Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒவ்வொரு ராசியும் அதற்கான ஜோதிட பண்புகளும்

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்-

Advertiesment
ஒவ்வொரு ராசியும் அதற்கான ஜோதிட பண்புகளும்
, திங்கள், 3 நவம்பர் 2008 (09:51 IST)
மேஷம்: இந்த ராசிக்காரர்களில் சிலர் உடனடியாக செயல்படக் கூடியவர்களாகத் திகழ்வர். ஆனால் அதே ராசிக்காரர்களில் வேறு சிலர் தாமதமாக செயல்படக் கூடியவர்களாக இருப்பர். இவர்கள் சராசரி உயரம் உடையவர்கள். ஆனால் இதில் சற்று குறைவான உயரத்துடன் (குள்ளமாக) காணப்படுபவர்களிடம் ராஜதந்திரம் இருக்கும்.

இவர்கள் எதிரியை உடனடியாக தாக்க மாட்டார்கள். நிதானமாக யோசித்து செயல்படுவர். இதற்கு மேஷராசியின் சின்னமான ஆட்டை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆடு தாக்குதலுக்கு தயாராவதற்கு முன்பாக பின்னோக்கிச் சென்று, அதிரடியாக ஓடி வந்து தாக்கும். அதுபோல்தான் இவர்களின் இயல்பும் இருக்கும்.

மேஷ ராசிக்காரர்கள் பலரைப் பார்த்த அனுபவத்தில் கூறுகிறேன், ஒரு விஷயத்தில் தோல்வி அடைந்தால் அதனை அப்போதே மறந்துவிட மாட்டார்கள். 6 அல்லது 8 மாத காலம் தீவிரமாக சிந்தித்து செயல்பட்டு, மீண்டும் அதே செயலில் இறங்கி வெற்றி பெறுவார்கள்.

ரிஷபம்: நல்ல விஷயமோ, கெட்ட விஷயமோ அதனை உடனடியாக முடிக்க வேண்டும் என்றுதான் இந்த ராசிக்காரர்கள் விரும்புவர். தவறு செய்ய யோசிக்கும் குணமுடைய இவர்கள், பழைய சம்பவங்களை மீண்டும் நினைவில் நிறுத்தி யோசிப்பர்.

இவர்களில் ஒருசிலர் தங்களது செயலுக்காக வருந்தவும் செய்வர். உதாரணமாக அந்த நேரத்தில் நாம் அவரை எதிர்த்துப் பேசியிருக்கக் கூடாது அல்லது அவரை அடித்திருக்கக் கூடாது என்று தமது செயலை நினைத்து வருந்துவர். நேரில் பார்த்தால் அவரிடம் மன்னிப்புக் கேட்டு விடலாம் என முடிவு செய்வர். ஆனால் அந்த நபரை நேரில் பார்த்தால் மன்னிப்புக் கேட்க மாட்டார்கள்.

ஏனென்றால் அந்த சந்திப்பின் போது, “நீ ஒன்றைக் கூறினாய், நான் ஒன்றைக் கூறினேன். எனவே தவறுக்கு தவறு சரியாகி விட்டத” என்று விட்டுக் கொடுக்காமல் பேசுவர்.

மிதுனம்/கன்னி: இந்த 2 ராசிகளும் புதனுக்கு உரியவை. இந்த ராசிக்காரர்களில் பெரும்பாலானவர்கள் சாத்வீகத்தன்மை உடையவர்களாக இருப்பர். எது நடந்தாலும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று விட்டுவிடுவர்.

ஒரு திருடன் இவர்களின் பர்சை திருடிச் சென்றாலும், அவனை துரத்திச் சென்று, “அதில் நூறு ரூபாய்தான் இருக்கிறது. உனக்கு போதவில்லை என்றால் இந்தா இதை வைத்துக்கொள” என்று மேலும் ஒரு நூறு ரூபாயை கொடுத்துவிட்டு வருபவர்கள் இந்த ராசிக்காரர்கள்.

