Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகர ரா‌சி குருப்பெயர்ச்சிப் பலன்கள்

-ஜோ‌திட‌ ர‌த்னா முனைவ‌ர் க.ப. ‌வி‌த்யாதர‌ன்

Advertiesment
மகர ரா‌சி குருப்பெயர்ச்சிப் பலன்கள்
, புதன், 14 நவம்பர் 2007 (12:26 IST)
webdunia photoWD
மாறாத மண்வாசமும், மற்றவர்களை மதிக்கும் குணமும், யாருக்கும் அஞ்சாமல் ஒளிவுமறைவுகளின்றி உண்மையைப் பேசும் உள்ளன்பாளர்களே, யாரிடமிருந்தும் எதையும் இலவசமாக பெற விரும்பாதவர்களே, சொன்ன சொல்லைக் காப்பாற்ற சொந்த பந்தங்களை இழந்தவர்களே, உலகமே ஒன்று கூடி ஒரு குடையின் கீழ்நின்று எதிர்த்தாலும் ஓடி ஒளியாமல் வீரம் காட்டி நிற்பவர்களே, சடங்குகள், சம்பிரதாயங்களைக் கடந்து எதிலும் புதுமையை புகுத்துபவர்களே...

இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்திருந்த குரு பணத்தை தருவதைப்போல் தந்து, பலவழிகளில் செலவுகளையும் தந்து உங்களை திண்டாட வைத்தார். இப்போது விரைய வீடான 12ஆம் வீட்டில் வந்தமரும் குரு பலவழிகளில் உங்களை முன்னேற்றுவார்.

குரு தன் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் உங்களுக்கு நல்லதே நடக்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாமல் மனம் வருந்தினீர்களே, பணம் வந்தும் கையில் தங்கவில்லையே, மென்மேலும் கடன் ஏறிக்கொண்டே போகிறதே, அதனை அடைக்கக்கூட வழியில்லையே என வருந்தினீர்கள். இனி குடும்ப வருமானம் உயரும். எதிர்பாராத பண வரவு உண்டு.

குடும்பத்தில் எப்போது பார்த்தாலும் சலசலப்புகள் வந்து நிம்மதியில்லாமல் இருந்தீர்களே, இனி சந்தோஷம் நிலைக்கும். குடும்பத்தில் எல்லோரையும் அனுசரித்துப் போவீர்கள். உங்கள் வார்த்தையை அனைவரும் மதிப்பார்கள். நல்ல வேலை கிடைக்கும். கை நிறையச் சம்பாதிப்பீர்கள். தொல்லை கொடுத்து வந்த அதிக வட்டிக் கடனை சிறிது சிறிதாக பைசல் செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாத குணம் தளரும். உங்கள் மீது பாசமழை பொழிவார்கள். கெட்ட நண்பர்களையும், கெட்ட பழக்கங்களையும் அறவே ஒதுக்கித் தள்ளுவார்கள்.

உங்கள் மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணத்திலிருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். நீங்கள் எதிர்பார்த்தபடியே நல்ல மாப்பிள்ளை வந்தமைவார். மகன் வேலையில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கிறாரே எனறு அவ்வப்போது வேதனையடைந்தீர்களே,இனி பொறுப்பு வந்து நல்ல வேலையில் அமர்வார். விலகிச் சென்ற உறவினர்களும், நண்பர்களும் இனி உங்களின் வளர்ச்சியைக் கண்டு தேடிவந்து பேசுவார்கள்.

சகோதர,சகோதரிகளிடையே இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். வெளி வட்டாரத்தில் உங்களைப் பற்றி பெருமையாகப் பேசுவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். உங்களை ஆதரித்துப் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வி.ஐ.பி.களின் உதவியும் கிடைக்கும். சம்பாதித்தும் கையில் நாலணா கூட தங்காமல், அடிக்கடி கை மாற்றாகவும் கடன் வாங்கிக் கொண்டிருந்தீர்களே. இனி நீங்கள் மற்றவர்களுக்குத் தருமளவுக்கு வருமானம் உயரும்.

ஓட்டை வண்டியை வைத்துக் கொண்டு அவஸ்தைப் பட்டீர்களே, இனி புதுரக வாகனத்தில் உலா வருவீர்கள். அரசாங்க காரியத்தை தொட்டாலே சிக்கல்தானே வந்ததே, இனி ஒவ்வொரு வேலையாக விரைந்து முடிப்பீர்கள். வெகுநாட்களாக போக நினைத்த புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அரசியல்வாதிகளுக்கு இருந்து வந்த நெருக்கடிகள் விலகும். அரைகுறையாக நின்றுபோன கட்டிட வேலைகளை இனி விரைந்து முடிப்பீர்கள்.

வழக்குகளிலும் சாதகமான நிலை காணப்படும். வெளிநாட்டுப் பயணம் நல்ல விதத்தில் அமையும். உங்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு தராமல் ஏமாற்றியவர்களிடமிருந்து பணம் கைக்கு வரும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வந்துபோனதே, இனி நட்புறவாடுவீர்கள்.

வியாபாரத்தில் அனுபவமிகுந்த நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கடையை அழகுப்படுத்துவீர்கள்.

உத்யோகத்தில் உங்களைப் பற்றிய அவதூரான பேச்செல்லாம் மாறும். வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு இப்பொழுது கிட்டும். வேலைச் சுமை அதிகரிக்கும். அவ்வப்போது மனச்சோர்வுடன் காணப்படுவீர்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். அயல்நாட்டுத்தொடர்புடைய நிறுவனத்திலிருந்தும் நல்ல வேலை கிடைக்கும்.

கன்னிப்பெண்களுக்கு வயிற்றுவலி, மாதவிடாய்க் கோளாறு நீங்கும். விடுபட்ட இரண்டு, மூன்று பாடங்களை முடிக்க வேண்டுமென்ற ஆர்வமில்லாமல் இருந்தீர்களே, இனி உயர் கல்வியில் வெற்றி பெற்று, நல்ல வேலையில் சென்று அமர்வீர்கள். காதல் கைகூடும். திருமணமும் சிறப்பாக முடியும். மாணவர்களே! உயர்கல்வியில் வெற்றி பெறவேண்டுமென நினைத்தாலும் விளையாட்டில் மட்டுமே அதிக நாட்டம் செலுத்தினீர்களே! இனி படிப்பிலும் கவனம் செலுத்துவீர்கள்.

கலைஞர்களே! தடைப்பட்டு வந்த வாய்ப்புகள் தேடிவரும். கிசு கிசுத் தொல்லைகள், அவமானங்கள் நீங்கி பாராட்டுகள், பண முடிப்புகள் குவியும். உங்களின் படைப்புகளுக்கு நல்ல மதிப்பு கூடும்.

இந்த குரு மாற்றம் கைக்கு எட்டியும், வாய்க்கு எட்டாமலிருந்த நிலையை மாற்றுவதுடன், திடீர்முன்னேற்றங்களையும், சிக்கல்களிலிருந்து விடுபடவைப்பதாகவும் அமையும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் அருகிலுள்ள கோவிந்தவாடி அகரத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ தட்சணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் சென்று அபிஷேகம் செய்து வணங்குங்கள். வஸ்திர தானம் செய்யுங்கள்.மனவளங்குன்றியவர்களுக்கு உணவு கொடுங்கள். நினைத்தது நிறைவேறும்.

Share this Story:

Follow Webdunia tamil