தன்மானம் மிக்க நீங்கள், எதிர்ப்புகள் பல இருந்தாலும் கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். கடலளவு அன்பு கொண்டவர்கள். உங்கள் ராசிக்கு எட்டாவது ராசியில் இந்த வருடம் பிறப்பதால் கொஞ்சம் செலவுகள் இருந்தாலும் வருமானமும் அதிகரிக்கும்.
சுக்கிரன் சாதகமாக இருப்பதால் தன்னம்பிக்கை துளிர்விடும். தடைபட்டு வந்த பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்குள் வெறுப்பும், சண்டையும் பிரிந்திடுவோம் என்ற அளவுக்கு இருந்ததே, அந்த நிலைமை போய் இனி நகமும் சதையுமாக இணைவீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களெல்லாம் முன்பு போல் ஒதுங்கி நிற்காமல் இனி வலிய வந்து பேசுவார்கள். பிள்ளைகளின் பிடிவாத குணம் விலகும். இனி பொறுப்பாக நடந்துகொள்வார்கள். வேலை கிடைக்கும். உங்கள் மகளுக்கு நல்ல வரன் உடனே அமையும். சகோதர, சகோதரிகள் உங்களின் தியாக உணர்வைப் புரிந்துக் கொள்வார்கள். புது வண்டி வாங்குவீர்கள்.
9.4.2008லிருந்து உங்கள் ராசியை விட்டு ராகு விலகுவதால் உடல் நலம் சீராகும். பண வரவு அதிகரிக்கும். வெளிச்சம் இல்லாத, அடிக்கடி மின்சாரம் தடைபடும் வீட்டில் இருந்தீர்களே! இனி காற்றோட்டமான, நல்லவர்கள் வாழும் இடத்திற்கு வீடு மாறுவீர்கள். பழுதான மின்சார, மின்னணு பொருட்களை வீசி விட்டு புதுசு வாங்குவீர்கள். விருந்தினர் வருகை கூடும். குரு சாதகமாக இருப்பதால் வெளிவட்டாரத்தில் உங்களைப் பற்றிய இமேஜ் உயரும். கோயில் திருவிழாவை முன்னின்று நடத்துவீர்கள். வழக்குகளில் தாமதமில்லாமல் வெற்றி கிடைக்கும். பிரார்த்தனைகளை நிறைவேற்ற புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் சொத்து விவகாரங்களில் சுமுகமான நிலைக் காணப்படும். வியாபாத்தில் போட்டிகளுக்கு பதிலடி கொடுப்பீர்கள்.
எத்தனையோ புது புதுத் திட்டங்கள் இருந்தும் செயல்படுத்த சரியான வசதி வாய்ப்பில்லாமல் தவிர்த்தீர்களே! இனி இந்த நிலைமாறும். வேற்று நாட்டவரால் ஆதாயம் உண்டாகும். உத்யோகத்தில் வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு உடனே கிட்டும். அற்புதமான நல்ல வாய்ப்புகளும் தேடிவரும். கலைத்துறையினர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். சம்பளம் உயரும். கன்னிப் பெண்களுக்கு கல்யாணப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் தரும். மாணவர்களுக்கு இனி நினைவாற்றல் அதிகரிக்கும். ஆர்வமாக படிப்பீர்கள். முதலிடம் பிடிப்பீர்கள்.
பரிகாரம் :
பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகரை சதுர்த்தி திதிகளில் சென்று வணங்குங்கள். விநாயகர் அகவல் படியுங்கள்.