நவீன நீர்வழிச் சாலை திட்டத்தின் பொறியாளர் ஏ.சி.காமராஜ் காலமானதையடுத்து பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நவீன நீர்வழிச் சாலை திட்டத்தின் தலைவர் பொறியாளர் ஏ.சி.காமராஜ் இந்திய அரசின் நீர்வளத்துறையில் பணிபுரிந்த நிலையில் அவர் நவீன நீர்வழிச் சாலை திட்டத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.
பாலாறு, செய்யாறு, பொன்னையாறு, காவிரி, மேல் ஓடை, அமராவதி, சண்முக நதி, பாம்பாறு, வரட்டாறு, நல்லதங்காள் ஓடை, குடகனாறு, வைகை, காயுண்டன், குண்டாறு, அர்ஜூனா, தாமிரபரணி, சித்தாறு ஆகிய 17 நதிகளை நீர்வழிப் பாதை மூலம் இணைக்க முடியும் என்ற முன்வரைவை தயாரித்த இவர் நீர்வழிப் பாதைகளை உருவாக்குவதன் மூலம் நதிகளை எளிதாக இணைக்கலாம் என்றும் அதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆய்வு செய்தார்.
கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் அவற்றின் கிளை நதிகளை இணைக்கலாம் என்று அவரது ஆய்வு அறிக்கை கூறுகிறது. இந்த நிலையில் ஏ.சி.காமராஜ் முதுமை காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 90.
காமராஜின் மரணத்தை அடுத்து தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பொறியாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.