12ல் கேது இருந்தால் மறுபிறவி இல்லை எனக் கூறுவது பற்றி?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:
வாசகர் கேள்வி: ஒருவரின் ஜாதகத்தில் 12ல் கேது இருந்தால் மறுபிறவி இல்லை எனக் கூறுகிறார்கள். இந்த ஜென்மத்தில் ஒருவருக்கு 12ல் கேது இருந்து அவர் ஏதாவது பாவச் செயல் செய்தாலும் மறுபிறவி ஏற்படாதா?
பதில்: பொதுவாக 12ல் கேது இருந்தால் மறுபிறவி இல்லை எனக் கூறக் கூடாது. ஒருவரது ஜாதகத்தில் 12ல் கேது இருந்து, 12ஆம் வீட்டிற்கு உரிய கிரகம் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். ஜாதகத்தைப் பொறுத்தவரை 12வது இடம் மோட்ச ஸ்தானமாக கொள்ளப்படுகிறது.
பொதுவாக கேதுவை ஞான கிரகம் என்று கூறுவர். போகத்திற்கு உரியவன் ராகு, மோட்சத்திற்கு உரியவன் கேது என்ற கூற்றும் உண்டு. அதனால் பிறவா நிலையை அடைய வேண்டும் என்பது சாதாரண விடயமல்ல.
மனிதன் மேட்சம் பெற வேண்டுமானால் லக்னத்தில் சுபகிரகங்கள் இருக்க வேண்டும் அல்லது லக்னத்தை சுப கிரகங்கள் பார்க்க வேண்டும். அடுத்ததாக, 12ம் இடத்தில் கேது அமர்ந்து, 12க்கு உரிய கிரகம் நல்ல நிலையில் (பாவ கிரகங்கள் சேர்க்கை பெறாமல்) இருக்க வேண்டும். குறிப்பாக சனியின் சேர்க்கை, சனியின் பார்வை இல்லாமல் இருக்க வேண்டும்.
ஒருவர் ஜாதகத்தில் 12ல் கேது இருந்தாலும், அந்தப் 12ம் இடத்தை சனி பார்த்து விட்டால் உடனடியாக மறுபிறவி உண்டு என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அதனால் 12ல் கேது இருந்து விட்டால் மறுபிறவி கிடையாது எனக் கூறி விட முடியாது.
லக்னத்தையோ அல்லது லக்னாதிபதியையோ குரு பார்த்திட, 12ல் கேது அமர்ந்து, 12க்கு உரிய கிரகமும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே அவர்கள் பிறவா நிலையை அடைவர். அப்படிப்பட்ட ஜாதக அமைப்பை உடையவர்கள் தங்களது கடைசிப் பிறவியில் ஒரு பாவமும் செய்யமாட்டார்கள் என்பது திண்ணம்.