மனசாட்சி சொல்வதை மறுக்காமல் செய்யும் குணமுடைய நீங்கள், குற்றம் குறைகள் இருந்தாலும் சுற்றத்தாரை அனுசரித்து வாழக் கூடியவர்கள். கொடுத்துச் சிவந்த கைகளையுடையவர்கள். மற்றவர்கள் பின்வாங்கும் செயல்களை தானாக முன்வந்து செய்யக் கூடியவர்கள். உங்கள் ராசிநாதன் செவ்வாயின் சாரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் தன்னம்பிக்கை துளிர்விடும். எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். பிப்ரவரி முதல் மே மாதம் வரை சுக்ரன் உங்களின் பூர்வ புண்ய ஸ்தானத்தில் நிற்பதால் புது மனை புகுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள்.
பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வெகுநாட்களாக வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். சகோதர வகையில் நன்மை கிட்டும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். புது வேலை அமையும். பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் பழைய பிரச்சனைகள் தீரும். மகளுக்கு திருமணம் முடியும். வேற்றுமதத்தவர் உதவுவார். நவம்பர், டிசம்பர் மாதங்களில் சுக்ரன் சாதகமாக இருப்பதால் திடீர் பணவரவு உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். நட்பால் ஆதாயமடைவீர்கள்.
மே, ஜீன், ஜீலை மாதங்களில் குரு 4-ம் வீட்டில் அமர்வதால் பணப்பற்றாக்குறை, வீண் அலைச்சல், மனஉளைச்சல், சிறுசிறு விபத்து வந்து நீங்கும். தாயா£ரின் உடல் நலத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார்களே என்று குடும்ப ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். ஜீலை மையப்பகுதியிலிருந்து, ஆகஸ்டு மையப்பகுதி வரை சூரியன் 9-ம் வீட்டில் இருப்பதால் தலைச் சுற்றல், மூட்டு வலி, பல் வலி தந்தையுடன் கருத்து மோதல்கள், உஷ்ணக் கட்டிகள் வந்து நீங்கும். சேமிப்புகள் கரையும்.
அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். ஆகஸ்டு மையப் பகுதி முதல்-அக்டோபர் மையப் பகுதி வரை செவ்வாய் 8-ம் வீட்டிற்கு வருவதால் வாகன விபத்துகளும், வழக்கால் சிக்கலும் ஏற்படும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். புது சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். போட்டிகளுக்கு பதிலடி தருவீர்கள். கூட்டுத் தொழிலில் பழைய பங்குதாரர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களின் திறமையை கண்டு வியப்பார். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். இந்த புத்தாண்டு கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிக்க வைக்கும்.