Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராகு-கேது பெயர்ச்சி இரா‌சி பல‌ன்: கன்னி

ராகு-கேது பெயர்ச்சி இரா‌சி பல‌ன்: கன்னி
, சனி, 1 டிசம்பர் 2012 (20:33 IST)
FILE
மனசாட்சி சொல்வதை மறுக்காமல் செய்பவர்களே! உங்களுக்கு 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் என்ன பலன்களை தரப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.

இராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருந்து கொண்டு வாழ்வில் புதிய திருப்பங்களையும், மன தைரியத்தையும், பெரிய மனிதர்களின் நட்பையும் கொடுத்துவந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் வந்து அமர்கிறார். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி தவிர்க்க முடியாத செலவுகளும் அடுத்தடுத்து வரும். சில வேலைகள் தடைபட்டு முடியும். வாக்கு ஸ்தானத்தில் ராகு நுழைந்திருப்பதால் உணர்ச்சிவசப்பட்டுப் பேசாதீர்கள். நீங்கள் நல்லதைச் சொல்லப் போய் அதை வேறுவிதமாக சிலர் புரிந்துக் கொள்வார்கள். எனவே பேச்சில் கவனம் தேவை. உங்களின் முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்க வேண்டியது வரும்.

கண், காது, பல் வலி அதிகரிக்கும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளாதீர்கள். அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு முன்பாக மற்றொரு மருத்துவரின் கருத்தையும் கேட்டறிந்து முடிவெடுப்பது நல்லது. குடும்பத்தில் எப்போதும் பிரச்சனை இருப்பது போல தோன்றும். அவ்வப்போது தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்குவீர்கள். திடீர் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வரவேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். இளைய சகோதரருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். சகோதரியின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். உங்களிடம் கடன் வாங்கிய ஏமாற்றியவர்கள் இனி திருப்பித் தருவார்கள். பால்ய நண்பர்கள் வெகுநாட்களுக்குப் பிறகு உங்களை நாடி வருவார்கள்.

இராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் சுக-சப்தமாதிபதியான குருவின் விசாகம் நட்சத்திரத்தில் 02.12.2012 முதல் 06.06.2013 வரை ராகுபகவான் செல்வதால் தள்ளிப்போன திருமணம் கூடி வரும். ஓரளவு பணம் வரும். கல்யாணம், கிரகபிரவேசம் என வீடு களை கட்டும். வாகனத்தை மாற்றுவீர்கள். சிலர் சொந்த ஊரை விட்டு இடம்பெயர்வீர்கள். கூட்டுத்தொழிலில் இருந்த பிரச்சனைகள் தீரும். உத்யோகத்திலும் செல்வாக்கு கூடும்.

ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 07.06.2013 முதல் 13.02.2014 வரசெல்வதால் ஆரோக்யம் பாதிக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. கூடா பழக்க வழக்கங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகத்தால் பிரிவு வரக்கூடும். பார்வைக் கோளாறு வந்துபோகும். கடனை நினைத்து சில நேரங்களில் அஞ்சுவீர்கள்.

உங்கள் திருதிய-அஷ்டமாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.02.2014 முதல் 21.06.2014 முடிய ராகுபகவான் செல்வதால் நிலம், வீடு வாங்குவது விற்பதில் கவனம் தேவை. மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். நெருப்பு காயங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மின்சார சாதனங்களை கவனமாக கையாளுங்கள். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும்.

பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். மகள் திருமணத்தை எப்படி நடத்தி முடிக்கப் போறோமோ என்று நினைத்து வருந்துனீர்களே! இனி கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்தி முடிப்பீர்கள். நீங்கள் விரும்பியபடி வெளிநாட்டில் வேலை பார்க்கும் வரன் வந்தமையும். மகனின் உயர் கல்வியைத் தொடர்வதில் இருந்த பிரச்னைகள் நீங்கும். அவ்வப்போது வரும் திடீர் பயணங்களால் லேசாக உடல்நிலை பாதிக்கும். உறவினர்கள் சிலர் உங்களிடம் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். அரசாங்க காரியங்களில் வெற்றியுண்டு. 2-ம் வீட்டில் ராகு நிற்பதால் வெளிவட்டாரத்தில் யாரையும் தாக்கிப் பேசவேண்டாம். இடம்பொருள் ஏவல் அறிந்து பேசுவது நல்லது.

பத்திரங்களில் கையெழுத்திடும் போது ஒருமுறைக்கு பல முறை படித்துப் பாருங்கள். யாருக்கவும் ஜாமீன் கையெழுத்திடவேண்டாம். வழக்குகளில் இழுபறியான நிலை ஏற்படும். குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள். கன்னிப்பெண்கள் அலட்சியம், சோம்பல், பயம் இவற்றிலிருந்து விடுபடுவார்கள். தடைபட்டுக் கொண்டிருந்த கல்யாணமும் சிறப்பாக நடந்து முடியும். தவறானவர்களின் நட்பை ஒதுக்கிவிடுங்கள். விலையுயர்ந்த தங்க நகைகளை கவனமாக கையாளுங்கள். முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. சிலர் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவார்கள்.