அதேவேளையில், தங்களது உரிமைகளை இந்த ராசிக்காரர்கள் எளிதில் விட்டுத்தர மாட்டார்கள். ஆனால் விட்டுத்தர வேண்டும் என்ற நிலை வரும் போது இவர்களே விட்டுக் கொடுப்பர்.

கடக ராசி: இந்த ராசிக்காரர்களைப் பற்றி கூற வேண்டுமானால் “நண்டுக்கு இடம் கொடேல” என்ற பழமொழியைக் கூறலாம். திண்ணையில் இடம் கொடுத்தால் இவர்கள் மடத்தைப் பிடித்து விடுவார்கள்.

பத்து காசை வைத்துக் கொண்டு 10 ரூபாய் மதிப்புள்ள பொருளுக்கு விலை பேசுவர். தன்னம்பிக்கை, திறமை இவர்களிடம் அபரிமிதமாக இருக்கும். தன்னால் முடியாதது எதுவும் இல்லை என்று நிச்சயமாக நம்புபவர்களும் இவர்களே.

கடக ராசிக்குள் புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரங்கள் வருகின்றன. இதில் ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் கொஞ்சம் அப்பாவியாக காணப்படுவர்.

சிம்ம ராசி: இவர்கள் யாரையுமே தொடர்ந்து நண்பர்களாக வைத்துக் கொள்ள மாட்டார்கள். காரியம் முடிந்தவுடன் நட்பில் இருந்து ஒதுங்கி விடுவர். பால்ய சினேகம் இவர்களுக்கு ஒத்துவராது என்றாலும் இவர்களில் பூரம் நட்சத்திரக்காரர்கள் விதிவிலக்காக திகழ்வர். பூரம் நட்சத்திரம் உடையவர்கள் நட்புக்கு மதிப்பளிப்பர்.

பொதுவாக சிம்ம ராசிக்காரர்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்றால் நட்பு வைத்துக் கொள்ள அல்லது அதனைத் தொடர விரும்பினாலும், நம்பிக்கைக்குரிய நண்பர்கள் கிடைப்பதில்லையே என்று புலம்புவர்.

துலாம் ராசி: இவர்கள் அனைத்து விஷயங்களிலும் சமநிலை உடையவர்களாகத் திகழ்வர். தனது தரப்பில் தவறுகள் இருந்தாலும் ஒப்புக்கொள்வர். தவறு செய்தாலும் நடுநிலை தவற மாட்டார்கள்.

விருச்சிக ராசி: இவர்கள் அதிரடியாக செயல்படக் கூடியவர்கள். அனுஷம், கேட்டை, விசாகம் ஆகிய 3 நட்சத்திரங்கள் விருச்சிக ராசிக்குள் வருகின்றன. இதில் அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களை புரிந்து கொள்ளவே முடியாது. ஆழமான சிந்தனை உடையவர்கள்.

ஒருவிஷயத்திற்கு உடனடியாக கருத்து தெரிவிக்க மாட்டார்கள். ஆனால் அவர்களது உள்மனம் அதுகுறித்து ஏகப்பட்ட சூட்சுமங்களை, அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து கொண்டிருக்கும். ஆனால் அது அவர்களது முகத்தில் பிரதிபலிக்காது. தலைமைப் பதவிக்கு உகந்தவர்கள்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சூழ்நிலைகளின் ஆளுமைக்கு உட்பட்டவர்கள். உதாரணமாக சோகமான நிகழ்ச்சி ஏற்பட்டால் உடனடியாக கண்ணீர் விட்டுக் கதறுவர். அதேவேளை மகிழ்ச்சிகரமான சூழல் ஏற்பட்டால் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.

தனுசு ராசி: “வில்லாளனை சொல்லால் வளைத்துவிட” என்பதற்கு ஏற்றது போல புகழ்ந்து பேசினால் இந்த ராசிக்காரர்கள் திருப்தியடைந்து விடுவர்.

