சமாதானத்தை விரும்பும் நீங்கள் வம்பு சண்டைக்கு செல்லமாட்டீர்கள். வந்த சண்டையை விடமாட்டீர்கள். எப்போதும் எங்கும் நியாயத்தை பேசுவீர்கள். உங்கள் ராசிக்கு நான்காவது ராசியில் இந்த வருடம் பிறப்பதால் தடைப்பட்ட வேலைகளெல்லாம் உடனே முடியும். எவ்வளவோ பணம் வந்தும் கையில் காலணா கூட தங்காமல் கரைந்து போனதே, இனி அந்த நிலை மாறும். சனி சாதகமாக இருப்பதால் நீண்ட நாள் திட்டங்கள் வருங்காலத்திட்டங்கள் நிறைவேறும். நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
இந்த வருடப் பிறப்பின் போது சுக்கிரன் ஆறாவது வீட்டில் நிற்பதாலும், ராசிக்குள்ளேயே செவ்வாய் நிற்பதாலும், கழுத்து வலி, மூட்டுவலி, வெள்ளைப்படுதல், இரத்த அழுத்தம் அதிகரித்தல் ஆகியன வந்து போகும். உங்கள் ராசியை தொடர்ந்து குரு பார்த்து கொண்டிருப்பதால் மருத்துவச் செலவுகள் வந்தாலும் பெரிய ஆபத்து ஏதும் இருக்காது. வி.ஐ.பி.களின் நட்பு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புது நகை வாங்குவீர்கள். வீடு மாறுவீர்கள் உறவினர்கள் நண்பர்களுடன் இருந்துவந்த கருத்து மோதல்கள் நீங்கும். கொடுத்தப் பணம் திரும்பி வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். வீடுகட்ட வங்கி கடனுதவி கிடைக்கும்.
9.4.2008லிருந்து உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் கேதுவும், எட்டாவது வீட்டில் ராகுவும் அமர இருப்பதால் வீண் செலவுகளைக் குறைப்பது நல்லது. மற்றவர்களின் விவகாரத்தில் அநாவசியமாக மூக்கை நுழைக்க வேண்டாம். உடன்பிறந்தவருடன் இருந்துவந்த மோதல் போக்கு நீங்கும். மே மாதத்தில் செவ்வாய் உங்கள் ராசியை விட்டு விலகுவதால் முன் கோபம், வாக்குவாதங்கள் நீங்கும் இரத்த அழுத்தம் சீராகும். பழைய பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
ஜீலை, ஆகஸ்ட் மாதத்தில் ஷேர் மூலம் பணம் வரும். அரசாங்கத்தாலும் அனுகூலம் உண்டாகும். நவம்பர் மாதத்தில் பிள்ளைகளின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். அவர்களின் பொது அறிவுத்திறனை மென்மேலும் வளர்ப்பீர்கள். உங்கள் மகனுக்கு பல இடத்தில் வரன் பார்த்தும் ஒரு இடத்தில் கூட அமையவில்லையே என வருந்தினீர்களே! இனி நல்லதொரு வரன் அமையும். திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். கனவுத்தொல்லை, தூக்கமின்மை வந்துநீங்கும்.
வியாபாரத்தில் பிப்ரவரி, ஜுன், ஜுலை மாதங்களில் நல்ல லாபம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் சுமுகமான நிலை ஏற்படும். வேலையாட்களை மாற்றுவீர்கள். அனுபவமிகுந்த புது வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். பழைய சரக்குகளை புது யுக்தியால் தூற்றித் தீர்ப்பீர்கள். பங்குதாரர்கள் முழு ஒத்துழைப்பு தருவார்கள். அரசாங்க கெடுபிடிகள் தளரும். உத்யோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வை இந்த வருடத்தில் எதிர்பார்க்கலாம். உடன் பணிபுரிபவர்களிடையே நிலவிவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வலிய வந்து நட்புறவாடுவார்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து புது வாய்ப்புகள் தேடி வரும்.கன்னிப் பெண்கள் மன நிறைவுடன் காணப்படுவார்கள். கல்யாணம் சிறப்பாக நடந்து முடியும். மாணவ, மாணவிகளுக்கு சோர்வு, மறதி, மந்தம் விலகும். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். கலைஞர்களுக்கு கிசுகிசுத்தொல்லைகள் நீங்கும்.
பரிகாரம் :
திண்டிவனம் அருகிலுள்ள மயிலம் எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீ முருகப்பெருமானை சஷ்டி திதியில் மாவிளக்கில் தீபம் ஏற்றி வணங்குங்கள்.