Religion Astrology Specialpredictions 1112 20 1111220039_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ச‌னி‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : விருச்சிகம்

Advertiesment
சனிப் பெயர்ச்சி ராசி பலன் விருச்சிகம்
மனசாட்சி மாறாமல் நடந்துக் கொள்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பல பரிசு, பாராட்டுகளை பெற்றுத் தந்த சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலக்கட்டங்களில் விரயச் சனியாகவும், ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் இருந்தாலும் நல்ல பலன்களையே தருவார். உங்கள் ராசிநாதனான செவ்வாய்க்கு பகைக் கோளாக வரும் சனி பகவான் ராசிக்கு 12-ல் சென்று மறைவதால் தடைப்பட்டுப் போன காரியங்கள் இனி விரைந்து முடியும்.

ஆனாலும் முன்பு போல் காசை வாரி இறைத்து கண்டபடி செலவு செய்தீர்களே! அந்தப் போக்கை இனி மாற்றிக் கொள்ளுங்கள். ஏழரைச் சனி தொடங்குகிறதே! என்று பதற வேண்டாம். இதுவரை லாப வீட்டில் நின்று கொண்டு உங்கள் ராசியைப் பார்த்த சனிபகவான் மனதில் ஒருவித பதட்டத்தையும், அச்சத்தையும் தந்தாரே! எதிலும் ஈடுபாடற்ற நிலை, நம்பிக்கையின்மையால் துவண்டு போனீர்களே! குடும்பத்தில் சிறு வார்த்தைகள் பேசினாலும் பெரிய தகராறில் போய் முடிந்ததே! ஆனால் தற்சமயம் விரய வீட்டில் வந்தமரும் சனி நிச்சயம் உங்களுக்கு யோக பலனையே தருவார்.

இதுவரை உங்கள் ராசி மீது வீழ்ந்த சனியின் பார்வை இனி விலகுவதால் கம்பீரமாக பேசி மாறுபட்ட அணுகுமுறையால் தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். மனம் விட்டு‌ப் பேசுவீர்கள். பிள்ளைகளை கூடாப் பழக்க வழக்கங்களிலிருந்து மீட்பீர்கள். அவர்களின் விருப்பங்களையும் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். திருமணம், சீமந்தம், காதுகுத்தி போன்ற சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிகவாதிகள், மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும்.

சனிபகவான் 6-ம் வீட்டை பார்ப்பதால் வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். தாய்வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொத்துப் பிரச்சனைக்கு சுமூக‌‌‌‌த் தீர்வு காண்பீர்கள். நட்பு வட்டம் விரியும். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வாகனம் பழுதாகி சரியாகும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். நீதிமன்றம் செல்லாமல் முடிந்த வரை பேசி முடிக்கப்பாருங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் உதாசீனப்படுத்திய உறவினர்கள், நண்பர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் இக்காலக்கட்டத்தில் திடீர் யோகம், பணவரவு, வீடு, வாகன வசதி, வி.ஐ.பிகளின் அறிமுகம் எல்லாம் உண்டாகும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் ராசிநாதனும்-சஷ்டமாதிபதியுமான செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனி பகவான் செல்வதால் இக்காலக் கட்டத்தில் ஆரோக்‌கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். கோபத்தால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். தன்னம்பிக்கை பிறக்கும். பூமி சேர்க்கை உண்டு. சிலர் வீட்டில் கூடுதலாக ஒரு அறை கட்டுவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். ஆனால் மற்றொரு பக்கம் பணவரவு உண்டு. சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். தாய்வழி சொத்து கைக்கு வரும். பெரிய பதவிகள் தேடி வரும். என்றாலும் 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்ரமடைவதால் திடீர் பயணங்கள், வீண் டென்ஷன், பாகப் பிரிவினையால் பிரச்சனைகள் வந்துச் செல்லும். சகோதரகளுடன் மனத்தாங்கல் வரும்.

9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் புதிய நண்பர்களால் வாழ்க்கையில் திருப்பங்கள் உண்டாகும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். வாகனம் வாங்குவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். அடிப்படை வசதிகள் பெருகும்.

உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-தனாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் 12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரை உள்ளக் காலக்கட்டங்களில் தொட்ட காரியம் துலங்கும். குழந்தை பாக்‌கியம் கிடைக்கும். குடும்பத்தில் அடுத்தடுத்து நல்லது நடக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆடை, ஆபரணம் சேரும். பொது விழாக்களுக்கு தலைமை தாங்குவீர்கள். நெடுநாட்களாக தடைபட்டுக் கொண்டிருந்த குலதெய்வ நேர்த்திக்கடனை செய்து முடிப்பீர்கள். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை தொடங்க லோன் கிடைக்கும். புது வேலை கிடைக்கும்.

சனிபகவான் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனால் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்‌திக் கொண்டேயிருக்கும். அவ்வப்போது கைமாற்றாக கடனும் வாங்க வேண்டி வரும். யாருக்கும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். பேச்சால் பிரச்சனை, பார்வைக் கோளாறு வரக்கூடும். சொந்த-பந்தங்கள் மதிப்பார்கள். சனிபகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் வழக்கு சாதகமாகும். நோய் விலகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி வகைப் பிறக்கும். சகோதரிக்கு திருமணம் முடியும். சனிபகவான் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் தந்தைக்கு நெஞ்சு வலி, கை, கால் அசதி வந்து நீங்கும். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். போட்டிகளையும் மீறி ஓரளவு சம்பாதிப்பீர்கள். புது சலுகைத் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. அனுபவமிகுந்த புது வேலையாட்களையும் பணியில் அமர்த்துவீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். மருந்து, கமிஷன், மரவகைகளால் ஆதாயமுண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களுடன் அவ்வப்போது மோதல்கள் வரும்.

உத்‌தியோகத்தில் சூழச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். இரண்டாம் கட்ட உயரதிகாரிகளால் அவ்வப்போது ஒதுக்கப்பட்டாலும் மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள். கொஞ்சம் வேலை‌ச்சுமை அதிகமாகத்தான் இருக்கும். சக ஊழியர்களால் மறைமுகப் பிரச்சனைகள் வந்து நீங்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு தடைபட்டாலும் போராடி பெறுவீர்கள். உத்‌தியோகம் சம்பந்தப் பட்ட வழக்கில் வெற்றி உண்டு.

கன்னிப்பெண்களே! வாடி வதங்கியிருந்த உங்கள் உடலும், முகமும் இனி மலரும். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். திருமண முயற்சி பலிதமாகும். தாயாரை தவறாகப் புரிந்துக் கொள்ளாதீர்கள். மாணவ-மாணவிகளே! வகுப்பறையில் வீண் அரட்டையடிக்காமல் பாடத்தில் கவனம் செலுத்துங்கள். நண்பர்களுடன் சுற்றித்திரிவதை தவிர்க்கவும். கலைஞர்களே! பரிசு, பாராட்டுகள் குவியும். என்றாலும் உங்களின் படைப்புகளுக்கு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.

இந்த சனி மாற்றம் எதார்த்தமான முடிவுகளால் முன்னேற்றத்தையும், விட்டுக்கொடுக்கும் போக்கால் வெற்றியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:
ஆரணி-படவேடு தடத்தில் ஏரிக்குப்பம் எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீஎந்திர சனீஸ்வர பகவானை மகம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். விதவைப் பெண்களுக்கு உதவுங்கள். நிம்மதி கிட்டும்.

Share this Story:

Follow Webdunia tamil