Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குருப் பெயர்ச்சி பொதுப் பலன்! கடையனையும் கரையேற்றும் குரு!

குருப் பெயர்ச்சி பொதுப் பலன்! கடையனையும் கரையேற்றும் குரு!
, புதன், 14 நவம்பர் 2007 (13:44 IST)
webdunia photoWD
குரு பகவான் என்று சொன்னாலே புண்ணியம் கிடைக்கும். இவர் பார்வை பட்டால் பாவங்கள் சாம்பலாகும். இவர் நமது ஜாதகத்தில் உச்சம், ஆட்சி, திரிகோணம் பெற்றால் உயர்ந்த அரசுப் பதவி கிடைக்கும். மாசு மரு இல்லாத தேசப் புகழ் நம்மைச் சூழும். அறிவு, நுண்ணறிவு, ஆழ்நிலை தியானம், அண்டமே சிதறி னாலும், கடலே பொங்கினாலும் கலங்காத மனப்பக்குவத்தைத் தருவதெல்லாம் இவர்தான்.

தேவர்களின் தலைவன், அசுரர்களின் எதிரி. வேத, உபநிடதங்களின் சாரமும் இவர்தான். கல்யாணக் காட்சி நடக்க வேண்டுமானால் கதாநாயகனான இவரின் கருணை வேண்டும். பல வீடுகளைக் கடந்து இவர் தனது வில்(தனுசு) வீட்டில் 16.11.2007 வெள்ளிக் கிழமையன்று காலை மணி 4.24க்கு நுழைகிறார்.

வில்லுக்கு விஜயனான, பஞ்சபாண்டவர்களில் நடுவனான, புத்தியுடன் பராக்கிரமசாலியாகவும் திகழ்ந்த அர்ஜூனனை அனைத்திலும் வெற்றி அடையச் செய்தவர் இவர்தான். இனிவரும் ஒரு வருடத்திற்கு விஜய, ஜெய, செந்தில், ராமன், குமார், செல்வன், பிரபாகரன் ஆகிய பெயர் உடையவர்கள் புகழ், பதவி, செல்வம் பெறுவார்கள். அதிகம் பேசப்படுவார்கள்.


நீதிமன்றத்திலே சட்ட நுணுக்கங்களை ஆழமாகச் சொல்லி நீதிபதியே வியக்கும் படி ஒரு வழக்கறிஞர் வாதிடுகிறார் என்றால், சட்டசபையிலோ, நாடாளுமன்றத்திலோ ஒரு மக்கள் பிரதிநிதி தன் தொகுதி மக்களுக்காகவும், நாட்டு நலனுக்காகவும் மாமன்றமே அதிரும்படி பேசுகின்றார் என்றால், அட்சர சுத்தமாக கணீர் குரலில் மந்திரங்களைச் சொல்லி ஒருவர் வேள்வி நடத்துகிறார் என்றால், மனதாலும், உடலாலும் மாசுபடாமல் கணவனே கண்கண்ட தெய்வம் என உத்தமியாக ஒரு பெண் திகழ்கிறாள் என்றால் பெற்றோரை, பெரியோரை, கற்றோரை, வணங்கி கல்வியிலும் ஒரு பிள்ளை கரை காண்கிறான் என்றால், பிறர் சொத்திற்கு ஆசைப்படாமல் நேர்வழியில் ஒருவர் பணம் சம்பாதிக்கிறார் என்றால், ஆசாபாசம், வேஷம், துவேசமில்லாமல் ஒரு சாது ஆசி வழங்குகிறார் என்றால் அங்கெல்லாம், அவர்களிடத்திலெல்லாம் குரு பகவான் அமர்ந்திருக்கிறார் என்று அர்த்தம்.

நிகழும் சர்வஜித்து வருடம், ஐப்பசி மாதம் 30ஆம் நாள் வெள்ளிக்கிழமை (16.11.2007) அதிகாலை 4.24 மணிக்கு, சுக்ல பட்சம் சஷ்டி திதி, உத்திராடம் நட்சத்திரம், கண்மம் நாம யோகம், தைத்துலம் நாமகரணம், நேத்திரம், ஜீவன் கூடிய சித்தயோகத்தில், பஞ்ச பட்சியில், கோழி ஊண் செய்யும் காலத்தில் குரு பகவான், விருச்சிகராசியிலிருந்து தனது கோதண்ட வீடான தனுசு ராசிக்குள் ஆட்சி பெற்று அமர்கிறார். அவர், ஏறக்குறைய 30.11.2008 வரை தனது வீட்டில் அமர்ந்து கதிர் அலைகளைச் செலுத்துவார்.

ஆதலால் அரசியலில் அதிரடி மாற்றங்கள் வரும். திரை மறைவில் சிலர் கை கோர்ப்பார்கள். எதிரும் புதிருமாக இருந்த சில தலைவர்கள் ஒன்று சேர்வார்கள். மத்தியிலும், மாநிலத்திலும் மாற்றங்கள் வரும். தலைமைப் பதவி வகிப்போர் அதை விட்டு விலகுவர். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும். நாட்டை ஆள்பவர்களிடம் பழிவாங்கும் உணர்வு கூடும். 23.4.2008 முதல் 16.8.2008 முடிய உள்ள கால கட்டங்களில் அரசியலில் திடீர் மாற்றங்களும், இன, மத மோதல்களும், பதவி இழப்புகளும், காவல், நீதித்துறையில் சலசலப்புகளும் வரும்.

