காலநேரம் கருதாமல் கடினமாய் உழைக்கும் நீங்கள், எங்கும் எதிலும் புரட்சியை விரும்புவீர்கள். இதுவரையில் உங்கள் ராசிக்குள்ளேயே உட்கார்ந்து குரு உங்களைப் பல கோணங்களில் புரட்டி போட்டாரே, உடலில் தெம்பு இருந்தாலும் மனசு தாங்காமல் அவஸ்தைப்பட்டீர்களே... இப்பொழுது உங்கள் ராசிக்கு குடும்ப வீட்டில் வந்து அமரும் குரு பகவான் புயலை அடக்கி பூந்தென்றலை வீட்டில் வீச வைப்பார். தம்பதியருக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தாம்பத்யம் இனிக்கும்.
எவ்வளவு வந்தும் எதுவும் எடுத்து வைக்க முடியவில்லையே என ஏங்கித் தவித்த உங்கள் கையில் இனி பணம் தங்கும். வீட்டில் சுபகாரியம் நடக்கும். கடன்காரர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினீர்களே, அந்த நிலை மாறும். முன்கோபத்தால் நல்ல நண்பர்களையெல்லாம் இழந்தீர்களே, இனி நண்பர்கள், உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உங்களின் தியாக உணர்வை புரிந்து கொள்வார்கள்.
குரு பகவான் ஆறாவது வீட்டை பார்ப்பதால் பழைய கடன் தீரும். வழக்குகள் சாதகமாகும். பழி, பாவம் விலகும். குரு பகவான் ஏழாவது பார்வையால் எட்டாவது வீட்டை பார்ப்பதால் இழந்த பணம் கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கைக்கு வரும். உங்கள் பிள்ளைகளுக்கு அயல்நாடுகளில் உயர் கல்வி பயிலவும், வேலையில் அமரவும் வாய்ப்பு உண்டாகும்.
06.12.2008 முதல் 20.01.2009 வரை பாக்யாதிபதி சூரியனின் சாரத்தில் குரு செல்வதால் வி.ஐ.பி.கள் அறிமுகமார்கள். திடீர் பண வரவு உண்டு. 21.01.2009 முதல் 21.03.2009 வரை அஷ்டமாதிபதி சந்திரனின் சாரத்தில் செல்வதால் சிறுசிறு விபத்துகள், பொருள் இழப்பு குடும்பத்தில் அமைதியின்மை வந்து நீங்கும். மே, ஜீன், ஜீலை மாதங்களில் தடைபட்டு வேலைகள் முடியும்.
22.03.2009 முதல் 15.12.2009 முடிய உங்கள் பூர்வ புண்யாதிபதி செவ்வாயின் சாரத்திலேயே குரு செல்வதால் நீண்ட நெடுநாட்களாக குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகன் நல்ல வழிக்கு திரும்புவார். நல்ல வேலையில் அமர்வார். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் விலகும். புதிய வாகனம் வாங்குவீர்கள். சுற்றுவட்டாரத்தில் புகழப்படுவீர்கள். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் சிபாரிசு செய்யப்படும்.
வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடி வருவார்கள். பழைய பாக்கிகளை எளிதாக வசூலிப்பீர்கள். கமிசன், ஏஜென்ஸி, மருந்து, உணவு, பைனான்ஸ் வகைகளால் ஆதாயமடைவீர்கள். விலகிப்போன பங்குதாரர்கள் தங்கள் தவறை உணர்வார்கள். ஷேர் அதிக லாபம் தரும்.
உத்தியோகத்தில் வீண் பழி சுமத்தினார்களே, எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுப் பார்த்தும் பாராட்டு கிடைக்காமல் போனதே, இனி புதிய பொறுப்புகள் தேடி வரும். கமிட்டியில் இடம் பிடிப்பீர்கள். இதைவிட வேறு நல்ல வேலைக்குச் செல்லலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தீர்கள். சரியான வாய்ப்பில்லாமல் தள்ளிப் போட்டீர்கள். இப்போது கூடுதல் சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். அலுவலக சூழ்நிலை அமைதி தரும். அடிகடி ஏற்பட்ட இடமாற்றத்தால் குடும்பத்தை விட்டு பிரிந்திருந்த நீங்கள், இப்போது சொந்த ஊருக்கே மாறி குடும்பத்தினருடன் சேர்வீர்கள்.
சோர்ந்திருந்த கன்னிப் பெண்கள் இனி உற்சாகத்துடன் காணப்படுவார்கள். தடைபட்ட படிப்பை மீண்டும் தொடருவார்கள். தோலில் இருந்த நமைச்சல், முகப்பரு, பசியின்மை விலகி முகத்தில் தேஜஸ் கூடும். விரும்பியவரை மணம் முடிப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வமே இல்லாமல் மந்தமாக இருந்த நிலை மாறும். அறிவுப்பூர்வமான கேள்விகள் கேட்டு ஆசிரியர்களின் அன்பைப் பெறுவார்கள். வகுப்பில் முதல் மதிப்பெண் பெறுவார்கள். அரசாங்கத் தேர்வுகளில் அதிக விழுக்காடு பெறுவார்கள்.
கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தும் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போனதே. இனி பிரகாசிப்பார்கள். பாராட்டுடன் பண முடிப்பும் கிடைக்கும்.
இந்த குரு மாற்றம் வாழ்வில் புது அத்தியாயத்தை தொடங்கி வைப்பதுடன், அடிப்படை வசதி வாய்ப்புகளையும் பெருகச் செய்யும்.
பரிகாரம் :
திருவாரூக்கு அருகிலுள்ள திருக்கீழ்வேளூரில் (கீவலூர்) வீற்றிருக்கும் ஸ்ரீ அட்சயலிங்கேஸ்வரரையும், ஸ்ரீ தட்சணாமூர்த்தியையும் உத்திரம் நட்சத்திரம் நடைப்பெறும் நாளில் சென்று வணங்குங்கள். தாயில்லாப் பிள்ளைக்கு உதவுங்கள்.