எதையும் திருத்தமாக செய்பவர்களே! 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் சேர்ந்து உங்களை என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.ராகுவின் பலன்கள்:இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து கொண்டு பணவரவையும், பிரபலங்களின் நட்பையும் ஒருபுறம் தந்தாலும் மறுபுறம் வீண் அலைச்சல், பகை, கடன் தொந்தரவு என்று கலங்கடிக்கவும் செய்த ராகுபகவான்! இப்பொழுது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். ஐந்தாம் இடம் ராகுவுக்கு உகந்த இடமல்ல.. என்றாலும் உங்கள் யோகாதிபதி சுக்ரன் வீட்டில் அமர்வதால் கெடுபலன்களை குறைத்து நல்லதையே செய்வார். குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் விவாதம், சண்டை என வந்துபோகும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். ஆனாலும் புத்தி ஸ்தானமான 5-ம் வீட்டில் ராகு அமர்வதால் சந்தேகக் கண்ணுடன் எல்லோரையும் பார்ப்பீர்கள். இப்படி நடந்திருக்குமோ! அப்படி சொல்லியிருப்பார்களோ! என்றெல்லாம் நினைத்து குழம்புவீர்கள். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். மனதில் இனம்புரியாத கவலைகள் வந்துச் செல்லும். வீட்டில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் நடக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். குலதெய்வ கோவிலை புதுப்பிப்பீர்கள். பயணங்களால் ஆதாயமுண்டு. டென்ஷன், முன் கோபம் இருக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அவர்களின் வருங்காலம் கருதி கொஞ்சம் சேமிக்கவும் செய்வீர்கள். என்றாலும் பிள்ளைகளுடன் அடிக்கடி சண்டை, சச்சரவு வரும். உங்களின் குறிக்கோள், கனவுகளை அவர்களிடம் திணிக்க வேண்டாம். அவர்களின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனாவசியமாக மூக்கை நுழைக்க வேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கர்ப்பச் சிதைவு ஏற்படக்கூடும். நெடுநாளாக குல தெய்வ கோவிலுக்குப் போக வேண்டுமென சொல்லிக் கொண்டுதானே இருந்தீர்கள். இனி குடும்பத்துடன் சென்று பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களை எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். சொந்தம்-பந்தங்களின் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். அவ்வப்போது பணம் கேட்டு நச்சரிப்பார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். சொத்து தாமதமாக வந்தாலும், குறைவாக வந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். சிலர் சொந்த ஊரை விட்டு விலகி அருகிலிருக்கும் நகரத்திற்கு குடிபெயர்வீர்கள். இராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:உங்கள் சப்தம-தசமஸ்தானாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் 02.12.2012 முதல் 06.06.2013 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் உங்களின் எதிர்பார்ப்புகள் யாவும் நிறைவேறும். கடனாக கொடுத்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அறிஞர்கள்-கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். மனைவியுடன் ஈகோ பிரச்னை, அவருக்கு ஹார்மோன் கோளாறு, ஃபைப்ராய்டு வரக்கூடும். உத்யோகத்தில் இடமாற்றங்களும், வேலைச்சுமையும் இருக்கும். ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 07.06.2013 முதல் 13.02.2014 வரை செல்வதால் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவினங்கள் கூடும். உறவினர்களின் விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். நெருங்கிய நண்பரை இழக்க நேரிடும். சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். ஷேர் மூலம் பணம் வரும். உங்கள் சஷ்டம-லாபாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.02.2014 முதல் 21.06.2014 முடிய ராகுபகவான் செல்வதால் சொத்து வாங்குவது, விற்பதில் இழப்பு வரும். உடன்பிறந்தவர்கள் அதிருப்தி அடைவார்கள். வாகன விபத்துக் ஏற்படக்கூடும். இரத்த அழுத்தத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள். கமிசன், புரோக்கரேஜ் மூலம் திடீர் பணவரவு உண்டு. பிள்ளைகளின் நட்பு வட்டத்தை கொஞ்சம் கண் காணியுங்கள். நல்ல நட்புச்சூழலை உருவாக்கிக் கொடுங்கள். மகனின் கல்வி, வேலை விசயமாக பிரபலங்களின் உதவி நாடி அலைந்தீர்களே! ஒரு பயனும் இல்லையே! ஆனால் இப்பொழுது நல்ல நிறுவனதிலிருந்து வாய்ப்புகள் வரும். ஆன்மீகவாதிகள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். குடும்ப பிரச்சனைகளில் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக அணுகுவது நல்லது. உங்களைச் சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை அறிவீர்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தமான விஷயங்களில் அவசர முடிவுகள் வேண்டாம். சிலர் விற்க வேண்டி வரும். பாகப்பிரிவினையில் சிக்கல்கள் வரக்கூடும். தாய்மாமன், அத்தை வகையில் பகைமை வெடிக்கும். கலை, இசை இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். வேற்று மொழியினாரால் ஆதாயம் உண்டு. கன்னிப்பெண்களே! தள்ளிப் போய்கொண்டிருந்த