தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்
சைவ சமயத்தில் அறிவுச்சுரங்கமாக கருதப்படுபவர் தட்சிணாமூர்த்தி. இவர் ஞானத்தின் வெளிப்பாடாக கருதப்படும் அவதாரம். சரஸ்வதிக்கு அடுத்தபடியாக ஓலைச் சுவடியுடன் காட்சி தருபவரும் இவரே.
தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் அலைபாயும் மனது கட்டுக்குள் வரும். தன்னை வழிபடுபவரின் சிந்தனையை அஞ்ஞானத்தில் இருந்து ஞானத்திற்கு வழிநடத்திச் செல்லும் வலிமை இவருக்கு உண்டு.
வாழ்வில் எது நிலைக்கும், எது நிலைக்காதது என்பதை உணர்த்தக் கூடியவர். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தவறான பாதைக்கு செல்பவர்கள் இவரை வழிபட்டால் ஒழுக்கமான நல்வாழ்வைப் பெறலாம். இவரை வழிபடத் துவங்கினால் வாழ்வில் அமைதி ஏற்படும்.
குரு பகவானுக்கு உகந்த தினமான வியாழக்கிழமை, குருவுக்கான நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் மற்றும் நாள்தோறும் வரும் குரு ஓரையிலும் (ஒரு நாளில் அந்த ஒரு மணி நேரம்) தட்சிணாமூர்த்தியை வழிபட உகந்த காலங்களாகும்.
இவரை வழிபடுவதன் மூலம் சந்தான பாக்கியம் பெறலாம். குழந்தைகளின் படிப்பிலும், அறிவுக்கூர்மையிலும் நல்ல முன்னேற்றம் தெரியும்.
கொண்டைக்கடலையை மாலையாக அணிவித்தும், வெள்ளை நிற மலர்களான முல்லை, மல்லிகை மலர்களால் வழிபடுவதன் மூலம் சிறப்பான பலன்களை அறியலாம்.
காளஹஸ்தி போன்ற பிரபல கோயில்களில் தட்சிணாமூர்த்தியை இறுதியாக வழிபடுவது ஏன்?
தட்சிணாமூர்த்தி சிவனுடைய ஒரு அவதாரம். மூலவரை சேவித்த பின்னரே அவரது மறுவடிவமான அவதாரங்களை வழிபட வேண்டும்.
பணம், புகழ், செல்வாக்கு போன்ற அனைத்தையும் வழங்கக் கூடியவர் சிவன். இவரது அவதாரமான தட்சிணாமூர்த்தி ஞானம், அறிவுச் செல்வத்தை அளிப்பவர்.
பணம், புகழ் என அனைத்தையும் பெறுபவர்கள் அதனை முறையாக பராமரிக்க முடியாமல் இழப்பதும் உண்டு. அதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்க, ஞானத்தை வழங்கும் தட்சிணாமூர்த்தி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
இதன் காரணமாகவே மூலவரை (சிவன்) வழிபட்ட பின்னர் அவரது அவதாரங்களை வழங்க வேண்டும் என்ற வகையில் பிரபல கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.