சிம்மச் சனி ஆசியாவை ஆட்டிப் படைக்கும்!
ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன்
ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஏற்பட்ட சனிப் பெயர்ச்சியில் சிம்ம ராசியில் சனி வந்து அமர்ந்துள்ளதால் ஆசிய கண்டத்திற்கு பெரும் சீரழிவுகள் ஏற்படும் என்று ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கூறியுள்ளார்!
ஆசிய கண்டத்திற்குரிய ராசி சிம்மம். இதில் சனி அமர்ந்திருப்பதால் சீரழிவு ஏற்படுவது நிச்சயம். செவ்வாய் போர் கிரகமாகும். ராணுவம், காவல்துறை இதற்கெல்லாம் உரிய செவ்வாய் கிரகம் உக்கிரமடையும் போது உள்நாட்டுப் போர், கலகம், தீவிரவாதம் ஆகியன பெருகும்.
இதுமட்டுமின்றி, மொஹம்மது நாடுகளுக்கான கிரகம் செவ்வாய் ஆகும். முன்பு இது உக்கிரமடைந்தபோதுதான் வளைகுடா போர் நடந்தது. தற்பொழுதும் இது உக்கிரமடைந்திருப்பதால் வளைகுடா நாடுகளில் இயங்கிவரும் தீவிரவாத அமைப்புகள் ஒன்றிணைந்து பிரச்சனையை தீவிரப்படுத்துவார்கள்.
கம்யூனிச நாடுகளில் மக்கள் மன நிம்மதியின்றி தவிப்பார்கள். இதனால் இதுவரை இருந்த வந்த அடக்குமுறையை மீறி மக்கள் கிளர்ந்தெழுவார்கள்.
ஆசிய கண்டத்தில் வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கையில் உள்நாட்டு நிலை மோசமடையும். பாகிஸ்தானில் உள்நாட்டு அரசியல் நெருக்கடி தீவிரமடையும்.
இலங்கையைப் பொறுத்தவரை வரும் 18 ஆம் தேதிக்குப் பிறகு விடுதலைப் புலிகள் அடிப்பார்கள்.
சிம்மச் சனி 25.09.2009 வரை நீடிப்பதால் தீவிரவாதம், கிளர்ச்சிகள் பெருகும். மாணவர்கள் வன்முறை அதிகரிக்கும். பத்திரிக்கையாளர்களுக்கு நெருக்கடி ஏற்படும். மின்சாரத்தால் ஏற்படும் தீ விபத்துகள், நிலநடுக்கம் அதிகரிக்கும். மழை கொஞ்சம், கொஞ்சமாக குறையத் துவங்கும்.
இதுமட்டுமின்றி, சனி அதன் பகையான சூரியன் வீட்டில் உள்ளது. சனியின் உள்கட்டமைப்பே கார்பன், கார்பன் மோனாக்சைடு போன்றவைதான். இவைகள் மந்தமானவை. சூரியன் = ஹீலியம். இது மிகப் பரபரப்பானது. விஞ்ஞானப்பூர்வமாக பார்த்தாலும் இவை ஒன்றிற்கு ஒன்று பகையானவையே.
எனவே, மந்தமானது, சுறுசுறுப்பான இடத்திற்கு வந்துள்ளதால் மந்த புத்தி, நெகட்டிவ் மனப்போக்கு கொண்டவர்கள் சுறுசுறுப்பாகவும், தந்திரமாகவும் செயல்படுவார்கள். நல்லவர்களுக்கு காலமில்லை என்பது போல எல்லாம் நடக்கும்.