திருமணம் இனி கூடி வரும். பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாய்ப்பீர்கள். உயர்கல்வியில் தேர்ச்சியடைவீர்கள். மாணவர்களே! வகுப்பாசியர் பாராட்டுவார். தேர்வில் மதிப்பெண்களை குவிப்பீர்கள். கவிதை, ஓவியம், இசைப் போட்டிகளில் பரிசு பெறுவீர்கள். உயர்கல்விக்காக அயல்நாடு செல்ல வேண்டி வரும். அரசியல்வாதிகள் எதிர் கட்சியினரை விமர்சித்து பேசவேண்டாம். சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அண்டை அயலாருடன் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத்தீரும். வாடிக்கையாளரை அதிகப்படுத்தும் விதமாக கடையை விரிவுபடுத்தி நவீனமயமாக்குவீர்கள். பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். இரும்பு, உணவு, புரோக்கரேஜ் வகைகளால் லாபமடைவீர்கள். வேலையாட்கள் பொறுப்பில்லாமல் நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தேங்கிக்கிடந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். வெகுநாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வு இப்பொழுது கைக்கு வரும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். கணினி துறையினர்களுக்கு சம்பள உயர்வுடன் புதிய சலுகைகளும் கிடைக்கும். கலைத்துறையினர்களைப் பற்றிய கிசுகிசுகள் விலகும். உங்களின் திறமைகளுக்கேற்ப நல்ல நிறுவனத்திலிருந்து வாய்ப்பு கிடைக்கும்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு பனிரெண்டாம் வீட்டில் அமர்ந்து விரயச் செலவுகளையும், வீண் அலைச்சலையும், தூக்கமில்லாமலும் தவிக்க வைத்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான பதினொன்றில் வந்தமருகிறார். வறண்டிருந்த பணப்பை நிரம்பும். கைமாற்றாக இருந்த கடனையும் தந்து முடிப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். குடும்ப வருமானத்தை உயர்த்த கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீர்கள். வேலை பார்த்துக் கொண்டே சின்ன முதலீட்டில் வியாபாரம் செய்ய முயற்சிப்பீர்கள்.
மனைவி நெடு நாட்களாக கேட்டுக் கொண்டிருந்த தங்க ஆபரணம், ரத்தினங்களை வாங்கித் தருமளவிற்கு வசதியாக இருப்பீர்கள். வி.ஐ.பிகள், தொழிலதிபர்களின் நட்பை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். இழுபறியான வழக்குகள் சாதகமாக முடியும். அரைகுறையாக நின்று போன வீட்டை கட்டி முடித்து புது வீட்டில் புகுவீர்கள். பழைய பிரச்சனைகளெல்லாம் ஒவ்வொன்றாக தீரும். போதிய காற்றோட்டம், இடவசதி, தண்ணீர் வசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்கள் இயற்கைச் சூழல்மிகுந்த வீட்டிற்கு குடி புகுவீர்கள். மூத்த சகோதரர் உதவுவார்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் சேவகாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ம் பாதத்தில் 02.12.2012 முதல் 02.02.2013 வரை கேதுபகவான் செல்வதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மனோ பலம் அதிகரிக்கும். எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். வங்கியில் லோன் கிடைக்கும். இளைய சகோதரருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். கௌரவப் பதவியில் அமர்வீர்கள்.
உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-விரையாதிபதியுமான சுக்ரனின் பரணி நட்சத்திரத்தில் 03.02.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். திருமண முயற்சி கைக்கூடி வரும். குழந்தை பாக்யம் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். தோற்றப் பொலிவுக் கூடும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். எதிர்பாராத பயணம் உண்டு. உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும்.
கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அசுவனி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.06.2014 வரை செல்வதால் உங்கள் கை ஓங்கும். வழக்கால் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். சிலர் சொந்த தொழில் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவிகரகமாக இருப்பார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.
புதிய நண்பர்களால் ஆதாயமுண்டு. நீங்கள் சாதாரணமாகப் பேசினாலே சண்டைக்கு வந்தார்களே! இனி உங்கள் பேச்சில் தெளிவு பிறக்கும். மறைமுக எதிரிகள் அடங்குவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தை மாற்றியமைப்பீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். பங்குதாரர்களை மாற்றுவீர்கள். அரசு கெடுபிடிகள் தளரும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடுவீர்கள்.
இராகு உங்களை பின்னோக்கி இழுத்தாலும், கேதுவின் ஆதரவு வலுவாக உள்ளதால் எங்கும் எதையும் சாதிக்கும் வல்லமையுண்டாகும்.
பரிகாரம்:
நாகராஜன் பூஜித்து பேறுபெற்ற நாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள நாகூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீநாகவல்லி சமேத ஸ்ரீநாகநாதரை வழிபடுங்கள். தொழு நோயாளிக்கு உதவுங்கள். தொட்டது துலங்கும்.