கலகலப்பாக பேசி காய்நகர்த்துபவர்களே! உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டங்களில் உங்களை என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்ப்போம். ராகுவின் பலன்கள்:இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் நின்று கொண்டு உங்களை திக்கு திசையறியாது திணற வைத்ததுடன், குடும்பத்தினரையும் உங்களையும் பிரித்து வைத்தாரே! ஒட்டு உறவில்லாமல் தவித்தீர்களே! உண்மையான பாசமுள்ளவர்களை தேடி அலைந்தீர்களே! திறமைகள் இருந்தும் சாதிக்க முடியாமல் தவித்தீர்களே! சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பில் சிக்கிக் கொண்டீர்களே! எதை எடுத்தாலும் ஒருவித தயக்கமும், தடுமாற்றமும் உள்ளுக்குள் அச்சுறுத்தியதே! இப்படி உங்களை பாடாய்படுத்திய ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் ஆற்றலுடன் வந்தமர்கிறார். வீட்டில் உங்களை எதிரியைப் போல் பார்த்த குடும்பத்தினர்கள் இனி பாசத்துடன் நடந்துக் கொள்வார்கள். வீண் சந்தேகத்தால் பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். தாம்பத்யம் இனிக்கும். மனைவிக்கு அடிக்கடி மருத்துவச் செலவுகள் வந்ததே! இனி ஆரோக்யம் கூடும். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் ஆசைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். தந்தைவழி உறவினர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். வருமா வராதா என்றிருந்த பணமெல்லாம் இனி கைக்கு வந்து சேரும். உங்களால் பலன் அடைந்தவர்களும் உதவுவார்கள். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பழைய நகைகளை மாற்றி புதிய டிசைனில் ஆபரணங்களை வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களை எதிரியாக நினைத்தவர்கள் கூட இனி உங்களை மதித்துப் பேசுவார்கள். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். மனைவிவழி உறவினர்களும் உங்களைப் புரிந்துக் கொண்டு உதவிகரமாக இருப்பார்கள். இராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:உங்கள் அஷ்டம-லாபாதிபதியான குருவின் விசாகம் நட்சத்திரத்தில் 02.12.2012 முதல் 06.06.2013 வரை ராகுபகவான் செல்வதால் வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். தடைப்பட்ட கல்யாணம் கூடி வரும். அலைப்பேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். ஷேர் மூலம் பணம் வரும். ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 07.06.2013 முதல் 13.02.2014 வரை செல்வதால் வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். புது வேலை கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். மாதக் கணக்கில் வாய்தா வாங்கி தள்ளிப் போன வழக்கில் சாதகமாக தீர்ப்பு வரும். சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். புது வாகனம் வாங்குவீர்கள். உங்கள் சப்தம-விரையாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.02.2014 முதல் 21.06.2014 முடிய ராகுபகவான் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் உண்டு. மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, அடிவயிற்றில் வலி வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும். வீடு, மனை வாங்குவீர்கள். சகோதரர் உதவுவார். சகோதரிக்கு திருமணம் முடியும். பிள்ளைகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். மகளுக்கு நல்ல வரன் அமைய வில்லையே என்று வருந்துனீர்களே! இனி உங்கள் அந்தஸ்துக்குத் தகுந்தாற்போல நல்ல வரன் அமையும். திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையாக பாசத்தைப் புரிந்துக் கொள்வார்கள். பணப்பற்றாக்குறையால் பாதியிலேயே நின்றுபோன கட்டிட பணிகளை, இனி முழுமையாக கட்டி முடிக்கும் அளவிற்கு பணம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். ஒதுங்கிப் போன உறவினர்களும், நண்பர்களும் இனி ஓடிவந்து உதவுவார்கள். குழந்தை இல்லையே என்று வருந்திய தம்பதியர்களுக்கு பிள்ளை பாக்கியம் உண்டாகும். வேலை இல்லாமல் அலைந்துத் திரிந்தவர்களுக்கு அவர்களின் படிப்பிற்கு தகுந்த வேலை கிடைக்கும். திருமணம் தள்ளிக் கொண்டே போன கன்னிப் பெண்களுக்கு இனி கல்யாணம் கூடி வரும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் சேரும். விடுபட்ட பாடத்தை முடிப்பீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். மாணவ-மாணவியர்களின் நினைவாற்றல் பெருகும். ஆசிரியரின் ஆதரவு உண்டு. மதிப்பெண் உயரும். நல்ல நட்புச் சூழல் உருவாகும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் அன்பும், அரவணைப்பும் கிட்டும். என்றாலும் சகாக்களுக்கு மத்தியில் கொஞ்சம் பொறாமை இருக்கத்தான் செய்யும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு லாபத்தை பெருக்குவீர்கள். பழைய தவறுகள் நிகழாத வண்ணம் பார்த்துக் கொள்வீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். கெமிக்கல், எண்ணெய் வித்துக்கள், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். வேலையாட்கள் உங்களிடம் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்களின் ஆலோசனைகளுக்கு ஒத்துழைப்பார்கள். வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் தொந்தரவு கொடுத்து வந்த மேலதிகாரி இனி கனிவாகப் பேசுவார். சக ஊழியர்களும் உங்களிடம் நட்புறவாடுவார்கள். கணினி துறையினர்களுக்கு அயல்நாட்டுத்தொடர்புடைய புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினர்களின் கற்பனைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்து விரக்தியின் விளிம்பிற்கே அழைத்துச் சென்ற கேது இப்போது பனிரெண்டில் சென்று அமர்கிறார். சின்னதாக ஒரு நெஞ்சு வலி என்றாலும் பெரிய நோய் ஏதேனும் இருக்குமோ என்றெல்லாம் பயம் வந்ததே! எந்த ஒரு வேலையிலும் முழுமையாக ஆர்வம் செலுத்த முடியாமல் ஒருவித மனப்போராட்டமும், இனந்தெரியாத கவலையும், படபடப்பும் உங்களை ஆட்டிப் படைத்ததே! நீங்கள் எது பேசினாலும் அதுவே உங்களுக்கு பிரச்னையாக முடிந்ததே! ஆத்திரத்தில் அறிவிழந்து சில விஷயங்களை செய்து விட்டு பிறகு வருத்தப்பட்டீர்களே! உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக் கொண்டீர்களே! இனி அந்த அவல நிலையெல்லாம் மாறும்.
