Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2009 ஆங்கில வருட‌ப் பலன் : துலாம்

2009 ஆங்கில வருட‌ப் பலன் : துலாம்
, புதன், 31 டிசம்பர் 2008 (18:24 IST)
தோல்விகளைக் கண்டு துவளாமல் விசையுறு பந்துபோல் மீண்டும் எழும் நீங்கள், கடினமாக உழைத்து முன்னேறத்துடிப்பவர்கள். உங்கள் ராசிநாதன் சுக்ரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் ஓரளவு பணப்புழக்கத்தையும், மகிழ்ச்சியையும் எதிர்பார்க்கலாம். குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். அநாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். மே, ஜீன், ஜீலை மாதங்களில் குரு உங்கள் ராசிக்கு 5-ல் அமர்வதால் பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள்.

பிள்ளை பாக்யம் கிடைக்கும். பட்டதாரியாக இருந்தும் கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலை அமையாமல் அலைந்து, திரிந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். தாழ்வு மனப்பான்மை நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பழைய நண்பர்கள், உறவினர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள். செப்டம்பர், அக்டோபர் மத்திய பகுதியில் பணவரவு அதிகரிக்கும். வாகன வசதி பெருகும். வி.ஐ.பிகளால் ஆதாயம் உண்டு. செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் புதுத் திட்டங்கள் தீட்டுவீர்கள். புது வீடு மாறுவீர்கள். பழைய கடன் பிரச்சனைகள் தீரும். ராகு-கேது சாதகமாக வருட கடைசியில் மாறுவதால் தன்னம்பிக்கை துளிர்விடும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள்.

பிப்ரவரி முதல் மே மாதம் வரை உங்கள் ராசிநாதன் 6-ம் வீட்டிலேயே மறைந்து கிடப்பதால் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வரும். வீண் சந்தேகம், எதிர்பாராத விபத்துகள், கெட்டவர்களின் நட்பு, மூட்டு வலி வந்து நீங்கும். ஜீலை மற்றும் ஆகஸ்டு மத்திய பகுதி வரை செவ்வாய் 8-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் கர்பப்பை கோளாறு, இரத்த சோகை, உடன்பிறந்தவர்களால் செலவுகள், தாயாருடன் வீண் வாக்குவாதங்கள், வாகனப் பழுது வந்து நீங்கும். வழக்குகளில் அலட்சியம் வேண்டாம்.

ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். அக்டோபர் மத்திய பகுதி முதல் நவம்பர் மையப் பகுதி வரை சூரியன் உங்கள் ராசிக்குள் இருப்பதால் அடி வயிற்றில் வலி, கண் எரிச்சல், முழங்கால், கணுக்கால் வலி வந்து நீங்கும். பணம் எவ்வளவு வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். 26.9.2009 ஏழரை சனி தொடங்குவதால் முன்பின் தெரியாதவர்களிடம் அதிகம் பேச வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்கள் காணாமல் போகும். பழைய கசப்பான சம்பவங்கள் மனதை வாட்டும்.

இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வருடபிற்பகுதியில் புது முதலீடுகளை தவிர்க்கவும். வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவது நல்லது. உத்யோகத்தில் கௌரவப் பொறுப்புகள் தேடி வரும். சக ஊழியர்களிடம் மேலதிகாரியைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் அளவிற்கு பொறுமையும், நிதானமும் தேவைப்படும் வருடமிது.

Share this Story:

Follow Webdunia tamil