காதலிப்பவர்களுக்கு உங்களது ஆலோசனை?
ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்:
காதலிப்பவர்கள் முதலில் சரியானவரை காதலிக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அது ரொம்ப முக்கியம்.
காதலிப்பது யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம். அது நல்லவர்களுக்கும் வரும், கெட்டவர்களுக்கும் வரும்.
3 வருட காதல் முடிந்து போவதும் உண்டு. 30 வருடம் காதலித்து கல்யாணம் செய்து கொள்பவர்களும் உண்டு. பொதுவாக ஏழரை சனி வரும்போதுதான் காதலிக்கிறார்கள். பலரும் அஷ்டமத்து சனி, அர்தாஷ்டம சனி வரும்போது காதலிக்கிறார்கள். பொதுவாக தசா புக்தி சரி இல்லாத காலக்கட்டத்தில்தான் காதலிக்கிறார்கள்.
சரி இல்லாத தசா புக்தி, சரி இல்லாத நேரத்தில் காதலிப்பவர்களின் காதல் நீடிக்காது. சனி இருக்கும் வரை காதலிப்பார்கள். அது முடிந்தவுடன் காதலும் முடிந்துவிடும். அதன்பிறகு ஒரு தெளிவு வரும்.
மோசமான தசா புக்தி இல்லாத காலக்கட்டத்தில் காதலிப்பவர்களின் காதல் மட்டுமே நீடிக்கும். அந்தக் காதல் தான் கடைசி வரை நீடிக்கிறது. அவர்கள் கணவன் - மனைவியாகி நல்ல குழந்தைகளைப் பெற்று கடைசி வரை அதே காதலோடு வாழ்ந்து காட்டுகிறார்கள்.
இதே சனி திசையில் வரும் காதல், மோசமான நேரத்தில் வரும் காதல் சரியாக கனியாது.
அதனால் எந்த தசை நடக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். அதைப் பொறுத்து காதல் நீடிக்குமா? நீடிக்காதா என்பதை தீர்மானிக்க வேண்டும்.
காதலிக்கும் போது கண்ணே, மணியே என்று கொஞ்சிக் கொண்டு, கல்யாணத்திற்குப் பிறகு பார்க்கக் கூடப் பிடிக்காமல் விலகிப் போகுபவர்களையும் நாம் பார்க்கிறோம்.
எந்த காலக்கட்டத்தில் நமக்கு காதல் உருவாகிறது என்பதைப் பார்த்து அந்தக் காதல் எப்படி முடியும் என்பதை நிச்சயமாகக் கூறலாம்.