Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2014 பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன் : துலாம்!

2014 பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன் : துலாம்!
, செவ்வாய், 31 டிசம்பர் 2013 (16:02 IST)
FILE
எல்லோரையும் எடுத்த எடுப்பிலேயே நம்பும் நீங்கள், காலம் கடந்து தான் சிலரின் கல் மனதை புரிந்து கொள்வீர்கள். உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணவரவு கணிசமாக உயரும். உங்கள் பாக்யாதிபதி புதன் சாதகமான நட்சத்திரத்தில் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள்.

அரசு காரியங்கள் விரைந்து முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வீடு கட்ட சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவலாகி வரும். புது வாகனம் வாங்குவீர்கள். பிதுர்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். தந்தையார் ஒத்தாசையாக இருப்பார். புது பதவிகளும், பொறுப்புகளும் தேடி வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். இளைய சகோதர வகையில் ஆதரவுப் பெருகும்.

12.6.2014 வரை குரு உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் நீடிப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த அண்டை மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆனால் 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 10-ம் வீட்டில் அமர்வதால் சிறுசிறு அவமானம், ஏமாற்றம் வந்து நீங்கும். பழைய பிரச்னைகள், சிக்கல்கள் மீண்டும் வந்துவிடுமோ என்றெல்லாம் பயப்படுவீர்கள். சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சில நேரங்களில் தர்மசங்கமான சூழ்நிலைகளில் சிக்குவீர்கள்.

ஜுன் 20-ந் தேதி வரை ராசிக்கு 7-ல் கேதுவும், உங்கள் ராசிக்குள்ளேயே ராகுவும் நிற்பதால் மூச்சுத் திணறல், அல்சர், இரத்த சோகை வந்துச் செல்லும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும். மனைவி உணர்ச்சிவசப்பட்டு பேசினால் அதைப் பெரிதுப்படுத்திக் கொண்டு பதிலுக்கு பதில், ஏட்டிக்கு போட்டியாக ஏதாவது சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போங்கள். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்பப்பையில் கட்டி வந்து நீங்கும். 21.6.2014 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசியை விட்டு ராகு விலகி 12-ம் வீட்டிலும், கேது 6-ம் வீட்டிலும் தொடர்வதால் மனப்போராட்டங்கள் ஓயும். கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். கோவில் கும்பாபிஷேகத்தை எடுத்து நடத்துவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகத்துடன் வளம் வருவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணருவீர்கள். வேற்றுமதத்தவர், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.

இந்தாண்டு முழுக்க சனி உங்கள் ராசிக்குள் நின்று ஜென்மச் சனியாகவும், வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் 2-ல் அமர்ந்து பாதச் சனியாகவும் வருவதால் யாரிடமாவது சண்டைபோட வேண்டும் என யோசிக்க வைக்கும். உங்களைப் பற்றி தவறாக எப்போதோ எங்கேயோ யாரோ சொன்னதெல்லாம் இப்போது நினைவிற்கு வந்து புலம்புவீர்கள். சாப்பாட்டில் உப்பை குறையுங்கள். நெஞ்சு படபடப்பு, தலைச்சுற்றல், கை, கால் மரத்துப் போகுதல் வந்து நீங்கும். லாகிரி வஸ்துக்களை தவிர்ப்பது நல்லது. உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். சிலர் மூக்கு கண்ணாடி அணிய வேண்டி வரும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வழக்கை நினைத்து கவலையடைவீர்கள். முக்கிய காரியங்களுக்காக இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாறாமல் நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது.

வியாபாரிகளே! வருட முற்பகுதியில் லாபம் அதிகரிக்கும். என்றாலும் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். கடன் தர வேண்டாம். வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். அரிசி, பூ, எலக்ட்ரிக்கல், வாகன உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். பங்குதாரர்களுடன் மோதல்கள் வெடிக்கும்.

உத்தியோகஸ்தர்களே! ஜீன் 12-ந் தேதி வரை குரு சாதகமாக இருப்பதால் அலுவலகத்தில் மரியாதைக் கூடும். ஆனால் ஜுன் 13-ந் தேதி முதல் வேலைச்சுமை அதிகரிக்கும். சில நேரங்களில் அதிகாரிகள் கூடுதலாக உங்களுக்கு வேலைகளை தருவார்கள். சலித்துக் கொள்ளாமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுப்பது நல்லது. உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் இல்லாமல் போகும். பதவி உயர்வு, சம்பள பாக்கியை போராடி பெறுவீர்கள். சக ஊழியர்களால் மனஉளைச்சல் ஏற்படும். இடமாற்றம் உண்டு.

கன்னிப்பெண்களே! சமயோஜித புத்தியுடன் நடந்துக் கொள்ளுங்கள். முடிவெடுப்பதில் அவசரம் வேண்டாம். காதல் கசந்து இனிக்கும். பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாயுங்கள்.

மாணவர்களே! டி.வி. பார்த்துக் கொண்டே படிப்பது, பாட்டு கேட்டுக் கொண்டே எழுதுவது, படுத்துக் கொண்டே படிப்பதெல்லாம் இனி வேண்டாம். பொறுப்பாக படியுங்கள். விளையாடும் போது சிறு சிறு காயங்கள் ஏற்படும்.

கலைத்துறையினர்களே! விமர்சனங்களால் விரக்தியடையாதீர்கள். மூத்த கலைஞர்கள் உதவுவார்கள்.

இந்த 2014-ம் ஆண்டு தொடக்கத்தில் முன்னேற்றத்தையும் வருடத்தின் மத்தியப் பகுதியிலிருந்து அலைச்சலுடன் ஆதாயத்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:

திருவாரூர் அருகிலுள்ள ராஜமன்னார்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீவாசுதேவப் பெருமாளையும், ஸ்ரீசெங்கமல தாயாரையும் ஏகாதசி திதி நாளில் சென்று வணங்குங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள். நிம்மதி கிட்டும்.


Share this Story:

Follow Webdunia tamil