புரட்டாசி வெயிலில் புல் பூண்டும் கருகும்!
ஜோதிட ஆய்வாளர் கலிய. இரவிச்சந்திரன்
“சித்திரைக்கும் உக்கிரம் புனிதப் புரட்டாசி” என்று சித்திரை மாதத்திற்கு இணையாக புரட்டாசி மாதத்தில் வெயிலின் கொடுமை அதிகமாகயிருக்கும் என்று கூறுகிறார் ஜோதிட ஆய்வாளர் கலிய. இரவிச்சந்திரன்.
“ஐப்பசியில் அடை மழை” என்பதை கேள்விப் பட்டுள்ள நமக்கு, அதற்கு முந்தய மாதமான புரட்டாசியில் வெப்பம் தகிப்பதேன் என்பது புரியாத புதிராகத்தான் இருந்தது. அது ஏன் என்று விளக்குகிறார் இரவிச்சந்திரன்.
சிவபெருமானின் காரகத்துவம் பொருந்திய சூரியன் இராசி மண்டலத்தில் மகர சங்கராந்தி தை 1 ஆம் தேதி உத்ராயணப் பிரவேசத்தை உத்திராட நட்சத்திரம் 2 ஆம் பாதத்தில் தொடங்கி (அதாவது பூமத்திய ரேகையிலிருந்து மகர ரேகைக்கு பயணம்) முறையே மகரம், கும்பம், மீனம் வழியாக சென்று மேஷ ராசியில் நிலைகொண்டு திரும்பும் காலம் (சித்திரை மாதம்) உக்கிர காலமாக இருக்கும்.
மகர ரேகையிலிருந்து ராசி மண்டலத்தின் ஆரம்பமான மேஷ ராசி 0 டிகிரி பாகையிலிருந்து மீண்டும் கடக ரேகை நோக்கி தட்சினாயண பயணத்தை தொடங்கும் காலம் இது. மேஷம் சூரியனுக்கு உச்ச வீடு ஆதலால் சூரியன் (கதிர் வீச்சு) பூமியை நோக்கும் பார்வை கொடிதாகவேயிருக்கும். இதில் மேஷத்திற்கும், ரிஷபத்திற்கும் இடைப்பட்ட பகுதி பரணி, கிருத்திகை நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்யும் 21 நாட்கள் (அக்னி நட்சத்திரம்) மிகவும் உஷ்ணமாகயிருக்கும்.
பின்பு ரிஷபம், மிதுனம் வழியாக பயணித்து (பூமத்திய ரேகை) கடக ராசி புனர்பூசம் 4 ஆம் பாதம் (ஆடி மாதம் முதல் தேதி) வழியாக ஆவனி 1 முதல் 31 வரை சிம்மத்தில் சஞ்சரிக்கும். இது சூரியனுக்கு சொந்த வீடு. இந்த சமயமும் ஓரளவு வெப்பமிருக்கும். பின்பு புரட்டாசி மாதம் 1 முதல் கன்னியில் சஞ்சாரத்தை தொடங்கும். இந்த சமயம் சூரியனுடன் மகா விஷ்ணுவின் காரகத்துவம் வாய்ந்த புதனும் சூரியனுடன் சேர்ந்தே சஞ்சரிக்கும்.
புதனுக்கு கன்னி உச்ச வீடு. புதன் சூரியனுடன் சேரும் போது சூரியனுடைய குணத்தையே பிரதிபலிப்பார். இந்தக் காலத்தில் பாரதத்தின் தென் பகுதியில் மகர ரேகை உள்ளதால் சூரியனும், புதனும் நேர் உச்சியில் காட்சி தரும் மாதம் புரட்டாசி. எனவே இந்த மாதத்தில் வெப்பம் மிகுதியாக காணப்படும். "புரட்டாசி மாதத்து வெயிலில் புல் பூண்டும் காய்ந்துவிடும்" என்பது பழமொழி. உத்ராயண காலத்தில் பூமியை பெரும் பகுதி நேர் பார்வையாக பார்ப்பதால் உஷ்ணமும், வறட்சியும் அதிகமாக இருக்கும்.
தட்சினாயண காலத்தில் நீர் பரப்பை அதிகபட்சம் நேர் பார்வையாக பார்ப்பதால் உஷ்ணமும், காற்றில் ஈரப்பதம் கலந்த உஷ்ண ஆவி காணப்படும். எனவே, சித்திரை அக்னியைவிட வெப்பம் மிகுதியாக காணப்படும். காக்கும், அழிக்கும் கடவுள்களான திருமாலும், சிவனும் இவர்கள் காரகத்துவம் வாய்ந்த சூரியனும், புதனும் தட்சனாயணமாக பிரவேசிக்கும் கன்னி பிரவேசத்தில் புதன் முழு பலம் பெற்று கிரகமாவார்.
திருப்பார் கடலில் பள்ளி கொண்டிருக்கும் தென்கலைத் தெய்வமான திருமாலுக்கு இது உகந்த காலம். இந்த மாதத்தில் சனி வரத்தில் விரதம் மேற்கொண்டு தென்கலைக் கடவுள் திருப்பதியில் குடிகொண்டிருக்கும் திருவேங்கட பெருமாளுக்கு துளசி மாலை சாற்றித் துளசி தீர்த்தத்துடன் தளுவையிட்டு தூபதீப ஆராதனையுடன் வழிபட்டு பூமிகாரகனான புதனின் அருளையும், பிதுர் காரகனான சூரியனின் அருளையும் ஒரு சேர பெறலாம் என்பதே ஐதீகம்.
இந்த மாதத்தில் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும். ஆதலால் அசைவ உணவை தவிர்ப்பது, உயிர் பலியிடாத நோன்பு நல்ல ஐஸ்வர்யத்தை கொடுக்கும். ராசி மண்டலத்தில் மோட்சஸ்தானமான (வியம்) 12ல் இருக்கும் கிரக சேர்க்கையே ஒருவர் ஜாதகத்தில் அனுஜன்ம, திருஜென்ம புண்ணியங்களை நிர்ணயிக்கும் ஆகையால் புரட்டாசி மாதத்தில் (கன்னி) துலாம் லக்னத்தில் பிறப்பவர்கள் பூர்வஜென்ம புண்ணியம் செய்தவர்கள் என்பதும் ஐதீகம்.