இந்த மார்கழி (தனுசு) மாதத்தில் மழை பெய்யும்!
கலிய இரவிச்சந்திரன்
ஒவ்வொரு ஆண்டும் தட்சின ஆயணத்தில் கிரக மண்டலத்தில் சூரியர் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் மாதம் மார்கழி. இது ருதுக்களில் ஹேமந்தருது காலம். அதாவது முன் பனிக் காலம் ஆகும். இந்த ராசி கன்னி ராசிக்கு கேந்த்ர ராசி. குருவுக்கு இது சொந்த வீடு. பொதுவாக இம்மாதத்தில் பனிப் பொழிவு அதிகம் இருக்கும். இதனால் மாடு போன்ற கால்நடைகளுக்கு பாதிப்புகள் ஏற்படும். (கோமாரி போன்ற நோய்கள்) தாக்கக்கூடும்.சர்வஜித்து ஆண்டில் சூரியனின் தனுசு சஞ்சாரம், குருவுடன் புதனும் சேர்ந்து சஞ்சரிப்பது சிறப்பு அம்சமேயாகும். எனவே கால்நடைகள், வன விலங்குகளுக்கு அதிக பாதிப்பு இராது. இந்த மாதத்தில் வைகுண்ட ஏகாதசி இன்னும் ஒரு சிறப்புடையது. ரவானுலக சொர்கமான வைகுண்டத்தின் வாசல் மார்கழி 1 முதல் நடை திறக்கப்பட்டு இந்த மாதம் முழுவதும் திறந்திருக்கும். இந்த மாதத்தில் இறப்பவர்களுக்கு நரகம் இல்லை என்பது ஐதீகம். சர்வஜித்து ஆண்டின் மார்கழி மாத கிரக சஞ்சாரத்தின்படி, சுக்கிரனின் துலாம் சஞ்சார காலமான மார்கழி 10ஆம் தேதி (26.12.2007) வரை பனி பொழிவை விட மழையே பெய்யக் கூடும். குளிரும் குறைவாகவே இருக்கும்.இந்த ஆண்டின் மேகாதிபதியான சுக்கிரன் அனுகிரகத்தால் பங்குனி மாதம் வரையிலுமே அவ்வப்போது தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியாவின் வடமேற்கு பகுதியிலும் மழை பொழிவுயிருக்கும். மார்கழியில் 4, 5, 6, 7ம் தேதிகளில் (20, 21, 22, 23.12.2007) இந்தியாவின் தென் பகுதியில் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
மார்கழி பனிப்பொழிவு உடலில் பீடையையும், உஷ்ணத்தையும் ஏற்படுத்தும். ஆதலால் அதிகாலை குளியல், பால், மோர், தயிர் உணவில் சேர்த்துக் கொள்வது நன்மை தரும்.