விருச்சிக ராசி குருப்பெயர்ச்சிப் பலன்கள்
- ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்
மந்திரியாக இருந்தாலும், மகானாக இருந்தாலும் மனசாட்சி தவறி நடந்தால் மன்னிக்காதவர்களே, மதியாதார் வாசல் மிதிக்காதவர்களே, கள் விற்று கலப்பணம் சம்பாதிப்பதை விட கற்பூரம் விற்று கால் பணம் சம்பாதிப்பதில் மகிழ்பவர்களே, கடல் கடந்து சென்றாலும் கரையாத ஒழுக்கம் உடையவர்களே, ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதில்ல என்பது போல வாழ்க்கையில் துன்பங்கள் வந்த போதும் துவளாமல் கொள்கையை விட்டுக் கொடுக்காமல் வாழ்பவர்களே...
இதுவரை உங்கள் ராசிக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டு உங்களை பித்தனாய்,பேயனாய் ஆட்டிப்படைத்து விரக்தியின் விளிம்பிற்கே அழைத்துச் சென்ற குருபகவான் இப்போது உங்கள் ராசியை விட்டு விலகுகிறார்.
எந்த வேலையை ஆரம்பித்தாலும் முடியாமல் அரைகுறையாக நின்றுபோனதே! எவ்வளவோ படித்திருந்தும்,அனுபவ அறிவு இருந்தும், சின்னச் சின்ன பிரச்சனைகளைக் கண்டு பயந்தீர்களே! இனி இந்த நிலையெல்லாம் மாறும். அடிமனதில் தன்னம்பிக்கை துளிர்விடும். முடியாது என்று நினைத்து ஒதுக்கி வைத்த வேலைகளையெல்லாம் சர்வசாதாரணமாக இனி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் சின்னச் சின்ன விடயத்துக்கெல்லாம் பெரிய சண்டை எல்லாம் வந்ததே, வீண் சந்தேகத்தால் தம்பதியர்கள் பிரிந்தீர்களே, அந்த அவல நிலை இனி மாறும். கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப்பேசி பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள்.ஒருவரை ஒருவர் இனி புரிந்து கொள்வீர்கள். குறைகூறிய உறவினர்கள், நண்பர்களை இனி ஒதுக்கித் தள்ளுவீர்கள்.
பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். எல்லோரும் நல்லவர்கள் என நினைத்து சிலருக்கு சாட்சிக் கையெழுத்து போட்டு அவதிப்பட்டீர்களே! மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் நீதிமன்றம் வரை சென்று அலைந்தீர்களே! இனி வழக்குகள் சாதகமாகும். அவமானங்கள் விலகி, கௌரவம் கூடும்.
பிள்ளையில்லையென வருந்திய தம்பதியர்களுக்கு இனி பிள்ளைப் பாக்கியம் உண்டு. உங்கள் மகன் கெட்ட பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவார். உங்கள் மகளுக்கு நல்ல வரன் அமையும். சொந்தம், பந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பலமுறை பூமி பூஜை போட்டும் பாதியிலேயே நின்று விட்ட வீடு கட்டும் பணி விரைந்து முடியும். ஒதுக்குப் புறமாக புறநகரில் இருந்த இடத்தை விற்று, முக்கிய வீதியில் சொத்து வாங்குவீர்கள்.
வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். பிரபலங்களின் சுபகாரியங்களில் கலந்து கொள்ளும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். பெரிய பதவிகளுக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும். கன்னிப் பெண்களுக்கு காதலில் இருந்த கசப்புணர்வு நீங்கி காதல் இனிக்கும். உயர் கல்வி பெறுவதில் இருந்த தடை நீங்கும். பெற்றோருக்குப் பாரமாக இல்லாமல் நல்ல வேலை கிடைத்து சம்பாதிப்பீர்கள்.
உடல் ஆரோக்கியம் பிறக்கும்.பழுதடைந்த சொந்த ஊர்க் கோவிலை புதுப்பிப்பீர்கள். மாணவ, மாணவிகளுக்கு இனி மறதி, மந்தம் நீங்கும். லட்சியத்துடன் படித்து அதிக மதிப்பெண்களை குவிப்பார்கள். நினைத்த கல்விப் பிரிவிலும் சேர்வார்கள்.
வியாபாரத்தில் எதற்கெடுத்தாலும் நட்டங்களையேச் சந்தித்த உங்களுக்கு இனி லாபமே கிட்டும். வேலையாட்களை நம்பி ஒன்றும் செய்ய முடியவில்லையே, திடீர் திடீரென விடுமுறையில் சென்று டென்ஷன் படுத்துகிறார்களே,என்ன செய்யவது என குழம்பித்தவித்தீர்களே, இனி வேலையாட்களை மாற்றுவீர்கள் .பங்குதாரர்களிடையே இருந்த சண்டை, கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிரிந்து சென்று தொழில் தொடங்கிய சிலர் மீண்டும் உங்களிடம் வந்து சேர்வார்கள். பகைமை விலகும். வாடகை இடத்திலிருந்து சொந்த இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உணவு, கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ், மூலிகை வகைகளால் அதிக ஆதாயம் அடைவீர்கள். போட்டிகள் குறையும். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
உத்யோகத்தில் எவ்வளவோ உழைத்தும் நல்ல பெயர் கிடைக்கவில்லையே! இனி அந்த நிலைமாறும். உங்களின் திறமையை அறிந்து உயரதிகாரிகள் பாராட்டுவதோடுநில்லாமல், உயர் பதவியிலும் உட்காரவைப்பார்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்திலிருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சம்பளம் கூடும். இழந்த சலுகைகளைப் பெறுவீர்கள்.கலைஞர்கள் அரசால் கௌரவிக்கப்படுவார்கள். நழுவிச் சென்ற வாய்ப்புகள் தேடி வரும்.
இந்த குருமாற்றம் விழுந்து கிடந்த உங்களை விஸ்வரூபம் எடுக்க வைப்பதுடன், அதிரடி முன்னேற்றங்களையும்,அதிக தனத்தையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: போகர் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் பழனிமலை அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகளை உத்திரம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். முடிந்தால் ஒருமுறை பாதயாத்திரை செய்யுங்கள். மணமுறிவு பெற்றவர்களுக்கு உதவுங்கள். நல்லது நடக்கும்.