"
ஹுஸைன் தேக்ரி" என்ற மாய மந்திர பள்ளத்தாக்கு பற்றி நம்மில் எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறோம் என்பது தெரியாது. ஆனால் இங்கு உள்ள ஒரு சாக்கடை நீரில் குளித்தால் உங்களை பிடித்திருக்கும் பேய்களும், ஆவிகளும் தலை தெறிக்க ஓடுகிறதாம், இது அப்பகுதி மக்களின் நம்பிக்கை, இதோ நம் ரத்தத்தை உறைய வைக்கும் ஒரு நிகழ்வு!அந்த இடத்திற்கு நாங்கள் காலையில் சென்றோம். நுழைவாயிலில் இரண்டு பெண்கள் ஒரு அசாதாரணமான நிலையில் இருந்ததைக் கண்டோம், ஜமுனா பாய், கௌசர் பி என்ற அந்த இரண்டு பெண்கள் எங்களைப் பார்த்து ஏதோ கூச்சலிட்டபடி இருந்தார்கள்.
ஜமுனா பாயின் கணவர் நம்மிடம் கூறும்போது, "சில நாட்களாவே ஜமுனாவின் நடத்தை விசித்திரமாக இருக்கிறது. பைத்தியம் மாதிரி பேச்சு, நடப்பு எல்லாம், இதனால் ஒரு பூசாரியை கேட்டேன். அவர் இந்த இடத்தைக் கூறினார், ஏனெனில் அவளை ஆவி பீடித்திருக்கிறதாம்" என்றார்.
இரண்டு வாரமா இங்குதான் இருக்கின்றோம், வந்ததிலிருந்து இப்படித்தான் கத்திக்கிட்டே இருக்கா, ஆனா இந்த சிகிச்சைக்கு பிறகு குணமாயிடும் என்று நம்புவதாகக் கூறினார்.
அதன் பிறகு நாம் ஹஸ்ரத் இமாமின் ரோஜா (கல்லறை அமைந்துள்ள இடம்) என்ற இஸ்லாமியர்களின் புனித இடத்திற்கு சென்றோம். அங்கு நுழைந்ததுமே நமக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அங்கு சங்கிலிகளால் கட்டப்பட்ட நிலையில் ஆண்களும் பெண்களும் கூச்சலும் அழுகையுமாக இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தோம். அந்தச் சூழலே ஒட்டு மொத்தமாக ஈரல் குலையை நடுங்க வைப்பதாய் இருந்தது.இது என்ன என்று இமாம் தைமுரியிடம் வினவினோம். இது போன்று பேய், ஆவி பிடித்தவர்கள் இங்கு குளிப்பார்கள். அதன்பிறகு சங்கிலியின் ஒரு முடிச்சு வலையிலும், அடுத்த முடிச்சு சம்பத்தப்பட்ட நபரின் கழுத்திலும் இடப்படும். இந்த சங்கிலி பிணைப்பிற்குப் பிறகு அந்த நபர் பேயின் ஆதிக்கத்திற்குள் வருவதாக நம்பப்படுகிறது. அதன் பிறகு இங்குள்ள ஒரு குளத்தில் குளிக்க வைக்கப்படுவார்கள் என்றார்.
அந்தக் குளத்திலிருந்த நீர் நமக்கு அதிர்ச்சி அளித்தது. நகரத்தின் ஒட்டுமொத்த கழிவு நீரும் குழாய் வழியாக கொட்டும் அந்த இடம்தான் இந்த சிகிச்சை அளிக்கும் குளமாம்.சகினா என்ற சிறுமியை சந்தித்தோம். தன் தாயாரை ஆவி பிடித்திருக்கிறது என்றும், அது தன்னையும் பிடித்துவிடக்கூடாது என்பதற்காக இங்கு வந்து குளிப்பதாகவும் அவள் கூறியபோது வியப்பாக இருந்தது.
மற்றொரு பூசாரியான நவாப் சர்வரிடம், சாக்கடை நீரில் குளித்தால் வியாதிகள் வராதா? குணப்படுத்துகிறது என்று எப்படி நம்பப்படுகிறது என்றோம். அதற்கு அவர், இந்த சாக்கடை குளியல் ஆரோக்கியமானவர்களை ஒன்றும் செய்யாது, சில கெட்ட ஆன்மாக்களே இதனால் பாதிப்படையும் என்றார்.
எப்படி இந்த நம்பிக்கை துவங்கியது?நவாப் இஸ்மாயில் அலி கான் மற்றும் ஜாவ்ரா நவாப் காலத்தில் தசரா பண்டிகையும் மொகரம் பண்டிகையும் ஒரே நாளில் வந்த போது நவாப் தசராவில் பங்கேற்க முடிவு செய்தது முஸ்லிம்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது.
இதனால் முகரத்திற்கு முஸ்லிம்கள் கூடவில்லை. முகரத்திற்கு அடுத்த நாள் ஒரு பெண் கண்டெடுத்த வைரம் நவாபிடம் இந்த இடத்தில் சில ஆன்மாக்கள் அவதியுறுகின்றன என்று கூறியதாம். இதனால் தன் தவறை நவாப் உணர்ந்து துக்கத்திற்காக அனைவரையும் கூடுமாறு செய்தாராம். அன்று முதல் இந்த இடம் பல்வேறு பிரச்சனைகளால் வாடுபவர்களுக்கு குணமளிப்பதாக நம்பப்படுகிறது.