சொன்ன சொல் தவறாதவர்களே! சாயாகிரகங்களான இந்த ராகுவும், கேதுவும் 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டத்தில் உங்களுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.இராகுவின் பலன்கள்:இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து எல்லோரையும் பகையாளியாக்கி பாடாய் படுத்திய ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்கிறார். ஐந்தாம் வீட்டை விட்டு ராகு விலகுவதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளின் முரட்டுக் குணம் விலகும். இனி உங்கள் பேச்சுக்கு கட்டுப்படுவார்கள். அவர்களின் ஆழ்மனதில் இருக்கும் திறமைகளை வெளிக்கொண்டுவருவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். இனி மன நிம்மதியை தருவார். பக்குவமாய் பேசி தடைபட்ட காரியங்களையெல்லாம் முடிப்பீர்கள். குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவுகள் வெடித்ததே! இனி சந்தோஷம் நிலைக்கும். வீட்டில் தாமதமாகிக் கொண்டிருந்த திருமணம் நல்ல விதத்தில் முடியும். பலரை நல்லவர்கள் என நம்பி ஏமாந்தீர்களே! இனி தரம் பார்த்து பழகுவீர்கள். கணவன்-மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும். உங்கள் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட காரணமாக இருந்தவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். இழுபறியான வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். விலகிப் போன உறவினர்கள், நண்பர்களெல்லாம் இனி வலிய வந்து பேசுவார்கள். என்றாலும் ராகு 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாருக்கு ரத்த அழுத்தம், நரம்புக் கோளாறு வரும். தாய்வழி உறவினர்களால் அலைச்சலும், மனக்கசப்பும் வந்து நீங்கும். வாகனம் விபத்துக்குள்ளாகும். தலைகவசம், சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை இயக்க வேண்டாம். வீட்டு பத்திரத்தை அடமானம் வைக்க வேண்டியது வரும். இராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:சஷ்டம-பாக்யாதிபதியான குருவின் விசாகம் நட்சத்திரத்தில் 02.12.2012 முதல் 06.06.2013 வரை ராகுபகவான் செல்வதால் இழுபறியான வேலைகள் உடனே முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, மனை அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வங்கிக் கடன் கிடைக்கும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். தந்தையாருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும்.ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 07.06.2013 முதல் 13.02.2014 வரை செல்வதால் இக்காலகட்டத்தில் தாயாரின் உடல்நிலை பாதிக்கும். சின்ன சின்ன விபத்துகள் வந்து போகும். சாலையை கடக்கும் போது கவனம் தேவை. இலவசமாக சில கூடா பழக்கங்கள் உங்களை நெருங்கக்கூடும். புதிய நண்பர்களுடன் கவனமாக இருங்கள். வீடு மாற வேண்டியது வரும்.உங்களின் பூர்வபுண்ணியாதியும்-தசம ஸ்தானாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.02.2014 முதல் 21.06.2014 முடிய ராகுபகவான் செல்வதால் செலவுகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். சொத்து வாங்குவீர்கள். உத்யோகத்தில் உயர்வு உண்டு. வழக்கு சாதகமாகும். சகோதர, சகோதரிகளால் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். இளைய சகோதரர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. யோகா, தியானம் செய்யுங்கள். கர்ப்பிணிப்பெண்களே! நெடுந்தூர பயணங்கள் வேண்டாமே! லேசாக தலைச்சுற்றல் வரும் என்பதால் மாடிப்படி ஏறி இறங்கும்போது கவனம் தேவை. கன்னிப் பெண்கள் தடைபட்ட உயர்கல்வியை மீண்டும் தொடர்வார்கள். காதல் விவகாரத்தில் பெற்றோருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பது நல்லது. மாணவர்களுக்கு மறதி, மந்தம் நீங்கும். உயர்கல்வியில் அதிக மதிப்பெண் பெறுவார்கள். அரசியல்வாதிகளுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். வியாபாரத்தில் போட்டிகள் ஒருபுறமிருந்தாலும் ராஜதந்திரத்தால் லாபத்தை பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசி பழைய பாக்கிகளை வசூல் செய்யுங்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். உணவு, சிமெண்ட், புரோக்கரேஜ், மருந்து வகைகளால் இரட்டிப்பு லாபம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் கறாராகப் பேசி வேலையை விரைந்து முடிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் யாராலும் செய்ய முடியாத கஷ்டமான வேலைகளையும் செய்து முடித்து சகஊழியர்களையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். மேலதிகாரியைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். கணினி துறையிலிருப்பவர்களுக்கு அதிக சம்பளத்துடன் அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கலைத்துறையினர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராவது வீட்டில் அமர்ந்து ஓரளவு நல்ல பலன்களை தந்த கேது பகவான் இப்போது பத்தாவது வீட்டில் வந்தமர்வதால் எதிலும் ஒரு பதட்டம் இருக்கும். நீங்கள் சும்மா இருந்தாலும் சிலர் உங்களை வம்புக்கு இழுப்பார்கள். நான்கைந்து முறை சில வேலைகளை அலைந்து முடிக்க வேண்டியது வரும். அதனால் மன இறுக்கத்துக்குள்ளாவீர்கள். வி.ஐ.பிகளின் ஆதரவு கிட்டும். வெளிநாட்டில் வேலை அமையும். மூத்த சகோதரருடன் இருந்த கருத்துமோதல்கள் விலகும். பிரச்சனைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவீர்கள்.
