Religion Astrology Specialpredictions 1112 21 1111221037_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ச‌னி‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : கும்பம்

Advertiesment
சனிப் பெயர்ச்சி ராசி பலன் கும்பம்
தாராள மனசும், தயவு தாட்சண்யமும் உடைய நீங்கள், பகைவர்க்கும் உதவுவீர்கள். இதுவரை அஷ்டமத்தில் நின்று கொண்டு எல்லோரிடமும் கெட்ட பெயர் வாங்கித் தந்து, பல பிரச்சனைகளில் சிக்க வைத்த சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலக்கட்டங்களில் 9-ம் வீட்டில் அமர்வதால் நமக்கேன் வம்பு என்று ஓரமாய் ஒதுங்கியிருந்த நீங்கள், இனி எல்லாவற்றிலும் முன்னிலை வகிப்பீர்கள். தோல்வி பயத்தால் துவண்டு இருந்த உங்கள் மனதில் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை துளிர்விடும். உங்கள் ராசிநாதன் யோக வீட்டில் வலுவாக அமர்வதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.

இங்கு வந்ததிலிருந்து நிம்மதி இல்லையே என்று நினைத்து குடி இருக்கும் வீட்டை மாற்றுவீர்கள். ஓரளவு வாஸ்து, வசதியான வீடு கிடைக்கும். வார்த்தையால் வடிக்க முடியாத கஷ்டங்களை எல்லாம் அனுபவித்தீர்களே! ஒரு பிரச்சனை தீர்ந்தது என்று நிம்மதி பெருமூ‌ச்சு விடுவதற்குள் மற்றொரு பிரச்சனை புதிதாக முளைத்ததே! வெளியில் சொல்ல முடியாமல் உள்ளுக்குள்ளேயே புழுங்கி‌த் தவித்தீர்களே! மனதில் அமைதியில்லாமல், எந்த ஒரு சந்தோஷத்தையும் அனுபவிக்க முடியாமல் எப்போதும் ஏதேனும் ஒரு கவலை உங்களை வாட்டி வதைத்ததே! உங்களை விட தகுதிக் குறைந்தவர்களுக்கெல்லாம் கைகட்டி பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருந்தீர்களே! சிலர் உங்களை நம்ப வைத்து ஏமாற்றினார்களே! இனி அந்த அவல நிலையெல்லாம் மாறும்.

குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன்-மனைவிக்குள் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். பிள்ளைகளின் அடிமனதிலிருக்கு‌ம் பயத்தை போக்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மனக்கசப்பால் ஒதுங்கி இருந்த உறவினர்கள் இனிப் பேசுவார்கள். உங்கள் பணத்தை ஏமாற்றியவர்கள் இப்போது திருப்பித் தருவார்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நின்றீர்களே! இனி ஒய்யாரமாக செல்வீர்கள்.

நீண்ட கால லட்சியமாக சொந்த வீடு வாங்க வேண்டும் என்றிருந்தீர்கள் அல்லவா, அது இப்பொழுது நிறைவேறும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பங்காளிப் பிரச்சனை தீரும். ஆனால் தந்தைக்கு இரத்த அழுத்தம், முதுகு, முழங்கால் வலி, சிறுசிறு அறுவை சிகிச்சை, அவருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பிதுர்வழி சொத்துப் பிரச்சனை தலைத்தூக்கும். பணம் வந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். பருமனாக இருந்த நீங்கள், பார்ப்பதற்கு அழகாவீர்கள். சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்வதால் இக்காலக்கட்டத்தில் இனந்தெரியாத கவலை, ஏமாற்றம், பொருள் இழப்பு, வாகன விபத்து வந்துச் செல்லும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் திருதியாதிபதியும்-ஜீவனாதிபதியுமான செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனி பகவான் செல்வதால் இக்காலக் கட்டத்தில் கம்பீரமாகப் பேசி காரியம் முடிப்பீர்கள். சகோதர‌ர்களால் பயனடைவீர்கள். புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. என்றாலும் 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்ரமடைவதால் அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி முழுமையடையும். தாய்வழியில் ஆதரவுப் பெருகும்.