மகர ராசி: “மகரத்தார் நகரத்தை ஆழ்வார” என்று கூறுவர். இவர்களில் பெரும்பாலானவர்கள் நேரடியாக தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் தன்மை உடையவர்கள். அதிலும் அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் “வெட்டு ஒன்று துண்டு இரண்ட” என்று 100 சதவீதம் தீர்க்கமாகப் பேசுவர்.
என்றாலும் திருவோணம் நட்சத்திரதாரர்கள் ராஜ தந்திரத்துடன், சூழலுக்கு ஏற்றவாறு செயல்படுவர்.

உதாரணமாக, ஒரு உணவகத்திற்கு செல்லும் மகர ராசிக்காரர், இந்த வகை உணவுதான் வேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்து விடுவார். ஆனால் திருவோணம் நட்சத்திரக்காரர் இந்த வகை உணவு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறுவர்.

கும்ப ராசி: “கும்பத்தானுடன் கூடாத” என்று சில ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதற்காக அவர்கள் தீயவர்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது. அவர்களிடம் ஆக்கும் சக்தி, அழிக்கும் சக்தி இரண்டுமே உண்டு. எனினும் உணர்ச்சிவசப்படும் தன்மை உடையவர்கள் என்பதால் அதுபோல் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எந்த நேரம் ஆக்குவார்கள், எப்போது அழிப்பார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. ஒருவரை மனதிற்குப் பிடித்துவிட்டால் அவர்களுக்கு அள்ளிக் கொடுப்பார்கள். அதேசமயம் பிடிக்காவிட்டால் அவர்களது நிழல் கூட தங்கள் மீது படாதது போல் ஒதுங்கி விடுவர்.

இவர்களில் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் அப்பாவியாக இருப்பர். அதிகம் படிப்பாளிகளும் இவர்களே. மேற்படிப்பில் நான்கைந்து பட்டங்கள் பெறும் திறன் இவர்களுக்கு உண்டு. ஆனாலும் நிறைய விட்டுக்கொடுப்பர். எனினும் இதில் அவிட்டம், சதயம் நட்சத்திரக்காரர்கள் உடனடியாக களத்தில் இறங்கி செயல்புரிபவர்களாக காணப்படுவர்.

மீனம்: இந்த ராசிக்காரர்களுக்கு சிறந்த அறிவுக்கூர்மை இருக்கும். பெரியவர்களில் சிலர் ஒருவரைப் பற்றி “அவன் ஒரு இடத்தில் தலையைக் காட்டினால், மற்றொரு இடத்தில் வாலைக் காட்டுவான” என்று கூறினால் அவர்கள் பெரும்பாலும் மீன ராசிக்காரர்களாகவே இருப்பர்.

இவர்களில் நிறைய பேர், 2 மோசமான சிக்கல்களுக்கு நடுவில் சிக்கிக் கொண்டு, அவற்றை லாவகமாக கையாண்டு வருவதையும் எனது அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். உதாரணமாக ஆளுங்கட்சித் தலைவருடனும் நட்பு வைத்துக் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவருடனும் யதார்த்தமாகப் பேசிக் கொண்டு இருப்பவர்கள் இருக்கிறார்கள். எனவே மீன ராசிக்காரர்களுக்கு பல விஷயங்களில் துலா ராசிக்குரிய குணங்கள் (நடுநிலையாக இருப்பது) காணப்படும்.

மேலும் இவர்களுக்கு கற்பனை வளம் அதிகம் இருக்கும். பலருக்கும் மதியூகம் மிக்க யோசனையை இவர்கள் வழங்கினாலும், தனக்கென ஒரு சிக்கல் வரும் போது பிறரிடம் யோசனை கேட்பர். எனினும் இறுதியில் தமது முடிவே சிறந்ததாக இருக்கும் என்று முடிவுக்கு வருவர்.

Share this Story:

Follow Webdunia tamil