ரிஷபம் ராசி குருப்பெயர்ச்சிப் பலன்கள்
-ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்
பனியா ,புயலா, வெயிலா, மழையா என பாராமல் என் கடன் பணி செய்து கிடப்பதே என எப்போதும் உழைத்துக் கொண்டே இருக்கும் நீங்கள், காசு பணம் வந்தாலும் கடந்து வந்த பாதையை மறக்க மாட்டீர்கள். ஏணியாக இருந்து மற்றவர்களை ஏற்றிவிடும் நீங்கள், அடுத்தவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு அகம் மகிழ்வீர்கள். அன்புக்கு அடிமையாகும் நீங்கள், ஒருபோதும் அதர்மத்திற்கு துணைப்போக மாட்டீர்கள். புளிப்பு கலந்த இனிப்புச் சுவையை விரும்பும் நீங்கள், இயற்கை உணவால் ஈர்க்கப்படுவீர்கள்.
உங்களது ராசிக்கு 7-வது வீட்டில் நின்ற அட்டமாதிபதியான குரு பகவான், 16.11.2007 முதல் 30.11.2008 வரை 8-வது வீட்டில் அமர்ந்து ஆளப் போகிறார். குரு 8-ல் மறைவதால், கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த ஈகோ பிரச்சனை தீரும். மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். தாம்பத்தியம் இனிக்கும்.
உங்களது ராசி நாதனின் பகைக்கோளான குரு, 8-ல் மறைவதால் நல்லதே நடக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். மற்றவர்களிடம் ஏமாந்த நிலை மாறும். முதுகுக்குப் பின்னால் உங்களை அவமதித்த உறவினர்களும் நண்பர்களும் உங்களின் தயாள மனசைப் புரிந்து கொள்வர். பிள்ளைகளை அவர்களின் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது. மகனால் கொஞ்சம் அலைச்சலும், வீண் செலவுகளும் வரும். மகளுக்கு நல்லது நடக்கும். பிள்ளைகளது நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனமாக இருங்கள்.
யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்து இட வேண்டாம். சொத்து வாங்கும்போது, சம்பந்தப்பட்ட ஆவணங்களை வழக்கறிஞர் மூலம் சரி பாருங்கள். நெடுதூரப் பயணங்களைத் தவிர்க்கப்பாருங்கள். சில சிறு விபத்துகள் வரலாம். உடன் பிறந்தவர்கள் இடையே இருந்த மோதல் போக்கு விலகும்.
பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். சகோதரி வீட்டுத் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். கன்னிப் பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும். உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். கெட்டவர்கள் சிலரும் அறிமுகமாவார்கள். கவனம் தேவை. திருமணத் தடை நீங்கும். அரசாங்க வேலைகள் துரிதமாக முடிவடையும்.
வருமான வரி, சொத்து வரி ஆகியவற்றை முறைப்படி செலுத்துங்கள். அரசியலில் செல்வாக்கு கூடும். பங்குச் சந்தை மூலம் பணம் சம்பாதிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் மதிப்பு கூடும். மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். உங்களை அவதூறாகப் பேசுபவர்களை பொருட்படுத்த வேண்டாம். கௌரவப் பதவிகள் தேடி வரும். வயிற்று வலி, நெஞ்சு வலி ஆகியன நீங்கும். மாணவர்கள் தினந்தோறும் படிப்பது நல்லது. விடைகளை எழுதிப் பாருங்கள். கலைஞர்கள் எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். படைப்புத் திறன் அதிகரிக்கும். மேடைகளில் கௌரவிக்கப்படுவீர்கள்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். போட்டிகள் அதிகமாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பர். புது வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். வியாபார ரகசியங்களை வெளியில் விவாதிக்க வேண்டாம். பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் மூலம் புது ஒப்பந் தங்கள் தேடி வரும். உணவு, இரும்பு மற்றும் நீசப் பொருட்களால் லாபம் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளைப் பார்க்க வேண்டியிருக்கும். கால நேரம் பார்க்காமல் உழைத்ததற்கு பலனாக உயர் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். உங்களது ஆலோசனைகள் ஏற்கப்படும். வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களில் அதிக சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.
இந்த குருப் பெயர்ச்சி அரை குறையாக நின்ற வேலைகளை முடிக்க வைக்கும். செலவுகள் ஏற்பட்டாலும் வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.
பரிகாரம்: தஞ்சை மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் ஆலங்குடியில் உள்ள ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரையும், குரு பகவானையும் வியாழக் கிழமைகளில் சென்று வணங்குங்கள். ஏழைப் பெண்களது திருமணத்துக்கு உதவுங்கள். தடைகள் நீங்கும்.