9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் நவீன மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். மேல்மட்ட அரசியல்வாதிகளின் தொடர்பு கிடைக்கும். திருமணத் தடை நீங்கும். வேற்றுமதத்தினர், நாட்டினர் உதவுவார்கள்.

12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரை உங்கள் தனாதிபதியும்-லாபாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் இழுபறி நிலை மாறும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். குழந்தை பாக்‌கியம் கிடைக்கும். ஷேர் மூலம் லாபமடைவீர்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.

சனிபகவான் 3-ம் வீட்டை பார்ப்பதால் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வீடு, வாகன வசதிப் பெருகும். சனிபகவான் 6-ம் வீட்டை பார்ப்பதால் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். சொத்து சேரும். வழக்கு வெற்றியடையும். சனிபகவான் லாப வீட்டைப் பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசி சாதிப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. அத்தை, அம்மான், மாமா வகையில் ஆதரவுப் பெருகும்.

வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சனைகளை சந்தித்தீர்களே! அடிக்கடி வேலையாட்கள் மாறிக் கொண்டேயிருந்தார்களே! வேலையாட்கள் விடுப்பில் சென்று உங்களை டென்ஷன் படுத்தினார்களே! இனி பொறுப்புணர்ந்து நடந்துக் கொள்வார்கள். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு தவறாக முதலீடு செய்து கையை சுட்டுக் கொண்டீர்களே! இனி சந்தை நிலவரம் அறிந்து புது சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். தடைபட்ட ஒப்பந்தங்கள் தேடி வரும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். வங்கியில் வாங்கியிருந்த கடனை ஒருவழியாக கட்டி முடிப்பீர்கள். கெமிக்கல், இரும்பு, பாசுமதி அரிசி, எண்ணெய் வகைகளால் லாபம் உண்டு.

உத்‌தியோகத்தில் எந்த மதிப்பும், மரியாதையும் இல்லாமல் ஒரு அடிமைப்போல் வேலை பார்த்தீர்களே! உங்களின் பணியில் திருப்தியில்லை என்று அடிக்கடி உயரதிகாரி புலம்பித்தள்ளினாரே, இனி உங்கள் கை ஓங்கும். உங்களை புரிந்து கொள்ளும் அதிகாரி வந்து சேருவார். உங்களைப் பற்றிய தவறான கருத்துக்கள் விலகும். புது வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பழைய சம்பளப் பாக்கிகளும் வந்து சேரும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புதிய வேலைகள் வந்து அமையும். சக ஊழியர்களின் தொந்தரவுகள் விலகும். பணியிலிருந்த தடைகள் விலகும்.

கன்னிப்பெண்களே! தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கசந்த காதல் இனிக்கும். மறதி, மந்த நிலையிலிருந்து விடுபடுவீர்கள். வயிற்று வலி, முகப்பரு நீங்கும். கல்யாணம் கூடிவரும். பெற்றோர் உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பார்கள். புது வேலை கிடைக்கும். மாணவ-மாணவிகளே! உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். ஆசிரியரின் அன்பைப் பெறுவீர்கள். கலைஞர்களே! வீண் வதந்திகளும், அவப்பெயர்களுமே வந்ததே! இனி உங்களின் படைப்புகளுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். அரசு உதவும்.

இந்த‌ச் சனி மாற்றம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த கத்தியை விலக்குவதுடன் கடின உழைப்பால் சாதிக்க வைக்கும்.

பரிகாரம்:
விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் வ‌ழி‌யி‌ல் பாதியிலுள்ள கல்பட்டு எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசாந்த சனீஸ்வரரை புனர்பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். வாய்ப் பேச இயலாதவர்களுக்கு உதவுங்கள். வாழ்வில் வளம் பெருகும்.

Share this Story:

Follow Webdunia tamil