தமிழ்.வெப்துனியா.காம்: சதுர கிரி மலைக்கு நிறைய பேர் போய்விட்டு வருகிறார். சிலர் அடிக்கடி செல்கிறார்கள். நீங்களும் போய் வருகிறீர்கள். எதற்காக? என்ன காரணம்?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: நமக்கு (தமிழர்களுக்கு) சித்தர்கள் தொடர்பு அதிகம் உண்டு. சித்தர்கள், மகான்கள் இருந்த இடம், நின்ற இடம், படுத்த இடம், நடந்த இடம் என்று நம்மால் உணர முடியுமா? நம்மால் சித்தர்களைப் பார்க்க முடியாவிட்டாலும், சித்தர்கள் நம்மை வந்து பார்ப்பார்களா? ஏனென்றால், நாம் தேகத்துடன் இருக்கிறோம். அவர்கள் ஸ்தூல தேகத்துடன் இருக்கிறவர்கள். ஸ்தூல தேகம் என்பது காற்று வடிவம். இருந்தும் இல்லாதது. தேகம் இருந்தும் இல்லாதது மாதிரி. அந்த மாதிரி இடங்கள் செல்லும் போது நமக்கு ஒரு பரவசம் உண்டாகிறது. அதுமட்டுமின்றி, பெட்ரோல், டீசல் புகையிலிருந்து விடுபட்டு மரங்களுடைய பூரண பிராண வாயுவை நாம் சுவாசிக்கும் போது நமக்குள் இருக்கும் பேட்டரியை சார்ஜ் செய்வது போல் ஆகிறது. பிறகு அங்கிருக்கும் அருவி நீர் இதையெல்லாம் குடிக்கும் போது நமக்கு தெம்பு உண்டாகிறது.
ஆனால், மாறுபட்டச் சூழல் நம்முடைய மனதில் ஒருவிதமான கிளர்ச்சியை உண்டாக்குகிறது. கிளர்ச்சி என்றால், நம்மைப் பற்றி கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. இந்த பரபரப்பான கார், லாரி இந்தச் சத்தத்தில் இருந்து விட்டு விலகி போய் உட்காரும் போது, நம்மைப் பற்றி கொஞ்சம் யோசிக்க வைத்து - Know thy Self - என்று ஷேக்ஸ்பியர் சொல்கிறாரே, உன்னை நீ உணர்ந்து பார், உன்னை நீ திரும்பிப் பார் என்பது போன்று உட்கார்ந்து தியானம் செய்வதற்கு அந்தச் சூழல் நம்மைத் தூண்டுகிறது. அது மாதிரி அங்கு உட்காரும் போது ஒருமுகப்படுத்தக் கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. அந்தச் சூழலில் இருந்து வரும் போது சிந்தனையை கட்டுப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்துவிட்டு இறங்கும் போது நாம் செய்கிற காரியம் எல்லாம் எளிதில் வெற்றியடைகிறது. அதனால் சதுர கிரி மலைக்கு என்று ஒரு தனி சக்தி உண்டு. என்னுடன் ஒருவரை அழைத்து வந்தேன். அவருக்கு யோகா, தியானம் என்று ஒன்றும் தெரியாது. நீங்க வேண்டுமானால் ஏதாவது செய்துகொள்ளுங்கள், நான் சும்மா இந்த மரம், செடி கொடியெல்லாம் சுற்றி பார்ப்பதற்காக வருகிறேன், அதற்காக நான் பக்திக்காக வருகிறேன் என்று நினைக்க வேண்டாம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வந்தார். அங்கு வட்டப்பாறை என்று ஒரு இடம் இருக்கிறது. சதுர கிரி மலையிலேயே இன்னும் உச்சிக்கு போக வேண்டும். அதற்கு வழியெல்லாம் இருக்காது. மிகவும் கடினமான பாதையில் செல்ல வேண்டும். அங்கு போய் உட்கார்ந்த உடனேயே, இல்லை சார் நான் வீட்டிற்கு வரவில்லை இங்கேயே இருந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டார். என்னங்க, எதுவும் இல்லை என்று சொன்னீர்கள் என்றேன். இல்லை, இந்த இடம் ஏதோ என்னை செய்கிறது. எதையோ தூண்டுகிறது என்றார். மலை என்று எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு விருட்சம் இருக்கும். வேப்பமரத்தின் கீழ் உட்கார்ந்தால் அந்தக் காற்றில் அயோடின் இருக்கிறது. அது நமது உடலை சுத்தப்படுத்துகிறது. அரச மரத்தை எடுத்துக்கொண்டால் அதனுடைய குச்சி இருக்கிறதல்லவா சுள்ளி, அதில் மின் காந்த அலைகளே இருக்கிறது. ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால்தான் அரச மரத்தை சுற்றிவந்தால் ஆண்மைத் திறன் வளரும். கர்ப்பப்பை பலவீனமாக இருந்தால் பலமடையும். ஏனென்றால் அந்தக் காற்றிற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது. அதுபோல, அந்த சதுர கிரி மலையில், சதுரம் என்றால் நான்கு, அந்த நான்கு புறங்களிலும் சூழ்ந்து இருக்கக்கூடிய மரங்களில், அந்த விருட்சங்களுக்கு ஒரு தனி சக்தி உண்டு. 80 வயதானவரை பார்த்தால் காலில் விழுந்து கும்பிடுகிறோம். 300 வயதான மரத்தைப் பார்க்கும்போது, அதற்கென்று ஒரு தனி சக்தி இருக்கிறதல்லவா, அதனுடைய காற்று நம்மை பரவசமூட்டுவதல்லாமல், நம்மை உணர வைக்கிறது. தெய்வ வழிபாட்டிற்கு கொண்டு செல்கிறது.