மீன ராசி குருப்பெயர்ச்சிப் பலன்கள்
-ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்
அமைதியை விரும்பும் நீங்கள் ஆர்ப்பாட்டமில்லாமல் சாதிப்பவர்களே. எதிர்மறையாக யோசித்து நேர்மறையாக செயல்படும் நீங்கள், யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டீர்கள். அழுத்தமான கொள்கை கோட்பாடுகளுடன் அறவழியில் செல்வீர்கள். தானும் மகிழ்ந்து தன்னைச் சுற்றியிருப்பவர்களையும் சுகம் பெறவைப்பவர்களே, சமூக அவலங்களை சாடுபவர்களே, யாருடைய தயவுமில்லாமல் தனித்து நின்று போராடி தனக்கென்ன தனி சகாப்தத்தை உருவாக்கிக் கொள்பவர்களே...
எங்கும், எதிலும் புதுமையை புகுத்துபவர்களே! அவ்வப்போது தீவிர சிந்தனையில் மூழ்குபவர்களே! மனசாட்சிக்கு மாறாக நடந்துகொள்ளாதவர்ளே! பணம் வந்த போதும் பண்பாடு கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்காதவர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 9வது வீட்டில் உட்கார்ந்து அடிப்படை வசதி வாய்ப்புகளை உயர்த்திய குரு பகவான் இப்போது 10வது வீட்டில் நுழைவதால் நீங்கள் இனி பணிவாக நடந்து கொள்ள வேண்டி வரும். குடும்பத்தினரிடம் மனம் விட்டுப்பேசக் கூட முடியாமல் தத்தளித்தீர்களே! இனி அவர்களுக்காக அதிக நேரம் ஒதுக்குவீர்கள். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.உங்கள் இருவருக்குமிடையே கலகத்தை ஏற்படுத்திய உறவினர்கள்,நண்பர்களை புறம் தள்ளுவீர்கள்.
பணப் பற்றாக்குறை விலகும்.பழைய கடனையெல்லாம் தந்துவிட்டு சேமிக்கவும் தொடங்குவீர்கள். விலையுயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வழக்கம் போல வெளிப்படையாக பேசிக்கொண்டிருக்க வேண்டாம். அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கப் பாருங்கள். உறவினர்களுக்கு மத்தியில் ஒருபடி உயர்ந்து காணப்பட வேண்டுமென அவ்வப்போது நினைத்தீர்கள், நினைத்தபடி முன்னேறிக் காட்டுவீர்கள். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனைகளும் அவ்வப்போது மனதில் அலைபாயும். குழந்தை இல்லையென வருந்திய தம்பதியர்களுக்கு இனி குழந்தை பாக்கியம் உண்டாகும்.
பிள்ளைகள் பொறுப்பின்றி நடந்து கொண்டார்களே! மற்ற பிள்ளைகளுக்கு மத்தியில் நம் பிள்ளையும் முன்னேற மாட்டானா! என்று அவ்வப்போது கனவு கண்டீர்கர்களே! இனி அவையாவும் நனவாகும். உங்கள் மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்தி முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களை உயர்த்துவதற்காக பெரும்பாடுபட்டீர்களே! அதற்கு பயன் ஈப்பொழுது கிட்டும்.இனி உங்களின் தியாக உணர்வை புரிந்துக் கொண்டு மகிழ்வார்கள்.
பூர்வீகச் சொத்துச் சிக்கல் சுமுகமாக முடியும். பேச்சில் கம்பீரம் பிறக்கும். உங்களைப் பற்றி விமர்சனங்கள் கடுமையாக வரும். சாட்சிக் கையெழுத்து யாருக்காவும் இடவேண்டாம். நீங்கள் சொல்லாததையெல்லாம் சொன்னதாக சொல்வார்கள். அதைக் கேட்டு அதிர்ச்சியடையாதீர்கள். வி.ஐ.பி.களின் நட்பு கிடைக்கும். அவர்களால் தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். மனதில் பல ஆசைகள் இருந்தும் அதனை நிறைவேற்ற முடியவில்லையே என அவ்வப்போது வருந்தினீர்களே! இனி ஒவ்வொன்றாக நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார்,கெட்டவர் யார் என்பதை உணருவீர்கள்.
பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெகுநாட்களாகப் போக நினைத்தும், தடைபட்டு வந்த குலதெய்வ கோவிலுக்குச் சென்று வருவீர்கள். வேற்று மதத்தினர்கள் பக்க பலமாக இருப்பார்கள். உங்களைக் கண்டு ஒதுங்கிச் சென்றவர்களெல்லாம் இனி வலிய வந்து உறவாடுவார்கள். நட்பு வட்டாரம் விரியும். வருமான வரிக் கணக்கை சரிபார்த்து அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடனே செலுத்துங்கள். நீதிமன்ற வழக்குகளில் அலட்சியப் போக்கு வேண்டாம். வெளிநாட்டுப் பயணம் உண்டு. சமுக நலப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். அக்கம், பக்கம் வீட்டாரிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும்.
வியாபாரத்தில் உங்களின் ஆலோசனையாக இருந்தாலும், மற்றவர்களின் ஆலோசனையாக இருந்தாலும் இருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. புது யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவீர்கள். வராது என்றிருந்த பழைய பாக்கிகளெல்லாம் இனி வசூலாகும்.
உத்யோகத்தில் உங்களின் திறமைக்கு பலவிதத்திலும் சோதனைகள் வந்ததல்லவா! எத்தனை முறை மேலிடத்தில் சொல்லியும் சம்பளத்தை உயர்த்தவே இல்லையே! அந்த அவல நிலையெல்லாம் மாறும். சம்பள உயர்வுடன் பதவி உயர்வும் உண்டு. உங்களைப் பற்றி தவறாகவே நினைத்துக் கொண்டிருந்த சக ஊழியர்கள் இனி நட்புறவாடுவார்கள். கண் எரிச்சல், கழுத்துவலி நீங்கும். தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பார்கள்.
கன்னிப் பெண்களே! உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். தாயாருடன் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் வந்துபோகும். காதல் விவகாரங்களில் கவனம் தேவை. புதிய வேலை கிடைக்கும். பெற்றோரின் ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுக்க வேண்டாம். வயிற்று வலி, தூக்கமின்மை வந்துபோகும். மாணவர்களே! நினைவாற்றல் பெருகுவதற்கு அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக் கொள்வார்கள். ஆசிரியர்களின் அன்பைப் பெறுவார்கள். கெட்ட நண்பர்கள் அறிமுகமாவார்கள். கவனமாக செயல்படுங்கள். விளையாட்டு, கவிதை, இலக்கியம் இவற்றில் வெற்றி பெறுவார்கள்.
கலைத்துறையினர்களே! சம்பள விஷயத்தில் கொஞ்சம் கறாராகவே இருங்கள். மூத்த கலைஞர்களைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம். அவ்வப்போது வீண் வதந்திகள் வரக்கூடும். எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடி வரும்.
இந்த குரு மாற்றம் உங்களின் பலம் பலவீனத்தை உணரவைப்பதாகவும், உங்களைச் சுற்றியிருப்பவர்களின் உள்மனதை அறிந்து கொள்ளும் வாய்ப்பை தருவதாகவும் அமையும்.
பரிகாரம்: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள தக்கோலம் எனும் ஊரில் வீற்றிருக்கும் சிவபெருமானையும், அளவற்ற அருள் சுரந்து கொண்டிருக்கும் ஸ்ரீ தட்சணாமூர்த்தி பெருமானையும், பூரம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவுங்கள். ஏழை மாணவனுக்கு நோட்டு, புத்தகம் வாங்கிக் கொடுங்கள். வளம் பெருகும்.