வியாபாரத்தில் முன்புபோல் நஷ்டம் வராமல் இருக்க, விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். புது வகையில் யோசிப்பீர்கள். லாபம் உயரும். வேலையாட்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். பணியாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி ஊக்குவிப்பீர்கள். கான்ட்ராக்ட், கமிஷன் மூலம் லாபம் அடைவீர்கள். உத்யோகத்தில் இருந்து வந்த மோதல்போக்கு மறையும். மேலதிகாரி உங்களின் பொறுப்புணர்வைக் கண்டு புதிய பதவி தருவார். உங்களின் ஆலோசனையையும் ஏற்பார். சக ஊழியர்களால் மனஸ்தாபங்கள் வெடிக்கும். கணினி துறையிலிருப்பவர்களுக்கு வேறு நல்ல வாய்ப்பு தேடி வரும். சம்பள உயரும். கலைத்துறையினர்களுக்கு தள்ளிப் போன புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்து தந்தையாருக்கு உடல்நலக் குறைவையும், அவருடன் வீண் மனஸ்தாபங்களையும், பணப்பற்றாக்குறையையும் தந்த கேது இப்போது உங்களின் ராசிக்கு எட்டில் வந்தமர்கிறார். இனி கொஞ்சம் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். அடிமனதில் ஒரு பயம் வரும். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட வேண்டாம். குறுக்குவழியில் சம்பாதிப்பவர்களின் நட்பையும் தவிர்ப்பது நல்லது. கனவுத்தொல்லையால் தூக்கம் குறையும். கணவன் மனைவிக்குள் அவ்வப்போது சண்டை வரும். மனைவியுடன் விட்டுக் கொடுத்து போவது நல்லது. யூரினரி இன்ஃபெக்சன், பைல்ஸ் தொந்தரவு வரக்கூடும். வெளிவட்டாரத்தில் நிதானத்தையும், பொறுமையையும் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது தடித்த வார்த்தைகள் வேண்டாம். உறவினர்கள் உங்கள் உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல் அவ்வப்போது தொந்தரவு தருவார்கள்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் விரைய ஸ்தானாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ம் பாதத்தில் 02.12.2012 முதல் 02.02.2013 வரை கேதுபகவான் செல்வதால் ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். நீண்டநாள் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சுபச்செலவுகள் அதிகரிக்கும். வாகனங்களை அதிவேகமாக இயக்க வேண்டாம்.

உங்கள் தன-பாக்யாதிபதியான சுக்ரனின் பரணி நட்சத்திரத்தில் 03.02.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணம் கூடி வரும். கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். பிள்ளை பாக்யம் கிட்டும். வீடு, வாகனம் சேரும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள்.

கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அசுவனி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.06.2014 வரை செல்வதால் தூக்கம் குறையும். ஆரோக்யத்தில் கூடுதலாக அக்கறை காட்டுங்கள். உணவு கட்டுப்பாடு தேவை. விபத்துகள் வந்து நீங்கும். சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்தி விமர்சித்தாலும் கலங்காதீர்கள். எதிர்பாராத தொகை கைக்கு வரும்.

கேது 8-ல் அமர்வதால் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் வரும். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனங்களை இயக்க வேண்டாம். மற்றவர்களின் பிரச்சனைகளில் மூக்கை நுழைக்காதீர்கள். ஆனால் எட்டில் நிற்கும் கேது ஆன்மீகச் சிந்தனை, பொது அறிவு, யோகா, தியானம் இவற்றில் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவார். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. வேலையாட்களிடம் அதிகம் கண்டிப்பு காட்டாதீர்கள். உத்யோகத்தில் அதிக வேலைச்சுமையால், நேரந்தவறி வீட்டிற்கு செல்ல நேரிடுவதால் குடும்பத்தில் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வரும்.

இந்த இராகு-கேது மாற்றத்தினால் உலக அனுபவங்களை பெறுவதுடன், உங்கள் பலம் பலவீனத்தை நீங்களே உணரும் சக்தி உண்டாகும்.

பரிகாரம்:
புதுக்கோட்டைக்கு அருகேயுள்ள திருமயத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள பேரையூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் நாகராஜன் பூஜித்த ஸ்ரீநாகநாதரையும், ஸ்ரீபிரகதாம்பாளையும் வணங்குங்கள். காதல் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு உதவுங்கள். பிரச்சனைகள் குறைந்து வெற்றி கிட்டும்.

Share this Story:

Follow Webdunia tamil