Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராகு-கேது பெயர்ச்சி இரா‌சி பல‌ன்: தனுசு

ராகு-கேது பெயர்ச்சி இரா‌சி பல‌ன்: தனுசு
, சனி, 1 டிசம்பர் 2012 (19:49 IST)
FILE
மனதிற்குள் தோன்றுவதை மறைக்காமல் பேசுபவர்களே! உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டங்களில் என்ன மாற்றத்தைத் தருவார்கள் என்று பார்ப்போம்.

இராகுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு பனிரெண்டில் அமர்ந்து கொண்டு அடுக்கடுக்காக பல பிரச்னைகளையும், நெருக்கடிகளையும் தந்த ராகுபகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்கு வருவதால் தன்னம்பிக்கையையும், பணவரவையும் கொடுப்பதுடன் வீண் செலவுகளையும் குறைப்பார். சவாலான காரியங்களைக் கூட சர்வ சாதாரணமாக இனி செய்து முடிப்பீர்கள். கலகம், கலாட்டாவாக இருந்த குடும்பத்தில் இனி அமைதி திரும்பும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன்-மனைவிக்குள் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவுகள் வெடித்ததே! அந்த நிலை மாறும். குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு குழந்தை பாக்‌கியம் கிட்டும். அதிக வட்டிக் கடனை அடைத்து முடிப்பீர்கள்.

பிள்ளைகள் கெட்ட நண்பர்களிடமிருந்து விலகுவார்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். குல தெய்வக் கோவிலை புதுப்பிக்க உதவுவீர்கள். விழாக்களில் முதல்மரியாதை கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பால் சொத்துப் பிரச்சனைகள் தீரும். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நின்றீர்களே! இனி உற்சாகமாய் கலந்து கொள்வீர்கள். வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. தூக்கமில்லாமலும், நிம்மதியில்லாமலும், உடலாலும், மனதாலும் நொந்து போயிருந்த நீங்கள் இனி ஆரோக்யமாகவும் அழகாகவும் இருப்பீர்கள்.

இராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் ராசிநாதனும்-சுகாதிபதியுமான விசாகம் நட்சத்திரத்தில் 02.12.2012 முதல் 06.06.2013 வரை ராகுபகவான் செல்வதால் தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். லோன் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். தள்ளிப் போன திருமணம் முடியும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி உறவினர்கள் மத்தியில் இருந்த மோதல்கள் விலகும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள்.

ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 07.06.2013 முதல் 13.02.2014 வரை ராகுபகவான் செல்வதால் வழக்கில் வெற்றி உண்டு. சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களுக்கு தலைமை தாங்குவீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மூத்த சகோதரர் உதவுவார். ஷேர் மூலம் பணம் வரும்.

விரையாதிபதியும்-பூர்வபுண்யாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.02.2014 முதல் 21.06.2014 முடிய ராகுபகவான் செல்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். சகோதரிக்கு திருமணம் நிச்சயமாகும். பழைய கடன் பிரச்னை ஒன்று தீரும். நீண்ட நாட்களாக போக நினைத்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள்.

11-ல் ராகு இருப்பதால் அரைகுறையாக நின்று போன பல வேலைகள் உடனே முடியும். வழக்குகள் விரைந்து முடியும். வீட்டில் சமையலை, குளியலறையை நவீனமாக்குவீர்கள். நண்பர்கள், உறவினர்களில் சிலர் எதிரியாக மாறி, ஏகப்பட்ட தொல்லைகள் தந்தார்களே! அவர்களெல்லாம் இனி பணிந்து வருவார்கள். குலதெய்வத்திடம் குழந்தைக்காக வேண்டிய பிராத்தனையை இன்னும் நிறைவேற்றவில்லையே! உடனடியாக குடும்பத்துடன் பிராத்தனையை நிறைவேற்றுவீர்கள். கன்னிப்பெண்களுக்கு தோஷங்கள் நீங்கி கல்யாணம் நடக்கும். சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல், சமயோஜித புத்தியுடன் இனி செயல்படுவீர்கள். அரசியல்வாதிகள் இழந்த பதவியைப் பெறுவார்கள். தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் தலைமையிடம் கொண்டு செல்வது நல்லது.

வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு புது யுக்திகளை கையாளுவீர்கள். கடையை விரிவுபடுத்தி பெரியளவில் கொள்முதல் செய்வீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். அனுபவம் மிகுந்த நல்ல வேலையாட்கள் வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இருந்த மோதல் போக்கு, சக ஊழியர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் எல்லாம் மாறும். உங்களின் திறமைகள் வெளிப்படும். வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவியுயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. கணினி துறையினர்களுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். கலைத்துறையினர்களுக்கு வேற்று மொழி வாய்ப்புகளும் தேடி வரும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்திருந்து பிரச்சனைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த கேது பகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய வீடான ஐந்தாம் வீட்டிற்கு வந்து அமர்கிறார். பிள்ளைகளால் அலைச்சலும், செலவும் உண்டு. அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் நெடுந்தூர பயணங்கள் தவிர்ப்பது நல்லது. அதிகமான எடையை தூக்க வேண்டாம். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டாம். ஆன்மீகத்தில் உச்சத்தை அடைவீர்கள். உங்களைப் பற்றி வீண் வதந்திகள் வரும். உள்மனசில் எப்போதும் ஒருவித தயக்கமும், தடுமாற்றமும், சந்தேகமும் இருந்து கொண்டிருக்கும். உறவினர்களின் ஒருசிலர் பகையாவார்கள். தாய், தாய் மாமா வழியில் சங்கடங்கள் வரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சனையில் மூழ்கிடாதீர்கள்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் பாக்யாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ம் பாதத்தில் 02.12.2012 முதல் 02.02.2013 வரை கேதுபகவான் செல்வதால் அரசு காரியங்கள் விரைந்து முடியும். பணப்பற்றாக்குறை ஏற்படும்-. தந்தைக்கு நெஞ்சு வலி, வேலைச்சுமை வந்துப் போகும். தந்தைவழி உறவினர்கள் மதிப்பார்கள். பிதுர்வழி சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். வெளிநாடு, வேற்றுமாநிலம் செல்லும் வாய்ப்பு வரும்.

சஷ்டம-லாபாதிபதியான சுக்ரனின் பரணி நட்சத்திரத்தில் 03.02.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் பணவரவு அதிகரிக்கும். புது வேலை அமையும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தொண்டை புகைச்சல், சளித் தொந்தரவு வந்துப் போகும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை எடுத்து நடத்துவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள்.

கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அசுவனி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.06.2014 வரை செல்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் தலைத்தூக்கும். மூச்சுப் பிடிப்பு, இரத்த சோகை, சிறுநீர் பாதையில் அலர்ஜி வரக்கூடும். பிள்ளைகளால் அலைச்சல், பிரச்னைகள் வந்துப் போகும். பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சில வேலைகளை இரண்டு, மூன்றாம் கட்ட முயற்சிக்கு பிறகு முடிக்க வேண்டி வரும்.

கேது 5-ம் வீட்டில் அமர்வதால் சொந்த ஊர் விஷயங்களில் அதிகம் தலையிடாதீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வேற்று மதத்தினர் மற்றும் வெளிநாட்டினரால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே நிலவிவந்த பனிப்போர் நீங்கும். உங்கள் வார்த்தையை, ஆலோசனையை ஏற்பார்கள். புரோக்கரேஜ், கெமிக்கல், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளாலும் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் வெகு நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள் உயர்வை கொஞ்சம் போராடி பெறுவீர்கள்.

இந்த ராகு-கேது பெயர்ச்சியில் கேதுவால் ஞானமும், ராகுவால் வசதியும், நிம்மதியும், சமூகத்தில் மிகப் பெரிய அந்தஸ்தும் கிட்டும்.

பரிகாரம்:
மயிலாடுதுறை, தரங்கம்பாடிக்கு அருகேயுள்ள திருக்களாஞ்சேரி எனும் இத்தலத்தில் மூலவர் சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீநாகநாதரை வணங்குங்கள். பழைய பள்ளிக்கூடம் அல்லது கோவிலை புதுப்பிக்க உதவுங்கள். அதிஷ்டம் பெருகும்.

Share this Story:

Follow Webdunia tamil