Publish Date: Tue, 31 Dec 2013 (16:15 IST)
Updated Date: Tue, 31 Dec 2013 (16:14 IST)
எதிராளிகளையும் சிந்திக்க வைக்கும் நீங்கள், சுற்றுப் புறச் சூழலுக்கு கட்டுப்படாமல் தனக்கென தனிப்பாதையில் செல்பவர்கள். உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் சந்திரன், சூரியன் அமர்ந்திருக்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால் சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் நழுவ விடாமல் சரியாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். அரசியலில் செல்வாக்குக் கூடும். புது வேலைக் கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். உங்கள் யோகாதிபதி செவ்வாய் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்திருக்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் திடீர் யோகம், பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி எல்லாம் உண்டாகும். தைரியமாகவும், தன்னிச்சையாகவும் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு மனை வாங்குவீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் திருப்பம் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். என்றாலும் ராசிக்கு 6-ம் வீட்டில் புதன் அமர்ந்திருக்கும் போது இந்தாண்டு பிறப்பதால் உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். தொண்டை வலி, சையனஸ் தொந்தரவு வந்து நீங்கும்.ஜுன் 12-ந் தேதி வரை குரு உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் நிற்பதால் திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். தூக்கமின்மை, கனவுத் தொல்லை, ஒருவித படபடப்பு வந்துச் செல்லும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். கோவில் கும்பாபிஷேகத்தில் முதல் மரியாதைக் கிடைக்கும். ஆனால் 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜென்ம குருவாக அமர்வதால் ஆரோக்யம் பாதிக்கும். வேலைச்சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மை வந்து நீங்கும். வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலிக்கும். காய்ச்சல், யூரினரி இன்பெக்ஷன் வந்துச் செல்லும். வெளி உணவுகள், வாயுப் பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் பிரிவுகள் வரக்கூடும். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்க வேண்டாம். விலை உயர்ந்த தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். பல வருடங்களாக பழகிய நண்பர்கள் கூட உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். மறைமுக எதிரிகள் முளைப்பார்கள்.
20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 10-ல் கேதுவும், 4-ம் வீட்டில் ராகுவும் நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றங்கள், சம்பள பிரச்னை, மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். தாயாருக்கு முதுகு தண்டு வடத்தில் வலி, தலைச்சுற்றல் வந்துச் செல்லும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். விபத்துகள் நிகழக்கூடும்.
ஜுன் 21-ந் தேதி முதல் வருடம் முடியும் வரை ராசிக்கு 9-ம் வீட்டில் கேது தொடர்வதால் பிதுர்வழி சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும். தந்தையாருடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். அவருக்கு சிறுசிறு அறுவை சிகிச்சைகள், மூட்டு வலி வந்துச் செல்லும். ஆனால் ராகு 3-ம் வீட்டில் அமர்வதால் பயம், படபடப்பு நீங்கும். மனோபலம் அதிகரிக்கும். தள்ளிப் போன விஷயங்கள் முடியும். இளைய சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும்.
இந்தாண்டு முழுக்க சனி சாதகமாக இல்லாததால் மனத்தாங்களால் தாயாரை பிரிய வேண்டி வரும். தாய்வழி உறவினர்களுடனும் கருத்து மோதல்கள் வரும். வீட்டில் களவுப் போக வாய்ப்பிருப்பதால் குடும்பத்தினருடன் வெளியூர் பயணிப்பதாக இருந்தால் முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டு செல்வது நல்லது. பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். கர்ப்பிணிப் பெண்கள் நெடுந்தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வழக்கால் நிம்மதி இழப்பீர்கள்.
வியாபாரிகளே! இந்தாண்டு ஏற்ற-இறக்கங்கள் இருக்கும். ஜீன் மாதம் முதல் ஜென்ம குரு தொடங்குவதால் திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி முதலீடுகள் செய்ய வேண்டாம். கட்டிட உதிரி பாகங்கள், மூலிகை, பெட்ரோ கெமிக்கல், உணவு வகைகளால் ஆதாயமடைவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். யாருக்கும் முன் பணம் தர வேண்டாம். பங்குதாரர்களுடன் பிரிவு வரக்கூடும்.
உத்தியோகஸ்தர்களே! அலுவலகத்தில் நிலையற்ற சூழல் உருவாகும். தாணுன்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். நீங்கள் பொறுப்பாக நடந்துக் கொண்டாலும் அதிகாரிகள் குறைக் கூறத் தான் செய்வார்கள். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதிர்பார்த்த சலுகைகளும், பதவி உயர்வும் தாமதமாக வரும். சிலர் உங்கள் மீது அவதூறு வழக்குகள் தொடர்வார்கள்.
கன்னிப்பெண்களே! காதல் விவகாரத்தை தள்ளி வையுங்கள். பெற்றோருக்கு தெரியாமல் பெரிய விஷயங்களில் ஈடுபட வேண்டாம். போராடி உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். திருமண முயற்சிகள் தாமதமாகும்.
மாணவர்களே! தொடக்கத்திலிருந்தே பாடத்தில் கவனம் செலுத்துங்கள். விளையாடும் போதும் சிறுசிறு காயங்கள் ஏற்படக்கூடும்.
கலைத்துறையினர்களே! கிசுகிசுத் தொல்லைகள் வரும். உங்களின் படைப்புகளை ரகசியமாக வையுங்கள். எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
இந்த 2014-ம் ஆண்டு சுற்றியிருப்பவர்களின் சுயநலப் போக்கை உணர வைப்பதுடன், இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டுமென்பதை உணர்த்துவதாகவும் அமையும்.
பரிகாரம்:
திருவெண்ணெய் நல்லூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகிருபாபுரீஸ்வரரையும், ஸ்ரீமங்களாம்பிகையையும் பஞ்சமி திதி நாளில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். நினைத்தது நிறைவேறும்.
Webdunia
Publish Date: Tue, 31 Dec 2013 (16:15 IST)
Updated Date: Tue, 31 Dec 2013 (16:14 IST)