அதன் பிறகு அவருடைய மகனுக்கு கண் பார்வையும் கிடைத்தது. அந்த நாள் முதல் பிரம்ம ஒளியால் ஏற்றப்பட்ட அந்த விளக்கில் இருந்து கிட்டும் வழிகாட்டுதலின் படியே ரவி மாஸ்டர் எல்லாவற்றையும் செய்து வருகிறார்.
அதற்குப் பிறகு நோய் எனும் எதிர் இயக்கத்திடம் இருந்து மக்களைக் காப்பாற்றும் பணியில் ஈடுபடத் துவங்கினார். புற்று நோய், சொரி, கடுமையான முதுகு வலி, தலை வலி போன்ற நவீன மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத நோய்களை ரவி மாஸ்டர் குணப்படுத்துகிறார். ஒரு மானுடத்திற்கு செய்யும் சேவையாகவே செய்கிறார். இதற்காக அவர் காசு, பணம் பெறுவதில்லை. 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பிரம்ம சக்தி எனும் இவருடைய மருத்துவத்தால் பலன் பெற்றுள்ளனர்.
பிரம்ம தீர்த்தம்!
தெய்வீக மருத்துவம் எனும் பிரம்ம தீர்த்தத்தை ஒவ்வொரு ஆண்டும் ரவி மாஸ்டர் வழங்குகிறார். சுயம்பு தீபம் என்றழைக்கப்படும் அவ்விடத்தில் இருந்து என்றைக்கு அதனை வழங்க வேண்டும் என்ற கட்டளை கிட்டியபின் பக்தர்களுக்கு அது குறித்து அறிவிக்கிறார். அந்த குறிப்பிட்ட நாளில் நவ கிரக சக்திகள் என்றழைக்கப்படும் 9 கிரகங்களின் ஆற்றல்களும் பிரம்ம குருவான ரவி மாஸ்டரின் உடலில் பாய்கின்றது. அதனை தன் முன் வைக்கப்பட்டுள்ள பெரிய பாத்திரத்தில் உள்ள நீரில் செலுத்துகிறார். அப்பொழுது அந்த பாத்திரத்தில் உள்ள நீரில் அதிர்வுகள் இறங்குவதால் அலைகள் போல தண்ணீர் எம்பி அமிழ்கிறது. பிரம்ம தீர்த்தத்தை அங்குள்ள அனைவருக்கும் வழங்குகிறார். பிரம்ம தீர்த்தத்தை அருந்துவோரின் ஜீவன் தூய்மையடைந்து அவர்கள் முழுமையான மனிதர்களாகின்றனர். நோய்களில் இருந்தும் விடுதலை பெறுகின்றனர். சிலர் மரணமடையும் போது அவர்களுடைய ஜீவன் நரகத்தின் எதிர் சக்தி பிடித்துக் கொள்ளும் என்றும், மற்றவை சந்திர மண்டலம் என்றழைக்கப்படும் மோட்சத்திற்கு சென்றுவிடும் என்றும் கூறும் பிரம்ம குரு ரவி மாஸ்டர் இந்த பிரம்ம தீர்த்தத்தை அருந்துவோர் மரணமடையும் போது அவர்களுடைய ஜீவன் எந்த எதிர்சக்தி பிடியிலும் சிக்காமலிருக்க அவருடைய உறவினர்கள் எந்தவிதமான கிரியையோ அல்லது பூஜையையோ செய்யத் தேவையில்லை என்றும், அவர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்றும் கூறுகிறார்.
நோய்களை குணப்படுத்தும் இவருடைய திறனிற்கு பல அத்தாட்சிகள் உள்ளன. ஆனால், இதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்று நவீன விஞ்ஞானம் கூறுகிறது. இப்படிப்பட்ட சிகிச்சை முறைகளை நவீன விஞ்ஞானத்தால் இன்னதென்று கூறமுடியவில்லை என்பதே மிகப் பெரிய முரண்பாடாகும்.
சிலர் இச்சிகிச்சையை மாற்று மருத்துவம் என்று கூறுகின்றனர். இப்படி விரலால் தொடுவதாலும், தீர்த்தத்தை அருந்துவதாலும் நோய்களை குணப்படுத்த முடியும் என்று நம்புகிறீர்களா? உங்கள் கருத்தென்ன எங்களுக்கு எழுதுங்கள்.