கனிவான விசாரிப்பால் மற்றவர்களையும் கவர்ந்திழுக்கும் நீங்கள், உள்ளன்று வைத்து புறமொன்று பேச மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு லாப வீட்டில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். தொலை நோக்குச் சிந்தனை அதிகரிக்கும். பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திர பதிவு செய்வீர்கள்.சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பணவரவுக்கு குறைவிருக்காது. தடைப்பட்ட கல்யாணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இனி ஏற்பாடாகும். முகவாட்டத்துடன் இருந்த நீங்கள் இனி உற்சாகமாக வளம் வருவீர்கள். 4.2.2014
முதல் 24.3.2014 வரை மற்றும் 16.7.2014 முதல் 1.9.2014 வரை உள்ளக் காலக்கட்டங்களில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் பலவீனமடைவதால் ஆரோக்ய குறைவு, சிறுசிறு விபத்துகள், சொத்துப் பிரச்னைகள், ஏமாற்றங்கள் வந்து நீங்கும். 2.9.2014 முதல் செவ்வாய் வலுவடைவதால் பிரிந்த சகோதரர்கள் ஒன்று சேருவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாகும். 12.6.2014
வரை குரு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் நிற்பதால் வீண் அலைக்கழிப்புகள் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாக வரும். மனதில் இனம்புரியாத கவலைகள் வந்துப் போகும். தன்னம்பிக்கை குறையும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். தங்க நகைகளை இரவல் வாங்கவோ, தரவோ வேண்டாம். ஆனால் 13.6.2014 முதல் வருடம் முடியும் வரை குரு 9-ம் வீட்டிலேயே அமர்வதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். குடும்பத்திலும் மகிழ்ச்சி உண்டு. வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை அமைக்கும் முயற்சிகள் பலிதமாகும். தந்தையுடனான மோதல்கள் விலகும். அவருக்கிருந்த நோய் விலகும்.
20.6.2014 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் கேது பகவான் நிற்பதால் உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மகான்கள், ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ராசிக்கு 12-ம் வீட்டில் ராகுவும் நிற்பதால் மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்திடாதீர்கள். கடந்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், ஏமாற்றங்களை நினைத்து அவ்வப்போது மனம் கலங்குவீர்கள். 21.6.2014 முதல் வருடம் முடியும் வரை கேது 5-ம் வீட்டில் அமர்வதால் பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். அவர்களின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் தாமதமாக முடியும். கர்ப்பிணிப் பெண்கள் தூரத்துப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். ஆனால் ராகு 11-ம் வீட்டில் நீடிப்பதால் திடீர் பணவரவு உண்டு. வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். சாதிக்கவேண்டுமென்ற எண்ணம் வரும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைவீர்கள்.
இந்தாண்டு முழுக்க சனி 12-ல் மறைந்து விரையச் சனியாகவும் வருடத்தின் இறுதியில் 18.12.2014 முதல் உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்மச் சனியாகவும் வருவதால் அநாவசியச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். வேலைச்சுமை இருக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். சிலர் எப்படியெல்லாம் போலித்தனமாக பழகி காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள் என்பதை நினைத்தும் வருத்தப்படுவீர்கள். உள்மனது சிலவற்றை அறிவுறுத்தியும் அதை சரியாக பின்பற்றாமல் விட்டு விட்டுமே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். கூடாப்பழக்கங்களிலிருந்து முழுமையாக வெளியேறுவது நல்லது. நல்லவர்களுடன் பழகுங்கள். கடன் பிரச்னையால் கௌரவம் குறைந்துவிடுமோ என்ற அச்சம் வரும். வாயு பதார்த்தங்கள், கார உணவுகளை தவிர்க்கப்பாருங்கள். இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறையக் கூடும். எனவே இரும்புச் சத்துள்ள காய், கனிகளை உட்கொள்வது நல்லது.
வியாபாரிகளே! ஜுன் மாதம் முதல் லாபம் அதிகரிக்கும். தேங்கிக் கிடந்த பழைய சரக்குகளையும் விற்றுத் தீர்ப்பீர்கள். அதிரடி சலுகை திட்டங்கள் மூலமாக வருவாய் கூடும். பங்குதாரர்கள் வழக்கம் போல் முணுமுணுப்பார்கள். பகைத்துக் கொள்ளாதீர்கள்.
வேற்றுமாநிலத்தை சார்ந்த வேலையாட்களால் நிம்மதி கிடைக்கும். புது கிளைகள் தொடங்குவீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி, கண்ஸ்டரக்ஷன், பவர் புராஜெக்ட் வகைகளால் லாபமடைவீர்கள். பெரிய வியாபாரிகளின் நட்பு கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களே! ஜுன் 12-ந் தேதி வரை கூடுதல் நேரம் ஒதுக்கி உழைத்தாலும் அதற்கேற்ற அங்கீகாரமோ, பாராட்டுகளோ இல்லையேயென புலம்புவீர்கள். ஜுன் 13-ந் தேதி முதல் மரியாதைக் கூடும். உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உங்களை நம்பி சில ரகசியப் பொறுப்புகளையும் ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களுக்காக வாதாடி சில சலுகைகளை அவர்களுக்கு பெற்றுத் தருவீர்கள். இடமாற்றம் எதிர்பார்த்தபடி அமையும். பதவி உயர்விற்காக சில தேர்வுகளை எழுத திட்டமிடுவீர்கள்.
கன்னிப் பெண்களே! உற்சாகமாக இருப்பீர்கள். அழகு, அறிவுக் கூடும். உயர்கல்வி நீங்கள் எதிர்பார்த்தபடி அமையும். நல்ல வரனும் அமையும். திருமணமும் கூடி வரும். காதல் விவகாரத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும்.
மாணவர்களே! கல்வியிலும், கலைப் போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். வகுப்பாசிரியரின் அன்பையும், பாராட்டையும் பெறுவீர்கள். பெற்றோரின் அரவணைப்பு உண்டு.
கலைத்துறையினர்களே! வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். திரையிடாமல் தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்பு இப்போது வெளி வரும்.
இந்த 2014-ம் ஆண்டு மனநிம்மதியையும், வசதி, வாய்ப்புகளையும், சமூகத்தில் அந்தஸ்தையும் தருவதாக அமையும்.
பரிகாரம்:
திண்டிவனம் அருகிலுள்ள மயிலம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீமுருகப் பெருமானை சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். மூடைதூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள். புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும்.