இயற்கை சீற்றங்களும், விபத்துகளும் அதிகரிக்கும். நாட்டில் மறைமுக நெருக்கடி நிலை உருவாகும். பல மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும்.

நாட்டின் பொருளாதாரம் உயரும். தனி மனித வருமானம் அதிகரிக்கும். பசி, பட்டினியால் வாடுவோரின் எண்ணிக்கை குறையும். நவீன ஏவுகணைகள் விண்ணில் பறக்கும். ஜம்மு & காஷ்மீர், ஆந்திரா, அஸ்ஸாம், மகாராஷ்டிரா மாநிலங்கள் பாதிப்புக்குள்ளாகும். நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த இராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படும். புதிய கனிம, கரிம வளங்கள் கண்டறியப்படும். பெரும் பணக்காரர்களின் கை ஓங்கும். சில அரசியல் தலைவர்கள் வணிகர்களின் கட்டுப்பாட்டில் இயங்குவதால் சில வியாபாரிகள் தேய்வர். பாரம்பரிய கலைகள், பண்பாட்டுச் சின்னங்கள் நலிவடையும்.

இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரிக்கும். வேலையில்லாத் திண்டாட்டம் தீரும். நீதிபதிகள் யாருக்கும் அஞ்சாமல் தீர்ப்பு தருவார்கள். அரசியல் தலைவர்கள் இந்த தீர்ப்பால் பாதிக்கப்படுவார்கள். வழக்கறிஞர்களின் வருமானம் கூடும். தேடப்பட்டுவரும் முக்கிய குற்றவாளிகள் சிக்குவார்கள்.

ஈழத்தில் அமெரிக்கத் தலையீட்டால்...!

webdunia
webdunia photoWD
மாணவர்களின் பாடச் சுமைகள் குறையும். கல்விக்கூடங்களில் செயல்முறைக் கற்றல் ஊக்குவிக்கப்படும். சர்வதேச அளவில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். விவசாயத்திற்கு முக்கியத்துவம் அதிகரிக்கும் என்றாலும் விவசாயிகள் வேறு வேலைத் தேடி நகரத்திற்கு இடம் பெயர்வார்கள். வெளிநாட்டிற்கு செல்வோர் எண்ணிக்கை ஒரு பக்கம் உயர்ந்தாலும் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பணிபுரிவோரில் பலர் இந்தியா திரும்புவர். கணினி துறை மோகம் குறையும். கட்டிடம், வாகனம், மருத்துவம் தொடர்பான படிப்புகள் விறுவிறுப்பாகும்.

பாகிஸ்தானில் கலவரம் தொடரும். ஈழத்தில் அமெரிக்காவின் மறைமுக தலையீட்டால் அங்குள்ள தமிழர்களின் நீண்டநாள் கனவு நனவாகும். கோதண்டத்தில் குரு வந்து அமர்வதால் ராமர் பாலம் தகர்க்கப்பட மாட்டாது. சேதுத்திட்டம் மாற்றுப் பாதையில் நிறைவடையும். தீவிரவாதிகள் உலகெங்கும் வலுவடைவார்கள். இந்தியாவில் சிறுபான்மை இனத்தவர் வளர்வர். மதமாற்றம் அதிகமாகும். வைணவத் தலங்கள் வளரும். நீரிழிவு, புற்றுநோய், எலும்புவமுறிவு, மூட்டு நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயரும். இதய நோய் மற்றும் சிறுநீரக பாதிப்பிற்கு மாற்று எளிய வழி கண்டறியப்படும்.

பொழுதுபோக்குத் தலங்கள் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்படும். மின்னணு சாதனங்களின் விலை, வாகனங்களின் விலை, பூமி விலை குறையும். சிமெண்ட் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும். தங்கம், பெட்ரோல், டீசல் விலை கூடும். அரசு வங்கிகளின் வாராக் கடன்கள் வசூலாகும். தனியார் இன்சூரன்ஸ், வங்கிகள் வலுவடையும். விவாகரத்து பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். முதிய வயதில் பிள்ளை பெறுவோர் அதிகரிப்பர். ஆண் குழந்தை பிறப்பு அதிகரிக்கும். பேராசிரியர்கள், ஆசிரியர்கள் சமூகத்தின் பெரிய பதவியில் அமர்வர். சன்னியாசிகள் கை ஓங்கும்.

குரு பகவான் 16-11-2007 முதல் 15-01-2008 முடிய கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்திலும், 16-01-2008 முதல் 30-03-2008 முடிய மற்றும் 6-07-2008 முதல் 10-11-2008 வரை பூராடம் நட்சத்திரத்திலும், 31-03-2008 முதல் 05-07-2008 முடிய மற்றும் 11-11-2008 முதல் 29-11-2008 முடிய உள்ள காலத்தில் உத்திராடம் நட்சத்திரத்தில் பயனளிக்கிறார்.

இந்த குருப் பெயர்ச்சியினால் மக்களின் அடிப்படை வருமானம் அதிகமாகும். கிராமங்கள் செழிக்கும். மக்கள் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொள்வர். கடையனுக்கும் (சமூகத்தின் அடித்தட்டில் வாழ்போருக்கும்) கடைத்தேற்றம் உண்டாகும்.


Share this Story:

Follow Webdunia tamil