குடும்பத்தில் உங்களை மதிக்காமல் இருந்தார்களே! இனி உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிக்க முடியாதபடி செலவுகளும் தொடரும். தங்கையின் கல்யாணத்தை முன்னின்று நடத்துவீர்கள். உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். தூரத்து உறவினர்கள், நண்பர்களால் ஆதாயமுண்டு. உங்களை ஏளனமாக நினைத்தவர்கள் எல்லாம் இனி பாராட்டி பேசுமளவிற்கு உங்கள் நிலை உயரும்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் தனாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ம் பாதத்தில் 02.12.2012 முதல் 02.02.2013 வரை கேதுபகவான் செல்வதால் எதார்த்தமாக பேசி சில வேலைகளை முடிப்பீர்கள். கண், காது, பல்வலி வந்துபோகும். அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். தந்தையாருடன் சின்ன சின்ன கருத்துமோதல்கள் வரும். வேலைச்சுமை அதிகரிக்கும். தூக்கம் குறையும். சோர்வு, களைப்பு வரும்.
சுக லாபாதிபதியான சுக்ரனின் பரணி நட்சத்திரத்தில் 03.02.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்கள் உதவுவார்கள். வேலை கிடைக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். திருமணம் கூடி வரும். மூத்த சகோதரர் வகையில் ஆதாயமுண்டு. உயர்ரக வாகனம் வாங்குவீர்கள். தாம்பத்யம் இனிக்கும்.
கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அசுவனி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.06.2014 வரை செல்வதால் பணவரவு உண்டு. ஆனால் திடீர் செலவுகளால் திணறுவீர்கள். உத்யோகத்தில் எதிர்ப்புகளும், இடமாற்றங்களும் வரும். வேலைச்சுமை அதிகரிக்கும். கோவில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். சொத்து வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். நெருங்கிய உறவினரை இழக்க வேண்டியது வரும்.
வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வறட்டுக் கவுரவத்திற்காக கையிருப்பை கரைக்காதீர்கள். ஆன்மீகத்தில் ஆழமாக செல்வீர்கள். வேற்று மொழியினர் உதவுவார்கள். நெருங்கிய உறவினர்களால் கொஞ்சம் செலவுகளும், அலைச்சலும் வந்து நீங்கும். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது.
வியாபாரத்தில் அவசரப்பட்டு பெரிய முதலீடுகள் வேண்டாம். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள போராட வேண்டியது வரும். விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். அரசுக்கு செலுத்தவேண்டிய வரிகளை முறையே செலுத்திவிடுங்கள். முரண்டுபிடித்த பங்குதாரர்கள் இனி உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். சின்ன சின்ன அவமானங்களையும் சந்திக்க வேண்டியது வரும்.
இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி உங்களை ஓய்வெடுக்க முடியாதபடி கொஞ்சம் கசக்கி பிழிந்தாலும் இறுதியில் எல்லாம் நன்மைக்கே என்பதை புரிய வைக்கும்.
பரிகாரம்:
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் இருக்கும் நயினார்கோவில் எனும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீசௌந்தரநாயகி சமேத ஸ்ரீநாகநாதரை வணங்குங்கள். புற்றுநோயாளிக்கு உதவுங்கள். செல்வம் சேரும்.