சிம்மச்சனி ஆசியாவை ஆட்டிப்படைக்கும் என்று பல மாதங்களுக்கு முன் தாங்கள் கூறியிருந்தீர்கள். அதே போல் நாட்டின் பல மாநிலங்களில் வெள்ள சேதங்களும், இயற்கை பேரழிவுகளும், குண்டுவெடிப்புகளும் நடந்து வருகின்றன.
கடந்த 13ஆம் தேதி புதுடெல்லியில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த நிகழ்வைப் பற்றி ஜோதிட ரீதியாக ஆழமாகக் கூறுங்களேன்.
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:
பொதுவாக சனி என்பது ஜீவ காருண்ய கிரகமாகும். உயிர்ப்பலியை விரும்பாத கிரகம். ஆனால் பகை வீட்டில் அமரும் போது அதன் தன்மை அப்படியே முழுவதுமாக மாறிவிடும். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று பழமொழிக்கு ஏற்ப சனி சிம்மத்தில் அமர்ந்துள்ளதால் உயிர் பலிகள் தொடர்ந்து வருகிறது.
சிம்மச்சனி எப்போதுமே தீவிரவாதிகளுக்கு உடந்தையாக இருக்கும். அவர்களை தூண்டிவிட்டு புதுப்புது இயக்கங்களை உருவாக்கும். இது தொடரும்.
அரசியல் நிலையில் இருந்து பார்த்தால் இந்த தீவிரவாத நிகழ்வுகள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. பயங்கரவாத நடவடிக்கைகளை மாநில, மத்திய அரசுகளால் ஒடுக்க முடியவில்லை. அவர்களை தடுக்கவோ, ஒழிக்கவோ இன்னும் வழி கிடைக்கவில்லை. இந்த நாளில், இந்த இடத்தில் குண்டுவெடிப்பு அல்லது சதிச்செயல் நடத்துவார்கள் என்று உளவுத்துறை கண்டறிகிறதே தவிர தடுக்க முடியவில்லை என்ற நிலையே உள்ளது.
இதன் விளைவாக தேசிய அளவில் தனித்த புலனாய்வு அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பரிசீலனையில் உள்ளது. எந்த விதமான நடவடிக்கைகளால் பயங்கரவாதத்தை ஒடுக்க முடியும்?
சிம்மத்தில் இருக்கக் கூடிய சனி, தனுசுவில் இருக்கக் கூடிய குரு, கடகத்தில் அமர்ந்துள்ள கேது, மகரத்தில் இருக்கக் கூடிய ராகு, இவை நான்குமே பெரிய கிரகங்கள். ஆனால்..
தற்போது அவை அமர்ந்துள்ள இடங்கள் அவ்வளவு சிறப்பு வாய்ந்தவை அல்ல.
இந்த கிரகங்களின் கூட்டமைப்பின் காரணமாக உலகெங்கும் உள்ள நாடுகளில் உள்ள அரசுகள், ஆட்சிக் கட்டிலில் இருந்தாலும் அதிகாரம் செய்ய முடியாத நிலையிலேயே உள்ளன.
அடுத்ததாக சிம்மத்தில் உள்ள சனி பகை வீட்டில் அமர்ந்திருந்தால், சிம்மச் சனியை குரு பார்க்கிறது. குரு பார்த்தால் கோடி நன்மை என்று கூறப்பட்டாலும் பகை வீட்டில் சனி உள்ளதால், குருவின் பார்வையை அழிவுக்கு சனி பயன்படுத்திக் கொள்கிறது.
அதனால் தான் ஆட்சியில் இருப்பவர்களால் எதையுமே ஆணித்தரமாக செய்ய முடிவதில்லை. சனிப் பெயர்ச்சி நடந்த போது அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸி இருக்கும் என்று கூறியிருந்தேன். தற்போது அதுபோன்ற சூழல் தான் நிலவுகிறது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டால் இந்த விஷயத்தில் ஓரளவு சிறப்பான வெற்றியை பெறலாம். ஆனால் சிம்மச் சனி அது போன்ற நடவடிக்கைகளை நடத்த விடாது.
ஆட்சியில் இருப்பவர்களை சிம்மச் சனி அடக்கி வைக்கும். அரசுக்கு எதிரான பிரிவினைவாதங்கள், எதிர்ப்பாளர்களை ஊக்குவிக்கும். இந்த மாதிரி தருணத்தில் விழித்துக் கொண்டு யார், யாருக்கு எந்தெந்த அமைப்புகளுடன் தொடர்புள்ளது என்பதை கண்டறிந்து அதனை சேகரித்துக் கொள்வது நல்லது.
உளவுத்துறை விழிப்புணர்வுடன் இருந்தால் உலகெங்கும் உள்ள தீவிரவாத, பிரிவினைவாத இயக்கங்கள், தீவிரவாதத்திற்கு யார் தோள் கொடுக்கிறார்கள் என்பதை சிறப்பாக கண்டறியலாம். அதனையும் சனி காட்டிக் கொடுப்பார். யார் குண்டு வெடித்தார், யார் கொடுத்தார்கள் என்பதையும் சனி தெரிவிப்பார்.
தொலைநோக்குப் பார்வையுடன் தீவிரவாதத்தை முழுவதுமாக அழிக்க புலனாய்வு அமைப்புகள் தற்போதிருந்தே ஈடுபடுத்திக் கொள்வது நல்லது. அரசுகள் அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும். அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் அரசுகள் நடவடிக்கை எடுப்பதே தீவிரவாதத்திற்கு தீர்வாக அமையும்.