எப்போதும் ஏணியாக இருந்து மற்றவர்களை ஏற்றிவிடும் நீங்கள், அன்புக்கு அடிபணிவீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் உட்கார்ந்து கொண்டு உங்களை பலவகையிலும் அவமானப்படுத்தி, கெட்ட பெயரையும் வாங்கித் தந்த குரு பகவான் இப்போது லாப வீடான பதினோறாவது வீட்டிற்கு வருவதால் எதிலும் வெற்றி கிடைக்கும். பதுங்கிக் கிடந்த நீங்கள், இனி பம்பரமாக சுழல்வீர்கள்.
எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். கடன்காரர்களை கண்டு அஞ்சவேண்டாம். உங்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருந்தார்களே! இனி உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன்-மனைவி பிரிந்திருந்தீர்களே! இப்பொழுது ஒன்று சேர்வீர்கள். தாம்பத்யம் இனிக்கும். மனைவி வழி உறவினருடன் இருந்த மோதல் போக்கு நீங்கும்.
உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டை குரு பார்ப்பதால் மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். வாங்கிய கடனைத் திருப்பித் தருவீர்கள். எதிரிகள் அடங்குவார்கள். கால் வலி, தலை வலி நீங்கும். நெஞ்சுவலியால் பயந்தீர்களே, உடல்நலம் சீராகும். மருத்துவச் செலவுகள் குறையும்.
மூன்றாம் வீட்டை குரு பார்ப்பதால் இளைய சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் விலகும். விலையுயர்ந்த நகைகள், ஆடியோ-வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். எந்த வேலையில் போய் சேர்ந்தாலும் நிலைக்க முடியாமல் அவஸ்தைப் பட்டீர்களே! இனி நீங்கள் விரும்பியபடி நல்ல வேலை கிடைக்கும். கூடுதலாக சம்பாதிக்க வழிவகை பிறக்கும்.
மே, ஜூன், ஜூலை மாதங்களில் உங்கள் ராசிநாதனான குரு 12ஆம் வீட்டில் மறைவதால் வீண் அலைச்சல்கள், திடீர் பயணங்கள் அதிகரிக்கும். இருந்தாலும் உங்களின் தன பாக்யாதிபதியான செவ்வாயின் சாரத்தில் குரு செல்வதால் புதிய சொத்துகள் வாங்குவீர்கள். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகள் முழுமையடையும்.
உறவினர், நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாமல் போனதே! இனி குடும்பத்துடன் முதல் நபராய் கலந்து கொள்வீர்கள். ஐந்தாம் வீட்டை குரு பார்ப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகள் கெட்ட பழக்க வழக்கங்களில் இருந்து விடுபடுவார்கள். வேற்று மதத்தவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும்.
வியாபாரத்தில் போட்டிகள் இருக்கத்தான் செய்யும். என்றாலும் வாய் ஜாலத்தால் லாபத்தை பெருக்குவீர்கள். இனி, வாடிக்கையாளர்கள் உங்கள் கடைக்கு தேடி வருவார்கள். வெளியில் நின்ற பாக்கிகள் வசூலாகும். உணவு, புரோக்கரேஜ், கெமிக்கல் மற்றும் கலைத்துறை மூலம் ஆதாயம் அடைவீர்கள். போலி நிறுவனங்களை நம்பி முதலீடு செய்ய வேண்டாம்.
உங்கள் ராசிநாதன் நீச்ச கதியில் செல்வதால் சட்டத்திற்கு புறம்பான வகையில் உங்களை சிலர் அழைத்துச் செல்லக்கூடும். ஏமாறாதீர்கள். கூட்டுத்தொழில் சூடு பிடிக்கும். உத்யோகத்தில் பல கனவுகளுடன் விழுந்து விழுந்து வேலை பார்த்தீர்களே, பதவி உயர்வு கிடைக்கவில்லையே என்று ஏங்கினீர்களே, கவலை வேண்டாம். உடனடியாக பதவி உயரும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். புது வேலை கிடைக்கும்.அதிகாரப் பதவியில் அமர்வீர்கள்.
கன்னிப்பெண்களுக்கு கசந்த காதல் இனிக்கும். தோல் நோய், வயிற்று வலி விலகும். பெற்றோர் உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள். பாதியிலேயே நின்றுபோன படிப்பை தொடர்வீர்கள். வேலையும் கிடைக்கும். மாணவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கும். சில ஆசிரியர்கள் உங்களை குறைத்து மதிப்பிட்டார்களே! சக மாணவர்களின் கேலிக்கு ஆளானீர்களே!
இனி, மறதி விலகும். அதிக மதிப்பெண்கள் எடுத்து ஆசிரியரை வியக்க வைப்பீர்கள். சக மாணவர்கள் மதிப்பார்கள். கலைஞர்களுக்கு, பழைய நிறுவனங்களிடமிருந்து அழைப்பு வரும். கிசுகிசுத் தொல்லைகள் குறையும். நீதிமன்ற வழக்கால் வெளியாகாது இருந்த உங்கள் படைப்புகள் சாதகமான தீர்ப்பால் வெளியாகி வெற்றி நடைபோடும்.
இந்த குரு மாற்றம் திடீர் யோகங்களையும், அதிரடி முன்னேற்றங்களையும் அள்ளித்தருவதாக அமையும்.
பரிகாரம் :
கும்பகோணத்திற்கு அருகே உள்ள திருவியலூரில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ யோகாந்தேஸ்வரரையும், அங்கே அருள்மழை பொழியும் ஸ்ரீ தட்ணாமூர்த்தியையும் மூலம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். இதய நோயாளிகளுக்கு உதவுங்கள்.