Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராகு-கேது பெயர்ச்சி இரா‌சி பல‌ன்: விருச்சிகம்

ராகு-கேது பெயர்ச்சி இரா‌சி பல‌ன்: விருச்சிகம்
, சனி, 1 டிசம்பர் 2012 (19:57 IST)
FILE
கனிவான இதயம் இருந்தாலும் கறாராகப் பேசுபவர்களே! உங்களுக்கு 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

இராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்து உங்களை வெடித்து சிதற வைத்தார் ராகு பகவான். ஒருநாள் சிரித்தால், மூன்று நாள் அழ வைத்தார். தலை வலி, முதுகு வலி, கால் வலி என சதா சர்வகாலமும் புலம்பித் தவிக்க வைத்தார். எப்போதும் பிரச்னையிலேயே மூழ்கி கிடந்தீர்களே! ராகுபகவான் இப்பொழுது ராசிக்கு பனிரெண்டாம் வீட்டிற்கு வந்தமர்வதால் நோய் நீங்கும். அழகு, இளமைக் கூடும். இனி எப்போதுமே முகத்தில் சந்தோஷம் பொங்கும். மற்றவர்களின் பிரச்சனைகளை கையிலெடுத்து நீங்கள் சிக்கலில் சிக்கித்தவித்தீர்களே! அந்த தர்மசங்கடமான நிலையிலிருந்து விடுபடுவீர்கள். பார்த்தும் பார்க்காமல் போனவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும்.

குடும்பத்தில் எப்போதும் ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவியதே இனி மகிழ்ச்சிப் பொங்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்பார்கள். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். வர வேண்டிய பணம் தாமதம் இல்லாமல் வரும். வீட்டில் சுபகாரியங்கள் தடைபட்டுக் கொண்டிருந்ததே! இனி அடுத்தடுத்து கல்யாணம், காது குத்து என நல்லதெல்லாம் நடந்துக் கொண்டேயிருக்கும். பழைய உறவினர்கள், நண்பர்கள் வெகுநாட்களுக்குப் பிறகு உங்களை தேடி வருவார்கள். ஆன்மீகவாதிகளின் ஆசி கிட்டும். வெளிநாட்டு பயணம் திருப்திகரமாக அமையும். புண்ணிய நதிகளில் நீராடுவீர்கள். கூடாப்பழக்க வழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள். உங்களை ஏமாற்றியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். அலர்ஜி, தோலில் இருந்த நமைச்சல் நீங்கும். விபத்துகளிலிருந்து மீள்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கைக்கு கிடைக்கும்.

இராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் தன-பூர்வபுண்யாதிபதியான விசாகம் நட்சத்திரத்தில் 02.12.2012 முதல் 06.06.2013 வரை ராகுபகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆபரணங்கள் வாங்குவீர்கள்-. ஷேர் மூலம் பணம் வரும். பூர்வீக சொத்து கைக்கு வரும். மழலை பாக்யம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல வேலை அமையும். புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள்.

ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 07.06.2013 முதல் 13.02.2014 வரை ராகுபகவான் செல்வதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள்-. பூர்வீக சொத்தை சீர்திருத்தம் செய்வீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பெரிய பதவிகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

உங்கள் ராசிநாதனும்-சஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.02.2014 முதல் 21.06.2014 முடிய ராகுபகவான் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் விலகும். திடீர் யோகம் உண்டாகும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். தன்னிச்சையாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். சகோதரங்கள் மனம் விட்டு பேசுவார்கள். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள்.

பிள்ளைகளிடம் வெறுப்பாக பேசாமல் இனி பாசமாக பழகுவீர்கள். அவர்களை உயர்கல்வி, உத்யோகம் பொருட்டு அயல்நாட்டுக்கு அனுப்பி வைப்பீர்கள். உங்களின் உண்மையான பாசத்தை உடன்பிறந்தவர்கள் இனி உணர்வார்கள். வழக்குகளில் இனி வாய்தா இல்லை, தீர்ப்பு சாதகமாகும். தந்தையுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். தாயின் உடல்நிலை சீராகும். குலதெய்வக் கோவிலை எடுத்துக் கட்டுவீர்கள். நாடாளுபவர்களின் உதவி கிடைக்கும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். என்றாலும் சின்ன சின்ன விபத்துகள் வரக்கூடும். இயக்கம், சங்கம், டிரஸ்ட் இவற்றிலெல்லாம் கௌரவப் பதவிகள் தேடி வரும். கன்னிப்பெண்களின் மனம் தெளிவாகும். வேலைக் கிடைக்கும். மாணவர்கள் உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். விளையாட்டில் பதக்கம் உண்டு. அரசியல்வாதிகள் தன் பலத்தை நிரூபித்துக் காட்டி தலைமையிடத்தில் நல்ல பெயரெடுப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டார்கள் அன்பாக பேசுகிறார்கள் என்று குடும்ப விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களை அனுபவ அறிவால் வெல்வீர்கள். பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். விலகிச் சென்ற வேலையாட்கள் மீண்டும் உங்களிடமே வந்து சேர்வார்கள். கூட்டுத் தொழிலில் புது முதலீடுகளை செய்வீர்கள். பங்குதாரர்களிடையே நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் மாறும். ஏற்றுமதி-இறக்குமதியால் அதிக லாபம் வரும். அரசு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.

