ராசிக்கேற்றவாறு ஒவ்வொருவருக்கும் குணங்கள் வேறுபடுமா?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு குணம் உண்டு. சில நட்சத்திரங்கள் சாத்வீகமானது, சில நட்சத்திரங்கள் ராட்சஸ தன்மை கொண்டவை. சிலசாதாரண மனிதர்களுக்குரிய நட்சத்திரங்களாகவும் இருக்கும்.கணங்களே மனுஷ கணம், தேவ கணம், ராட்சச கணம் என்று சொல்லப்படும்.
கேது நட்சத்திரக்காரர்கள் கொஞ்சம் கோபப்படுவார்கள். உணர்ச்சி வசப்படுவார்கள். ராகு, கேது கிரகத்திற்குரிய நட்சத்திரங்கள் கொஞ்சம் கடினமாக இருப்பார்கள். அதாவது அஸ்வினி, மகம், மூலம் போன்ற நட்சத்திரங்கள் எல்லாம் கேதுவின் நட்சத்திரம். இவர்களுக்கு முன்கோபம் இருக்கும்.
ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சண்டைக்குப் போக மாட்டார்கள். வந்த சண்டையை விட மாட்டார்கள்.
பரணி, பூரம், பூராடம் நட்சத்திரக்காரர்கள் உணர்ச்சியைக் கட்டுப்படுத்தி, இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசி அங்குள்ள அசாதாரண நிலையை மாற்றுவார்கள். அதுபோன்ற குணம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
சூரியனின் நட்சத்திரமான கிருத்திகை, உத்திரம், உத்திராடம் போன்றவர்கள் கடினமாக இருப்பார்கள். ராகு, கேது நட்சத்திரங்களை விட இவர்கள் மிகக் கடினமானவர்களாக இருப்பார்கள்.
அதாவது பிடிவாதம், கொள்கை, கோட்பாடு போன்றவை இருக்கும். வாக்குவாதம் செய்வார்கள். இவர்கள் தர்கத்திற்குச் சிறந்தவர்கள் என்றே பழைய நூல்கள் சொல்கின்றன.
ரோகிணி, அஷ்டம், திருவோணம் ஆகியவை சந்திரனின் நட்சத்திரங்கள். இவர்கள் சாத்வீகமான நட்சத்திரங்கள். மற்றவர்கள் கடினமாக இருந்தாலும் அவர்களை அனுசரித்துச் செல்வார்கள்.அதனால்தான் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு குணங்கள் உண்டு.
ஆனால் எல்லா நட்சத்திரக்காரர்களும் ஏழரை சனி, அஷ்டமத்து சனி வரும்போது கோபப்படுவார்கள். ரொம்ப சாந்தமானவர்கள் கூட கோபப்படுவது, சிக்கலில் சிக்கிக் கொள்வது போன்றவை இந்த சனி தசையில் நடக்கும்.
இதுபோன்று மோசமான தசை நடக்கும்போதும் கோப-தாபங்கள் அதிகமாகும். ராகு கொடுப்பான், கேது கெடுப்பான் என்று சொல்வார்கள்.
9 கிரகங்களில் கேது தசைதான் ரொம்ப கெட்ட தசை. இந்த தசை ஆரம்பித்தாலே கோபப்படுதல், உணர்ச்சி வயப்படுதல், தவறான முடிவுகளை எடுத்தல் போன்றவை நடக்கும். சில கொடூரமான பலன்கள் உண்டாகும்.
அதெல்லாம் ஜாதகத்தையும், அமையக் கூடிய கிரகங்களைப் பொறுத்து நிகழும். பொதுவாக நாம் 5 ஆம் இடத்தைப் பார்க்க வேண்டும். லக்னத்திற்கு 5 ஆம் இடம் மனப்பான்மைக்குரிய இடம். அந்த இடத்தில் கடினமான கிரகங்கள் வந்து அமர்ந்தால் அவர்கள் உணர்ச்சி வசப்படுவார்கள். செவ்வாய் என்பது படைவீரர் போன்ற கிரகம். 5இல் எல்லாம் செவ்வாய் இருந்தால் எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள். உணர்ச்சிவசப்படுவார்கள். திடீரென உணர்ச்சிவசப்பட்டு கையில் கிடைப்பதை எடுத்து எறிவது போன்ற நடவடிக்கைளைக் காணலாம்.
அதேபோல 5இல் கேது இருந்தாலும் உடனடி கோபம் வரும். அப்புறம் சாந்தமாகிவிடுவார்கள். 5இல் ராகு இருந்தாலும் கோபப்படுவார்கள். சூரியன் இருந்தால் தனக்குத்தானே திட்டிக் கொள்வது, தண்டனைக் கொடுப்பது போன்று நடந்து கொள்வார்கள். தனக்குத்தானே பழி சுமத்திக் கொள்வது போன்றவை இருக்கும்.
பொதுவாக கோப தாபம் இருப்பது எல்லா கிரகங்களுக்கும் பொருந்தும். தசா புக்திகளைப் பொறுத்து அது வேறுபடும்.