ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படும் என ஏற்கனவே அறிவித்தபடி இன்று நள்ளிரவு 12 மணி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரும் என கூறப்பட்டது. இந்த சுங்கக்கட்டணம் உயர்வுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் சங்க கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வரும் நிலையில் நடப்பு நிதியாண்டில் சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10% வரை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இதன்படிஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அதாவது இன்று நள்ளிரவு 12 மணி முதல் தமிழகத்தில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.
5 முதல் 55 ரூபாய் வரை கட்டணம் உயரும் என்றும் சென்னை பொருத்தவரை புறகர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயரும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் சுங்கக்கட்டணம் உயர்வுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் 29 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் சுங்கக்கட்டணம் 10% வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளை எந்த வகையிலும் மேம்படுத்தாமல் ஆண்டுக்கு ஆண்டு சுங்கக்கட்டணத்தை உயர்த்துவதை ஏற்க முடியாது. சுங்கக்கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது!
60 கிமீக்கு ஒரே சுங்கச்சாவடி, தமிழகத்தில் 9 சுங்கச்சாவடிகளில் 31.03.2023ஆம் தேதியுடன் சுங்கக்கட்டணம் 40% குறைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அறிவித்த நிலையில், அவை எதுவும் செயலுக்கு வரவில்லை; ஆனால், கட்டணம் மட்டும் உயருகிறது. இது என்ன நியாயம்?
சுங்கச்சாவடி சீர்திருத்தங்களை செய்யாமல், சாலைகளை மேம்படுத்தாமல் கட்டணங்களை மட்டும் உயர்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாடு முழுவதும் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! என்று தெரிவித்துள்ளார்.