Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பராக் ஒபாமா உயிருக்கு ஆபத்து: ஜோதிடர் கணிப்பு!

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்-

பராக் ஒபாமா உயிருக்கு ஆபத்து: ஜோதிடர் கணிப்பு!
அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன் கணித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

PTI PhotoFILE
ஒபாமா கடந்த 1961 ஆகஸ்ட் 4ஆம் தேதி பிறந்துள்ளார். அவரது ஜனன நேரம் துல்லியமாகக் கிடைக்காவிட்டாலும், பிறந்த தேதியை வைத்துப் பார்க்கும் போது அவர் விசாகம் நட்சத்திரம், விருச்சிக ராசியில் பிறந்துள்ளார் எனத் தெரிகிறது.

ஜோதிடத்தில் ராஜகிரகங்கள் என்று சனி, குருவைக் கூறுவர். இவரது ஜாதகத்தில் 2 கிரகங்களுமே பரிவர்த்தனை (அதாவது சனி வீட்டில் குரு, குரு வீட்டில் சனி) அடைந்துள்ளது.
இது மிகப்பெரிய சிறப்பம்சம். இதன் காரணமாகவே உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு இவர் அதிபராகி உள்ளார்.

விசாகம் நட்சத்திரத்தில் முதல் 3 பாகங்கள் துலா ராசியிலும், 4ஆம் பாதம் விருச்சிக ராசியிலும் வருகிறது. இதில் ஒபாமா துலாம் ராசியில் பிறந்திருந்தால் அத்தனை வல்லமை கிடைத்திருக்காது. எனினும், விருச்சிக ராசியில் அவர் பிறந்த காரணத்தால், விசாகமும், விருச்சிகமும் இணைந்ததால், ஒபாமா அதிபர் பதவிக்கு தேர்வு பெற்றுள்ளார்.

ஆனால் அவரது ஜாதகத்தில் புதன் நீச்சமாகியுள்ளதாலும் (பிறக்கும் போதே), மிதுனத்தில் செவ்வாய் உள்ளதாலும், அந்த செவ்வாய், தனுசில் உள்ள சனியை நேருக்கு நேர் பார்ப்பதாலும், கிடைத்த வெற்றியைத் தக்கவைக்க முடியாமல் போகும்.

நேரடியாகக் கூறவேண்டுமானால், வெற்றி பெற்றுள்ளார் ஆனால் அவரால் முழுமையாக செயல்பட முடியாத அளவுக்கு எதிர்ப்பு அலைகள் கடுமையாக இருக்கும். உயிர்க் கண்டம் ஏற்படக் கூடும். சுட்டுக் கொல்லப்படலாம். விபத்துகள் ஏற்படலாம். 2009ஆம் ஆண்டிலேயே அவருக்கு இந்த பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

அவரது ராசி, அமைப்புகளை வைத்துப் பார்க்கும் போது 2009 செப்டம்பர் சனிப் பெயர்ச்சியும் அவ்வளவு சாதகமாக இல்லை என்பதால், ஒபாமா தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்திலும் பிள்ளைகளால் இடர்பாடுகள் ஏற்படக்கூடும். சுருக்கமாகக் கூற வேண்டுமானால் ஒபாமா முழுக்க முழுக்க எதிர்ப்பை சமாளித்தே அதிபராக செயல்படுவார்.

4 ஆண்டுகள் நீடிப்பாரா: அதிபர் பதவியில் அவர் 4 ஆண்டுகள் நீடிப்பது கடினம். அப்படியே நீடித்தாலும், இடையே சில விபத்துகளை சமாளித்து ஆட்சியில் நீடிக்க வேண்டியிருக்கும். அவரது அதிபர் பதவி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகும்.

நெருங்கிய நண்பர்களாலேயே அவருக்கு பிரச்சனைகள் வரும். சிலர் உள்ளடி வேலைகளை செய்து இவருக்கு எதிராக செயல்படுவர். 2009 ஏப்ரலில் குரு வக்கிரமடைந்து கும்ப ராசிக்கு செல்கிறது. அப்போது உலகப் பொருளாதாரம் சீரடையும். அது முற்றிலுமாக சீரடைய 2010ஆம் ஆண்டு வரை பிடிக்கும்.

இந்தியாவுக்கு சாதகமா: ஒபாமா அதிபர் பதவிக்கு வந்துள்ளதால், இந்தியாவுடனான அமெரிக்காவின் நட்புறவுகள் மேலும் வலுப்படுமா?

நிச்சயம் வலுப்படும். ஏனென்றால் இந்தியா கடகம்; ஒபாமா விருச்சிகம், அதனால் நட்புறவு வலுப்படும். மேலும் இந்தியாவின் நட்சத்திர அமைப்புக்கும், ஒபாமாவின் நட்சத்திரத்திற்கும் சிறப்பான பொருத்தம் இருக்கிறது.

எனினும், அணுசக்தி ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் அவருக்கும், இந்தியாவுக்கும் சில கருத்து வேறுபாடுகள், சிக்கல்கள் ஏற்படலாம்.

Share this Story:

Follow Webdunia tamil