Publish Date: Mon, 14 Jul 2008 (12:58 IST)
Updated Date: Mon, 14 Jul 2008 (12:58 IST)
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிற்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் விலக்கிக்கொண்டதை அடுத்து மன்மோகன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுமா என்பதே இந்திய மக்களின் முதன்மை கேள்வியாகி உள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசுக்கான சாதக, பாதகம் குறித்து டெல்லியில் மட்டுமல்லாமல், தமிழகத்தின் குக்கிராம டீக்கடைகளில் கூட அரசியல் ஆர்வலர்கள் சூடாக விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு தப்புமா என்ற கேள்வியுடன் ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன் அவர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:
வரும் 22ஆம் தேதி நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிச்சயம் வெற்றி பெறும்.
22ஆம் தேதி சோனியா காந்திக்கு மிகவும் உகந்த நாளாக உள்ளது. அதாவது அன்றைய தினம் 4ன் ஆதிக்கத்தில் உள்ளதால் விதவைகள், அகதிகள் உள்ளிட்டவர்களுக்கு ஆதரவான நிலையை ஏற்படுத்தும்.
அந்த வகையில் சோனியா காந்திக்கு அன்றைய தினம் வெற்றி கிட்டும். அதேபோல், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு தேவையான 271 வாக்குகளுக்கும் மேல் (280 முதல் 285 வரை) ஐமு கூட்டணி அரசு பெறும்.
தற்போது இடதுசாரிகளுக்கு நேரம் அவ்வளவு சாதகமாக இல்லாததால் ஐமு கூட்டணி அரசை கவிழ்க்க அவர்கள் எடுக்கும் முயற்சிகள் தற்போது பலிக்காது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இடதுசாரிக் கட்சிகளுக்கு இது ஆதரவற்ற காலம் என்பதால், அது காங்கிரஸ் அரசுக்கு சாதகமாக மாறியுள்ளதையும் இத்தருணத்தில் குறிப்பிட்டாக வேண்டும்.
ஆனால், பா.ஜ.க. கட்சியின் பலம் தொடர்ந்து உயரும். அக்கட்சியின் மூத்த தலைவர்களின் ஜாதகங்கள் தற்போது சிறப்பாக உள்ளதால் பா.ஜ.க. தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்லும்.
இருப்பினும் இந்த ஆண்டு இறுதிக்குள் மக்களவைக்கு தேர்தல் வராது என்பதால் காங்கிரஸ் ஆட்சிக்கு தற்காலிக ஆபத்து இல்லை என்றே கூற வேண்டும் என்றார்.