சனீஸ்வரர், எள், நல்லெண்ணெய்!
ஜோதிட ஆய்வாளர் கலிய. இரவிச்சந்திரன்
மாறி வருகின்ற பழக்க வழக்கம், பண்பாட்டுச் சீர்கேட்டால் மனிதர்கள் மட்டுமல்ல இந்த பிரபஞ்சமும் (இயற்கை) இழந்து வருவது ஏராளம் என்பதை நாம் உணராமல் இருப்பது வேதனைக்குரியது. புதியனவெல்லாம் நன்மை பயக்குமேயானால் ஏற்புடையது தான், ஆனால் பழைய பண்பாடுகளை ஆராயாமல் புறந்தள்ளிவிடுவது விவேகமாகாது.
பண்டைய பண்பாடுகளில் உணவு உள்பட அனைத்திலும் ஒரு காரணம், நன்மை இல்லாமல் இல்லை. உதாரணம் எள்ளிலிருந்து பெறப்படும் நல்ல எண்ணெய் இன்று வழக்கத்திலிருந்து மறைந்துவிடும் நிலையில் உள்ளது.
எண்ணெய் வகைகளில் தனிச்சிறப்பு வாய்ந்தது நல்லெண்ணெய். இது மற்ற எண்ணெய்கள் போல் இரத்தத்தில் கொழுப்பு சேர விடுவதில்லை, மாறாக கொழுப்பை அகற்றி இரத்தத்தை சுத்திகரிக்கக் கூடியது. முன்பெல்லாம் இந்த எண்ணெய் மட்டுமே உணவில் சேர்த்து கொள்ளப்பட்டது. இன்று மாற்று எண்ணெய்களே அதிகம் புழக்கத்தில் உள்ளது. கிராமப் புறங்களில் பால் சுரக்கும் பசுக்களுக்கு எள் பிண்ணாக்கு சிரிதளவும் அத்துடன் தேங்காய், கடலை புண்ணாக்கும் சேர்த்து கொடுப்பார்கள. ,அதிகம் எள் புண்ணாக்கு கொடுத்தால் மாட்டின் இரத்தத்தில் உள்ள கொழுப்பை திரித்து பால் வழியே கொண்டு வந்து விடும். பால் கொழுப்பு நிறைந்து தரமானதாக இருக்கும், ஆனால் மாடு இளைத்துவிடும். இதனால் எள் புண்ணாக்கு அதிகம் கொடுக்க மாட்டார்கள்.
பூப்பெய்தும் இளம் பெண்களுக்கு சுத்தமான நல்ல எண்ணெய் குடிப்பதற்கு கொடுப்பார்கள். ஏனென்றால் இது (மூல) அண்ட அணு உற்பத்தி உறுப்புகளை சீராக செயல்பட வைக்கும், கருப்பையில் அழுக்கை அகற்றும் தன்மை வாய்ந்தது. நல்ல எண்ணெய் குளியல் மூல சூட்டை தணிக்கும், உடலில் படியும் எண்ணெய் பசையை அகற்றி மயிர் கண்களை சுத்தமாக வைத்திருக்கும். இதனால் வியர்வை வெளியேற்றம் சீராக இருக்கும்.
கோயில்களில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றும் வழக்கமும் ஒரு சிறப்பு அம்சமேயாகும். தீபம் எரிந்த எண்ணெய் பசை (ஆவி நிலையில்) கருவரையின் சுவர்களில் உள்ள கல்லின் மீது படியும், அத்துடன் கற்பூரம் எரிந்த சுடர் படிந்து கொள்ளும். இவை கல்லின் குணத்துடன் சேர்ந்து இறைவனை வழிபட கருவறைக்குள் செல்லும் அனைவருக்கும் இது ஆரோக்கியத்தை அளிக்க வல்லதாகும்.
உதாரணம், நல்லெண்ணெயில் கற்பூரச் சுடரை கலந்து “ஆரோக்யமை” என்று ஒன்று நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்வது பழைய பழக்கங்களில் ஒன்று. இது ஆரோக்கியத்துடன் சிந்தனைக்கும் சுடர் தர வல்லது. எள்ளும், எண்ணெய்யும் எரிந்து வரும் புகை மணம் அதன் ஆவி இந்தப் பூவுலகில் மட்டுமல்ல பிரபஞ்சத்தினூடே மனிதன் கொண்டுள்ள தொடர்பை நீட்டிக்க வல்லது என்பது ஆச்சர்யமான உண்மை.சனீஸ்வரர்
கிரகங்களில் தனிச்சிறப்பு வாய்ந்த கிரகம் சனி என்பது நமக்குத் தெரியும். இவர் ஆயுளை நிர்ணயிப்பவர். கொடுப்பதிலும் அழிப்பதிலும் ஈஸ்வரனுக்கு நிகரானவர். 30 ஆண்டில் சூரியைன ஒரு முறை சுற்றி முடிக்ககும் இவர் ஒருவர் ஜாதகத்தில் கோசார ரீதியில் சந்ரா லக்னத்திற்கு 12, 1, 2 ல் வரும் போது ஏழரை சனியாவார், 8ல் வரும்போது அட்டமச் சனியாவார், இந்த கால கட்டத்தில் குறிப்பிட்ட ஜாதகருக்கு பெரும் கொடுமையிழைப்பார் என்பது ஜோதிட சாஸ்திரம் கண்ட உண்மை. முதல் சுற்றுக்கு மறு சுற்று நன்மையும் செய்வார்.சனியின் (சமித்து) தானியம் எள்!