உத்‌தியோகத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் உயரதிகாரியை கவர்வீர்கள். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும். கணினி துறையினர்களுக்கு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். அதிக சம்பளத்துடன் சலுகைகளும் கிட்டும். கலைஞர்களுக்கு, நல்ல வாய்ப்புகளெல்லாம் விலகிப் போனதே! வேலைகளை திறம்பட செய்து கொடுத்தும் பணம் வராமல் தவித்தீர்களே! இனி புகழ் கூடும். வருமானம் உயரும்.

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு ஏழாவது வீட்டில் இருந்துக் கொண்டு உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் இடையே சண்டை, சச்சரவுகளையும், மனைவிக்கு உடல் நலக்குறைவையும் அடுக்கடுக்காக தந்தாரே! காரியத்தடை, மன உளைச்சல், டென்ஷன் என தொல்லை தந்த கேது பகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் பிரச்சனைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து அகற்றும் சக்தியை கொடுப்பார். ஷேர் மூலம் பணம் வரும். சொத்து வாங்குவீர்கள். குடும்பத்திலிருப்பவர்கள் இனி உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். கணவன் மனைவிக்குள் ஈகோ, வீண் விவாதங்கள் நீங்கும். தாம்பத்யம் இனிக்கும். பிள்ளைகளின் உணர்வுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். பழைய சொத்தை விற்று விட்டு புதிய சொத்து வாங்குவீர்கள். எதிரிகள் நண்பராவார்கள். இழுபறியான வழக்குகள் சாதகமாகும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். அநாவசியச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் ஜீவனாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ம் பாதத்தில் 02.12.2012 முதல் 02.02.2013 வரை கேதுபகவான் செல்வதால் அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். உத்யோகத்தில் பதவி, சம்பளம் உயரும்-. நாடாளுபவர்கள் உதவுவார்கள். அதிகாரப் பதவிக்கு தேர்தெடுக்கப்பாடுவீர்கள். அரைக்குறையாக நின்ற கட்டிடப் பணியைத் தொடங்குவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது கிளைகள் தொடங்குவீர்கள்.

உங்கள் சப்தம-விரையாதிபதியான சுக்ரனின் பரணி நட்சத்திரத்தில் 03.02.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, வாகனம் அமையும். சிலர் நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உல்லாசப் பயணங்கள் சென்று வருவீர்கள். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள்.

கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அசுவனி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.06.2014 வரை கேது செல்வதால் பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வேற்றுமொழிக்காரர்கள் உதவுவார்கள்.

கேது 6-ல் நிற்பதால் எதிரிகளை வீழ்த்துவீர்கள். புத்தி சாலித்தனத்துடன் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பணப்பற்றாக்குறை நீங்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். நோய் விலகும். குடும்பத்தில் உங்கள் பேச்சிற்கு மரியாதை கூடும். சொந்த-பந்தங்களுக்கு மத்தியில் உங்களின் தகுதி உயரும். உத்யோகம் சம்பந்தப்பட்ட வழக்குகள் வெற்றியடையும். மனைவி வெகுநாட்களாக கேட்டுக் கொண்டிருந்த தங்க ஆபரணங்களை இப்போது வாங்கிக் கொடுப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். கௌரவ பதவிகள் தேடி வரும்.

மாணவர்களுக்கு நினைவாற்றல் பெருகும். மதிப்பெண் உயரும்.
வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து அதற்குத் தகுந்தாற்போல் பொருட்களை வாங்கி வைப்பீர்கள். கடையை வேறிடத்திற்கு மாற்றுவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். உத்தியோகத்தில் உங்களை ஏளனமாக பார்த்த உயரதிகாரிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திறமையாக செயல்படுவீர்கள். குறைகூறிக் கொண்டிருந்த சக ஊழியர்களும் இனி வலிய வந்து பேசுவார். உங்களின் கடின உழைப்புக்காக பதவியுயர்வு, சம்பள உயர்வெல்லாம் உண்டு.

இந்த ராகு-கேது மாற்றம் அடிவாரத்தில் இருந்த உங்களை உச்சிக்கு கொண்டு வருவதுடன் அனைத்து வளங்களையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்:
வேலூர், வாணியம்பாடிக்கு அருகில் ஆம்பூர் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅபயவல்லி சமேத ஸ்ரீநாகரத்தின சுவாமியை வணங்குங்கள். கட்டிடத் தொழிலாளிக்கு உதவுங்கள். வெற்றிகள் தொடரும்.

Share this Story:

Follow Webdunia tamil