சோர்ந்து வருபவர்களுக்கு தோல் கொடுப்பவர்களே! உங்களுக்கு 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டத்தில் ராகுவும், கேதுவும் சேர்ந்து என்ன பலன்களை தரப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.ராகுவின் பலன்கள்:இதுவரை உங்களின் ராசிக்கு நான்காம் இடத்தில் அமர்ந்துக் கொண்டு உங்களை நாலாபுறமும் பந்தாடியதுடன், தாயாருடன் மனக்கசப்பையும், வீண் விவாதங்களையும், உடல்நலக்குறைவுகளைவும் கொடுத்து வந்த ராகுபகவான், இப்பொழுது ராசிக்கு 3-ம் வீட்டிற்கு வந்தமருவதால் எதிலும் வெற்றியுண்டாகும். தடைகள் யாவும் நீங்கும். கழுத்தை நெருக்கிப் பிடித்த கடன் தொல்லைகளை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். கணவன்-மனைவிக்குள் ஈகோவால் இருந்த இடைவெளி குறையும். தாம்பத்யம் இனிக்கும். நெடுநாளாக வாங்க நினைத்திருந்த நவீன மின்னணு, மின்சார சாதனங்களை வாங்குவீர்கள். பாதியிலேயே நின்றுபோன வீடு கட்டும் பணியை முடிக்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். விரைந்து முடித்து கிரகபிரவேசம் செய்வீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளுக்கு தள்ளிப் போய் கொண்டிருந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு கூடி வரும். சிலர் இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். வி.ஐ.பிகள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் என உங்களின் நட்பு வட்டம் இனி விரியும். தாயாருக்கு இருந்து வந்த சர்க்கரை நோய், மூட்டுவலி எல்லாம் குறையும். சோர்ந்த முகம் மலரும். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். பெரிய நோய் இருக்குமோ என்ற பயம், கனவுத் தொல்லை, தூக்கமின்மை எல்லாம் நீங்கும். இளைய சகோதர வகையில் சில நேரங்களில் மனஸ்தாபங்கள் வந்தாலும் பாசம் குறையாது. இராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:உங்கள் பூர்வ புண்ணியாதிபதியும்-அட்டமாதிபதியுமான குருவின் விசாகம் நட்சத்திரத்தில் 02.12.2012 முதல் 06.06.2013 வரை ராகுபகவான் செல்வதால் அடிமனதிலிருந்த பயம், கவலை விலகும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். நிரந்தர வேலை கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதுரக வாகனம் வாங்குவீர்கள். நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். மகளுக்கு திருமணம் முடியும். ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 07.06.2013 முதல் 13.02.2014 வரை செல்வதால் தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசால் ஆதாயமுண்டு. புது முதலீடு செய்து வியாபாரம் தொடங்குவீர்கள். புதியவர்களின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும். பழைய பிரச்சனைகள் தீரும். உங்கள் சுகாதிபதியும்-பாக்யாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.02.2014 முதல் 21.06.2014 முடிய ராகுபகவான் செல்வதால் குடும்ப வருமானம் உயரும். பழைய சொத்து வந்து சேரும். மீதிப்பணம் தந்து சொத்தை கிரையம் செய்வீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோக, திருமண முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பெற்றோரின் உடல்நிலை சீராகும். புதிய பொறுப்புகள், பதவிகள் வரும். வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் ஒருபடி உயரும். வராது என்றிருந்த பணமெல்லாம் வந்து சேரும். இதுவரை தாய்வழி உறவினர்களால் இருந்து வந்த அலைச்சல்களும், செலவுகளும் நீங்கும். பேச்சில் தெளிவு பிறக்கும். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வீட்டில் பழுதான எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் சாதனங்களை மாற்றிவிட்டு புதுரக சாதனங்களை வாங்குவீர்கள். கன்னிப் பெண்களின் காதல் கனியும். பாதியிலேயே விட்ட படிப்பை மீண்டும் தொடர்வீர்கள். தோல் அலர்ஜி, இரத்தசோகை நீங்கும். அரசியல்வாதிகள் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தவிர்ப்பது நல்லது. தலைமை உங்களுக்கு முக்கியத்துவம் தரும்.
வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு புது யுக்திகளை கையாளுவீர்கள். பழைய பாக்கிகளை இனி கறாராகப் பேசி வசூலியுங்கள். பற்று வரவு உயரும். புது வாடிக்கையாளர்கள் வருகை அதிகரிக்கும். ஷேர், கமிசன், மருந்து வகைகளால் லாபமடைவீர்கள். புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களை அலைக்கழித்த மேலதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். புது அதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். கணினி துறையினருக்கு அயல்நாடு செல்ல வாய்ப்பு அமையும். கலைஞர்களே! இனி பெரிய நிறுவனங்களிடமிருந்து புது வாய்ப்பு வரும்.
கேதுவின் பலன்கள்:
இதுவரையில் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் அமர்ந்து எந்த வேலையை தொட்டாலும் இழுத்தடித்து நோகவைத்தார் கேதுபகவான். முழுமையாக முடிக்க விடாமல் தடுத்தார். உத்யோகத்தில் அடிக்கடி இடமாற்றங்களையும், அவமானங்களையும் சந்திக்க வைத்தார். இப்போது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்வதால் வேலைச்சுமை குறையும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்ப நிலை மாறும். மூத்த சகோதரர் பக்கபலமாக இருப்பார். இளைய சகோதரியின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சம்பள உயர்வு, பதவியுயர்வையும் எதிர்பார்க்கலாம். இனி இரத்த அழுத்தம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். என்றாலும் 9-ம் இடத்தில் கேது அமர்வதால் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கும். கருத்துமோதல்களும் வரும். கௌரவச் செலவுகள் அதிகரிக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.
கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் ராசிநாதனான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ம் பாதத்தில் 02.12.2012 முதல் 02.02.2013 வரை கேதுபகவான் செல்வதால் உங்கள் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வாயுத் தொந்தரவால் லேசாக நெஞ்சுவலி வந்துபோகும். நடைபயிற்சி செய்யத் தவறாதீர்கள். பழைய சொந்தம் பந்தங்கள் தேடி வரும்.
உங்கள் திருதிய-ஜீவனஸ்தானாதிபதியுமான சுக்ரனின் பரணி நட்சத்திரத்தில் 03.02.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வருமானம் உயரும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். மனைவிவழி உறவினர்கள் உதவுவார்கள். வீடு மாறுவீர்கள். வேலை கிடைக்கும். மகளுக்கு திருமணம் கூடி வரும்.
கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அசுவனி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.06.2014 வரை செல்வதால் பூர்வீகச் சொத்தை போராடி பெறுவீர்கள். தந்தையாருக்கு நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் வந்து போகும். செலவுகள் கட்டுப்படுத்த முடியாமல் போகும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.
கேது ஒன்பதாம் வீட்டிற்கு வருவதால் தந்தையாரின் உடல்நிலை அடிக்கடி பாதிக்கும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். அவருடன் விட்டுக் கொடுத்து போங்கள். அவர் வழி சொத்துக்களை அடைவதில் அலைச்சல்களும், செலவுகளும் ஏற்படும். பத்திரங்களை கவனமாக கையாளுங்கள். வேலையின்றி தவித்தவர்களுக்கு நல்ல வேலைக் கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்தவர்கள் உங்களின் நிலைமையை புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புது வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் மரியாதை கூடும். சக ஊழியர்களால் நிம்மதி பிறக்கும்.
இந்த இராகு-கேது மாற்றத்தில் கேதுவால் அவ்வப்போது நீங்கள் அலைகழிக்கப்பட்டாலும், ராகுவின் ஆதரவும் அனுகிரகமும் இருப்பதால் அதிரடி முன்னேற்றம் கிட்டும்.
பரிகாரம்:
மயிலாடுதுறையிருந்து நன்னிலம் அருகிலிருக்கும் ஸ்ரீவாஞ்சியம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ராகுவும், கேதுவும் சேர்ந்திருக்கும் அரிய கோலத்தை இங்கு தரிசிக்கலாம். சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். தடைகள் உடைபடும்.