பரந்த அறிவு கொண்டவர்களே! உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 2.12.2012 முதல் 21.6.2014 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறார்கள். என்பதை பார்ப்போம்.இராகுவின் பலன்கள்:இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதில் அமர்ந்து கொண்டு கிடைக்கின்ற வாய்ப்புகளையெல்லாம் தட்டிவிட்டதுடன், கையில் ஒரு காசும் தங்கவிடாமல் துடைத்தெடுத்த ராகு பகவான் இப்பொழுது எட்டில் சென்று மறைகிறார். ராகு எட்டில் மறைவதால் அல்லல் பட்ட உங்கள் மனம் இனி அமைதியாகும். திக்குமுக்காடிக் கொண்டிந்த நீங்கள் இனி திசையறிந்து பயணிப்பீர்கள். தடைபட்ட காரியங்களெல்லாம் இனி ஒவ்வொன்றாக முடியும். அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த தந்தையின் உடல் நலம் சீராகும். தந்தைவழி சொத்தில் இருந்த சிக்கல் தீரும். ஆனால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். உங்களை சிலர் குறைத்து மதிப்பீடார்களே! இப்பொழுது அவர்கள் ஆச்சர்யப்படும்படி பல விதங்களில் சாதிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் சின்ன சின்ன விவாதங்கள் வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்களிடம் குடும்ப விஷயங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். ராகு 8-ல் அமர்வதால் மனைவிக்கு மாதவிடாய்க்கோளாறு, கர்ப்பப்பையில் கட்டி வந்துநீங்கும். கொஞ்சம் பாசமாக நடந்து கொள்ளுங்கள். சிலரின் ஆலோசனையை கேட்டு தவறான பாதையில் சென்று பலவிதங்களிலும் சிக்கித்தவித்தீர்களே, இனி நேர்பாதையில் பயணிப்பீர்கள். இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:உங்கள் ராசிநாதனும்-ஜீவனாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் 02.12.2012 முதல் 06.06.2013 வரை ராகுபகவான் செல்வதால் தோற்றப் பொலிவுக் கூடும். பணம் வரும். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். என்றாலும் அலைச்சல், செலவுகள், வாகன விபத்துகள், மறைமுக விமர்சனங்கள் வந்துச் செல்லும். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை, இடமாற்றம் உண்டு. ராகுபகவான் தன் சுய நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தில் 07.06.2013 முதல் 13.02.2014 வரை செல்வதால் எளிதாக முடிய விஷங்களை கூட போராடி முடிக்க வேண்டி வரும். கௌரவக் குறைவான சம்பவங்கள் நிகழக் கூடும். எவ்வளவு தான் உழைத்தாலும் கெட்ட பெயர் தான் மிஞ்சிகிறது என்றெல்லாம் அலுத்துக் கொள்வீர்கள். யாரையும் வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். பித்தத்தால் தலைச்சுற்றல், வயிற்று வலி, வலிப்பு வந்துச் செல்லும். உங்கள் தன-பாக்யாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 14.02.2014 முதல் 21.06.2014 முடிய ராகுபகவான் செல்வதால் எதிர்பாராத பணவரவு உண்டு. சொத்து வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். சகோதரி உங்களைப் புரிந்துக் கொள்வார். சகோதரருக்கு வேலைக் கிடைக்கும். தந்தையின் ஆரோக்யம் சீராகும். பேச்சால் பிரச்னை, சிறுசிறு நெருப்பு காயங்கள், பிறர் மீது நம்பிக்கையின்மை, பிதுர்வழி சொத்துப் பிரச்னை, பகை, ஏமாற்றம் வந்துப் போகும்.பிள்ளைகளின் பழக்க வழக்கங்களைக் கண்டு வருந்தினீர்களே! இனி வருந்தவேண்டாம். குடும்ப சூழ்நிலையைப் புரிந்து நடந்து கொள்வார்கள். உயர்கல்வியில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுவார்கள். மகளுக்கு நல்ல மாப்பிள்ளை வந்தமைவார். புது வீடு மாறுவீர்கள். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களை சிலர் விமர்சனம் செய்வார்கள். கவலை வேண்டாம். அதனால் உங்கள் புகழ் கூடத்தான் செய்யும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளப்பாருங்கள். தங்க ஆபரணங்களை இரவல் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். வெளியூர் செல்லும்போது வீட்டை பாதுகாப்பாக பூட்டியிருக்கோமா என்று ஒருதடவைக்கு இருதடவை சரிபார்த்துக்கொள்ளுங்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். உணவு விஷயங்களில் கொஞ்சம் கட்டுபாடு தேவை. முடிந்த வரையில் வறுத்த, பொறித்த உணவு வகைகளை தவிர்த்துவிடுங்கள். காய்கறி, கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். திருமணம் தடைபட்டுப் போய்க் கிடந்த கன்னிப்பெண்களுக்கு மனம்போல் மாங்கல்யம் வந்துசேரும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாணவ-மாணவிகள், உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. விடைகளையும் எழுதி பாருங்கள். நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். விட்டுக் கொடுத்து போங்கள். அரசியல்வாதிகள் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.
வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகளை நயமாகப் பேசி வசூல் செய்யுங்கள். பழைய வேலையாட்களை நீக்கிவிட்டு, புதிய வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகளைப் போடாதீர்கள். ஷேர், புரோக்கரேஜ், கமிசன் வகைகளால் ஆதாயம் உண்டு. கடையை விரிவுபடுத்த வங்கி கடனுதவி கிடைக்கும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடையே நிலவிவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரியின் அடக்கு முறை மாறும். இனி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சலுகைகளுடன், பதவியும் உயரும். கணினி துறையினர்களுக்கு வெளிநாட்டிலிருந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். அரசு உதவும்.
கேதுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாவது வீட்டில் அமர்ந்து கொண்டு மன உறுதியையும், தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் கொடுத்து வந்த கேது பகவான் இப்போது ராசிக்கு இரண்டாவது வீட்டில் நுழைகிறார். இனி சாணக்கியத் தனமாகப் பேசி சில காரியங்களை சாதிப்பீர்கள். ஆனால் சில நேரங்களில் சொற்குற்றம், பொருட் குற்றத்தில் சிக்குவீர்கள். சிலர் நீங்கள் பேசுவதை தவறாக புரிந்து கொண்டு சண்டைக்கு வருவார்கள். பல்வலி, கண் எரிச்சல்கள் வந்து நீங்கும். கையிருப்புகள் கரையுமளவிற்கு அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்தவேண்டுமென நினைத்திருந்தீர்களே! உங்களின் கனவு இப்போது பலிக்கும். மகனுக்கு நிரந்தமான வேலை இல்லையே என வருந்தினீர்களே! இப்போது நல்ல வேலை கிடைக்கும். உங்களை சிலர் குறைத்து மதிப்பீடார்களே! இப்பொழுது அவர்கள் ஆச்சர்யப்படும்படி பல விதங்களில் சாதிப்பீர்கள். அயல்நாட்டுப் பயணங்கள் தேடி. வரும். வாகனத்தை கவனமாக இயக்கப்பாருங்கள். தூக்கமின்மை, மன உளைச்சல் வந்து போகும்.
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
உங்கள் சஷ்டமாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரம் 1-ம் பாதத்தில் 02.12.2012 முதல் 02.02.2013 வரை கேதுபகவான் செல்வதால் எதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள். அரசியல்வாதிகள் உதவிகரமாக இருப்பார்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சிலர் பழைய வீட்டை இடித்து கட்டுவீர்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.
உங்கள் சேவகாதிபதியும்-அஷ்டமாதிபதியுமான சுக்ரனின் பரணி நட்சத்திரத்தில் 03.02.2013 முதல் 11.10.2013 வரை கேது செல்வதால் துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். வீட்டில் மங்கள இசை முழங்கும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வேற்றுமொழியினர், மதத்தினர் உதவுவார்கள்.
கேதுபகவான் தன் சுய நட்சத்திரமான அசுவனி நட்சத்திரத்தில் 12.10.2013 முதல் 21.06.2014 வரை கேது செல்வதால் பணப்பற்றாக்குறை, வீண் டென்ஷன், மனஉளைச்சல், ஒருவித சலிப்பு, அப்ரண்டீஸ், பைல்ஸ் வந்துப் போகும். முன்யோசனையில்லாமல் அடுத்தவர்களுக்கு உதவி செய்யப் போய் பிரச்னையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். வழக்கில் அலட்சியம் வேண்டாம்.
கேதுபகவான் 2-ம் வீட்டில் அமர்வதால் பார்வைக் கோளாறு வரக்கூடும்-. இருசக்கரவாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணியாமல் இருக்காதீர்கள். அநாவசிய உறுதிமொழிகளை தவிர்ப்பது நல்லது. பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம்.
வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை போட்டு நட்டப்படாதீர்கள். சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவது நல்லது. உத்யோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது. மேலதிகாரி நெருக்கமாக இருந்தாலும், உடன்பணிபுரிபவர்கள் குறை கூறத்தான் செய்வார்கள். வேலைச்சுமை அதிகரிக்கும்.
இந்த ராகு-கேது பெயர்ச்சி உங்கள் ஆழ்மனதில் இருந்த திறமைகளை வெளிக் கொணர்வதுடன் ஓரளவு வசதியையும் தருவதாக அமையும்.
பரிகாரம்:
சென்னையிலிருந்து திருப்பதிக்கு முன்புள்ள ஸ்ரீகாளஹஸ்தியில் அருள்பாலிக்கும் ஸ்ரீகாளத்திநாதரையும், ஸ்ரீஞானப்பூங்கோதையையும் வணங்குங்கள். இதய நோயாளிக்கு உதவுங்கள். நிம்மதி கிடைக்கும்.