குழந்தை பாக்கியம் கிடைத்தும் அதனை தக்க வைத்துக் கொள்ள முடியாதவர்களை பற்றி ஜாதகத்தில் முன்னறிய முடியுமா?உலகில் இன்று பலர் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் ஏங்குகின்றனர். ஆனால் அதே தருணத்தில் குழந்தை பாக்கியம் கிடைத்த சிலர் தங்களது குழந்தைகளை வளர்க்க முடியாமல் அரசு காப்பகங்களிலோ, அநாதையாகவே விட்டுவிடுகின்றனர். மேலும் சிலரது குழந்தைகள் பயணத்தின் போதோ அல்லது திருவிழாவிலோ தொலைந்து விடுகிறது.
சமீபத்தில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியில், தருமபுரியில் அரசு தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் கிடைத்த தகவலின்படி கடந்தாண்டு ஆயிரத்திற்கும் அதிகமான பெண் குழந்தைகள் அதன் பெற்றோரால் கைவிடப்பட்டது தெரியவந்துள்ளது.
ஒருவர் ஜாதகத்தை வைத்தே அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமா? அப்படிக் கிடைத்தால் அது நிலைக்குமா? என்பதை கண்டறிய முடியுமா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:
தருமபுரியில் ஆயிரம் பெண் குழந்தைகள் அவர்கள் பெற்றோரால் கைவிடப்பட்டது, இதற்கு கிரக அமைப்புகளே காரணம் (குழந்தை பெற்றுக் கொண்ட பின்னர் அவற்றை புறக்கணிப்பது).
உலகளவில் பெண் குழந்தை பற்றாக்குறை மிக விரைவில் வரப்போகிறது. இதன் விளைவாக ஹோமோ செக்ஸ் உள்ளிட்ட பல அவலங்கள் தொடரும். இப்போதே பல ஜாதிகளில், பெண் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. இதன் காரணமாக ஜாதி விட்டு ஜாதி திருமணங்களும் அதிகரிக்கத் துவங்கியுள்ளன.
நம் நாடு புண்ணிய தேசம். சக்தி வீடு. நம் நாட்டின் ராசி கடகம். பெண் ராசி என்பதும் கடகம் தான். தற்போது இந்த கடகத்தில் பாவ கிரகங்கள் தொடர்ந்து சூழ்ந்து கொண்டிருக்கிறது. சந்திரனை ஜோதிட நூல்கள் பெண் கிரகம் என்று கூறுகிறது. அதாவது பெண் தன்மை அதிகம் உள்ள அல்லது பெண்ணாதிக்க கிரகம் என்று கூறலாம். சுக்கிரனும் பெண்ணாதிக்க கிரகமே.
கடந்த 2001இல் இருந்து கடக ராசியை சனி சூழ்ந்துள்ளது. வரும் 27-9-2009 முதல் கடகத்தை விட்டு முழுவதுமாக விலகுகிறது. அதன் பிறகு தொட்டிலில் பெண் குழந்தை, அநாதைகளாக விடப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிரடியாக குறையும். ஒரு கணக்கெடுப்பு நடத்தினால் கடந்த காலங்களை விட 2001-2009 வரையிலான காலகட்டத்தில்தான் பெண் குழந்தைகள் புறக்கணிப்பு உயர்ந்திருக்கும்.
சேலம், தருமபுரி ஆகியவை தொண்ட மண்டலத்திற்கு உரிய பகுதிகள். இவை சனியின் ஆதிக்கத்தில் வருபவை. தற்போது ஏழரைச் சனி நடைபெறுவதால், அப்பகுதி மக்கள் தவறான வகையில் பிள்ளைப்பேறு உள்ளிட்ட சில அசிங்கமான நிகழ்வுகளை சனி தனது கெட்ட கதிர்வீச்சின் மூலம் அப்பகுதி மக்கள் மீது செலுத்துகிறார். வரும் 27-9-09க்கு பிறகு பெண் பிள்ளைகளின் அருமை அப்பகுதி மக்களுக்கும் தெரியத் துவங்கும். அதன் பிறகு புறக்கணிக்கப்படும் எண்ணிக்கை குறையும்.
குழந்தைப் பிறப்பு பாதிப்பு!
ஜோதிட ரீதியாக ஒருவரது ஜாதகத்தில் 5ஆம் இடம் குழந்தை ஸ்தானமாகும். ஐந்தாம் இடத்தில் இரண்டு அல்லது மூன்று பாவ கிரகங்கள் இருந்தால் குழந்தை உருவாகாது. அப்படி உருவானால் தவறாக உருவாகும். நேரடியாகக் கூற வேண்டுமென்றால் கணவராக ஒருவர் இருந்தாலும், ஆனால் குழந்தை வேறு ஒருவருக்கு பிறக்கும்.
இந்தப் பையன் ஜாதகத்திற்கு இப்போது அவரது தந்தை உயிருடன் இருக்கக் கூடாதே என்று என்னிடம் ஜாதகம் பார்க்க வரும் சிலரிடம் கேட்டுள்ளேன். “நல்லா பார்த்து ஜோசியத்தை சொல்லு” என்று மிரட்டலுடன் கூறுவார்கள். இந்தப் பையன் பிறந்ததற்கு பின்னர் தான் அவரது தந்தை மிகப் பெரியளவில் வளர்ந்துள்ளார், பல சொத்துகளுக்கு அதிபதியானார் என்றெல்லாம் கூறுவார்கள்.
ஆனால் உண்மையில் விந்தை விட்டவன் எங்காவது நொந்து போய் கிடப்பான் அல்லது இறந்திருப்பான். தற்போது தந்தை என்று கூறப்படுபவர் அக்குழந்தையை பாதுகாவலனாக மட்டுமே இருப்பார். எனவே அப்பெண் கூறினால் மட்டுமே உண்மையான தகப்பன் யார் என்று தெரியும்.
சில கூட்டு கிரக அமைப்புகள் (அதாவது சுக்கிரன் ராகுவுடன் அல்லது சனியுடன் 5ஆம் இடத்தில் சேர்ந்திருந்தால்) அப்பெண் மாற்றானுக்கு பிள்ளை பெறுவாள் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அதே 5ஆம் இடத்தில் சூரியன், செவ்வாய், சனி ஆகிய 3 கிரகங்கள் அமையப் பெற்றால் இதேபோல் நிகழும்.
அடுத்ததாக 5வது இடத்தில் கொடிய கிரகங்கள் (செவ்வாய், ராகு, சனி) அமரும்போது அப்பெண் தான் பெற்ற குழந்தையை தூக்கி எறிவாள் என்றும் ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.