கோபம் குறையும். முகம் மலரும். ஏதோ ஒன்று உங்களை அழுத்துவது போல நினைத்தீர்களே! இனி உடம்பு லேசாகும். தயக்கம், தடுமாற்றம் நீங்கும். இனி இடம், பொருள், ஏவலறிந்து பேசுவீர்கள். தெளிவில்லாத உங்கள் பேச்சில் முதிர்ச்சித் தெரியும். உடல் ஆரோக்யம் மேம்படும். முன்கோபம் விலகும். எதிலும் பிடிப்பில்லாமல் விரக்தியுடன் இருந்தீர்களே! இனி எல்லாவற்றிலும் ஆர்வம் பிறக்கும். குடும்பத்தினரின் தேவைகளை புரிந்து கொள்வீர்கள். பிள்ளைகளின் கூடாபழக்க வழக்கங்கள் விலகும். மகனுக்கு தடைபட்ட திருமணம் முடியும். உடல் சோர்வு, அசதி எல்லாம் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும். உடன்பிறந்தவர்களிடையே சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து போனாலும் ஒற்றுமை குறையாது. பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். குலதெய்வ பிராத்தனைகளை பூர்த்தி செய்வீர்கள்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் சுகாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ம் பாதத்தில் 02.12.2012 முதல் 02.02.2013 வரை கேதுபகவான் செல்வதால் உஷ்ணத்தால் வேனல் கட்டி, கண் எரிச்சல் வந்துப் போகும். வேலைச்சுமை அதிகரிக்கும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர் கூடுதல் அறை கட்டுவீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். தாயாரின் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துங்கள்.
உங்கள் ராசிநாதனும்-சஷ்டமாதிபதியுமான சுக்ரனின் பரணி நட்சத்திரத்தில் 03.02.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். கௌரவப் பதவியும், பொறுப்பும் தேடி வரும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். அயல்நாடு சென்று வருவீர்கள்-.
கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அசுவனி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.06.2014 வரை செல்வதால் சுற்றியிருப்பவர்களின் பலம் பலவீனம் அறிந்து செயல்படுங்கள். தூக்கம் குறையும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்துப் போகும். கையிருப்பு கரையும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். வேற்றுமொழி, இனத்தவர்களால் ஆதாயமடைவீர்கள். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. பழைய கசப்பான சம்பவங்களை மறப்பது நல்லது.
சொந்த ஊரில் உங்களின் செல்வாக்கு ஒருபடி உயரும். கோவில் நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். பிரபலங்களின் அறிமுகத்தால் சில தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். அருகிலிருக்கும் கோவிலுக்குக் கூட போக முடியாமல் போனதே! இனி புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு அடிக்கடி செல்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை நீங்கும்.
வியாபாரத்தில் வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். கொடுக்கல்-வாங்கலில் நிம்மதி ஏற்படும். வேலையாட்கள் முழு ஆதரவு கொடுப்பார்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்து போங்கள். உத்யோகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவீர்கள். அலுவலகப் பிரச்சனைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். நீங்கள் விருப்பப்பட்ட இடத்திற்கே இடமாற்றம் உண்டு. வெகுநாட்களாக இழுபறியில் இருந்த சம்பள உயர்வும், பதவியுயர்வும் இனி தேடி வரும்.
இந்த ராகு-கேது மாற்றம் பிரச்னை புயலில் சிக்கியிருந்த உங்களை கரையேற்றுவதுடன் அதிரடி முன்னேற்றங்களையும் அள்ளித் தருவதாக அமையும்.
பரிகாரம்:
கும்பகோணம் நகர மையத்தில் அமைந்துள்ள ஆதிசேஷன் வழிபட்ட ஸ்ரீநாகேஸ்வரன் கோயிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீநாகேஸ்வரரையும், ஸ்ரீபெரியநாயகியையும் தரிசியுங்கள். கால் இழந்தவர்க்கு உதவுங்கள். வெற்றி கிட்டும்.