தொலைபேசியில் பேசியே பாம்புக் கடி விஷத்தை முறிக்கும் சிகிச்சை அளிக்கிறார் ஒருவர் என்றால் நம்ப முடிகிறதா?மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த அதிசயத்தை நிகழ்த்துவதாக கூறும் ஒரு நபரை நாம் சந்திக்கப் போகிறோம். சிரிக்கவேண்டாம்... இது ஒரு உண்மைச் சம்பவம்... நாங்கள் கேள்விப்பட்ட இந்த செய்தி உண்மையா என்பதை அறிய, இந்தோர் நகரிலுள்ள ராம்பாக் காலனியை நோக்கி எங்கள் பயணம் துவங்கியது. அந்த நபர் இருக்கும் இடத்தை அடைந்தோம். அந்த பகுதியின் காவல் நிலையத்தில் அந்த நபர் பணியாற்றுவதாக கேள்விப்பட்டு அங்கு சென்றோம். அவர் ஒரு ஹெட் கான்ஸ்டபிள் என்பதும், அவர்தான் பாம்புக் கடிக்கு தொலைபேசி மருத்ததுவர் என்பதும் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.இந்த அதிசய மனிதர் பெயர் யஷ்வந் பகவத். பாம்புக் கடிக்கு தொலைபேசி வாயிலாகவே மருத்துவம் செய்யும் முறையை விளக்கினார். அதாவது தொலைபேசியில் இது போன்று பாம்புக்கடி அழைப்புகள் வந்தால் ஒரு சமஸ்கிருத மந்திரத்தை முணுமுணுப்பாராம்... அது பாம்புக் கடிக்கென்றே உள்ள சமஸ்கிருத ஸ்லோகமாம்.
எங்களோடு பேசிக்கொண்டிருக்கும்போதே அவர் மேசையில் இருந்த தொலைபேசி மணி ஒலித்தது. அது ஒரு பாம்புக்கடி அழைப்புதான். யஷ்வந்த் பகவத் சிகிச்சை செய்வதைக் கண்கூடாக பார்த்தோம். யஷ்வந்த் கூறுகிறார் "முதலில் பாம்பு கடித்தவரின் பெயரையும், அவரது தாயார் பெயரை கேட்பேன்... பிறகு அந்த ஸ்லோகத்தை போனில் கூறுவேன், விஷம் முறிந்துவிட்டது என்று நோயாளி உணர்ந்த பின்... தேங்காய் ஒன்றை சிதறுகாய் உடைக்கச் சொல்வேன், பிறகு சிறிது உப்பை எடுத்து நாக்கில் தடவச் சொல்வேன். அப்போது உப்பின் கரிப்பை அவர் உணர்ந்தால் விஷம் முறிந்துவிட்டது என்று அர்த்தம் என்று யஷ்வந்த் கூறியபோது நம்மால் பிரமிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதற்குப் பிறகும் சந்தேகம் தீராத நாங்கள், சர்மான் கோயல் என்பவரை இது பற்றிக் கேட்டோம் "ஒரு நாள் நான் என் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது பாம்பு ஒன்று என் இரண்டு கால்களையும் கடித்ததுவிட்டது. உடனே பகவத்ஜியை தொடர்பு கொண்டேன். இன்று நான் உயிருடன் இருப்பதே பகவத்ஜியால்தான்" என்றார்.ஆனால் இந்த சிகிச்சைக்கு ஒரு ரூபாய் கூட காசு வாங்குவதில்லையாம் பகவத். எல்லாம் அந்த சாய்பாபாவின் அருள் என்றே கருதுகிறாராம்.நிறையபேர் இதுபோன்ற தொலைபேசி சிகிச்சையை அவரிடம் பெற்றுள்ளனராம். நாக பஞ்சமி தினத்தன்று ரத்தப் போக்கு, மூலம், மஞ்சள் காமாலை ஆகியவற்றையும் இவர் குணப்படுத்துகிறாராம். ஆயினும் பாம்புக் கடி பகவத்ஜி என்றால்தான் இங்கு அவரை அடையாளம் காட்டுகின்றனர்.
இது சாத்தியம்தானா என்பதை மகாராஜா யஷ்வந்த் மருத்துவமனை தலைமை மருத்துவர் அஷோக் வாஜ்பாயை தொடர்பு கொண்டோம். எடுத்த எடுப்பிலேயே மறுத்த அவர், “இந்தியாவில் 70 சதவீத பாம்புகள் விஷம் இல்லாத பாம்புகளே என்றும், பொதுவாக பாம்புக்கடி ஏற்பட்டவுடன் பயத்தினாலேயே பலர் மரணமடைகின்றனர். விஷமுள்ள பாம்பு கடித்தால் இந்த சிகிச்சை பலனளிக்கும் என்று கூற முடியாது” என்றார்.
இதைப் பற்றி உண்மையை அறிய வேண்டுமா? 0731-2535534 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு நீங்களே ஒரு முடிவுக்கு வாருங்கள்.
எப்படி இந்த சிகிச்சை துவங்கியது?
தனது சிறு வயதில், தன் தாயிடமிருந்து மூலிகைகளின் பயன்களை அறிந்ததாகவும், நூர் கான் சாஹப் என்ற மாந்திரிகரிடமிருந்துதான் இந்த மந்திரங்களைக் கற்றதாகவும், கடந்த 25 ஆண்டுகளாக இன்னமும் இதனை தான் நம்பிக்கையுடன் செய்து வருவதாகவும் யஷ்வந்த் பகவத் தெரிவித்தார்