சோதிட சாஸ்திர விதியின்படி சனியின் சமித்து எள், வாகனம் காகம். பொதுவாக ஏழரை, அட்டம சனி நடப்பில் உள்ளவர்களுக்கு வரும் (கோளாறுகள்) (கோபம் - இறகம்) + (ஆறு - வழி) தான் என்கின்ற எண்ணம். கோபம், இரத்தத்தில் உஷ்ணம் அதிகரிப்பினால் ஏற்படும் டென்ஷன், மற்றவர்களை மதிக்காத தனிச்சையான செயல்பாடு, இரத்தத்தில் கொழுப்பு மிகுதியாக உள்ளவர்களுக்கு இந்த சமயத்தில் மூலக் கொதிப்பு, எளிதில் காதல் காம வயப்படுதல் போன்ற வற்றால் அதிகம் பாதிப்பு வரும் என்பது சோதிட சாஸ்திர விதி மட்டுமல்ல உண்மை.
கிரகங்கள் அனைத்தும் சூரியனிடம் இருந்து ஒளியை பெற்று பிரதிபலிப்பவை, சனியும் அதுபோலவே. சனி நீல கிரகம் என்பது ஆய்வு கண்ட உண்மை, சூரியனிலிருந்து வரும் புற ஊதா கதிர்களை அதிகம் பிரதிபலிக்க வல்ல கிரகம் சனி. இக்கதிர்கள் உடலில் உள்ள நரம்புகளை அதிவேகமாக செயல்படத் தூண்டும், மென்மையான பாகங்களில் உஷண்த்தை அதிகரிக்கச் செய்யும், கதிர்களின் உஷணம் மட்டுமல்ல, ஊதா வண்ணத்தின் குணமும் நரம்புகளின் செயலை தூண்டும். இதன் காரணமாக ஏழரை மற்றும் அட்டம சனி நடப்பில் உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் இருக்கும்.
மற்றவர்களுக்கும் சனியின் பாதிப்பு இல்லை என்று சொல்வதற்கில்லை, ஏனென்றால் ஜாதக ரீதியாக பார்த்தால் சனி தசை புத்தி, அந்தர காலம் போன்றவற்றிலும் பாதிப்பு உண்டு. சனி வாரம் இந்த கதிர்களினால் அனைவருக்கும் பாதிப்பு இருக்கும். ஆனால் ஜனன கால ஜாதகத்தில் சனி நல்ல நிலையில் இருந்தால் இச்செயலை தாக்குப்பிடிக்கும் சக்தி உடலில் இருக்கும். வானில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு ராசியும் அதற்கான பாகை விட்டு மறு ராசிக்கு கிரகம் செல்வதை பெயற்ச்சி என்கிறோம். இது சமயம் கிரகங்களின் கதிர் வீச்சுகள் வலிமை உடையதாக இருக்கும். பின்பு படிப்படியாக குறையும், அதனால் பெயற்ச்சியின் போது கிரக பிரீத்தி செய்து வணங்குவது நல்லது என்பர்.
சனீஸ்வரருக்கு எள் சம்பந்தப்பட்ட பொருள்கள் : எள் சாதம், எள் உருண்டை, எள் மாவு போன்றவை நெய்வேத்யம் செய்து உண்பது இரத்தத்தில் உள்ள கொழுப்பை அகற்றி சீரான செயலை உடலில் ஏற்படுத்தும். சனிப்பெயற்சியின் போது கருப்பு துணியில் எள்ளை முடிந்து ஈஸ்வரன் கோவிலில் உள்ள சனியை வணங்கி பின் அந்த எள்ளை கோயிலில் உள்ள பரத்யேக குண்டத்திலிடுவது வழக்கம். இதனால் ஏற்படும் கரும்புகை வண்ணம் புற ஊதா கதிர்களை பூமியின் மீது படாமல் தடுக்கும். காரணம் கருப்பு வண்ணம் மட்டுமே புற ஊதா கதிர்கள் ஊடுருவாத நிறம். இப்புகை காற்றில் உள்ள நச்சுத்தன்மையை முறிக்கும்.
சனியின் வாகனம் காகம்!
பறவைகளில் காலத்தை மனிதனுக்கு உணர்த்தும் இனம் காகம். இது சனீஸ்வரரின் வாகனம், நிறம் கருமை. சனீஸ்வரரின் பார்வையான புற ஊதா கதிர்களை தடுக்கவல்லது. ஏழறை, அட்டம சனி நடப்பில் உள்ளவர்கள் இதற்கு உணவளித்து வணங்குவது நல்லது.
எள், நல்ல எண்ணெய் உபயோகம் என்பது வெறும் உணவு கலாச்சாரம் மட்டுமல்ல, உடலில் தேவையில்லாதவற்றை விலக்கி வான மண்டலத்தின் வலிய பாதிப்பை கூட வாழ்வியலுக்கு எளிமையாக்கிக் கொள்ளும் பண்பாட்டை நாம் பெற்றிருப்பது வியந்து பெருமை கொள்ள வேண்டியது.