Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பள்ளிகள் திறப்பை மேலும் ஒத்திவைக்க வேண்டும்.! ஓ.பி.எஸ் வலியுறுத்தல்.!!

Advertiesment
தமிழகம்

Senthil Velan

, சனி, 1 ஜூன் 2024 (10:56 IST)
வெப்ப அலையடிப்பதால் தமிழ்நாட்டில் உள்ள  பள்ளிகள் அனைத்தும் ஜூன் 10-ம் தேதிக்குப் பதிலாக ஜூன் மூன்றாவது வாரத்தில் திறக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
 
அதிக வெப்பம் காரணமாக தமிழ்நாட்டில் ஜூன் 6-ம் தேதி திறக்கப்பட இருந்த பள்ளிகள் ஜூன் 10ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில் ஜூன் மூன்றாவது வாரத்தில் பள்ளிகள் திறக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
 
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,   தமிழ்நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து அலை வீசி வருவதன் காரணமாக, மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.
 
அரசாங்கமே வெளியில் செல்ல வேண்டாம் என்று மக்களை அறிவுறுத்தும் அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து இருக்கிறது. பொதுவாக, வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை தாண்டும்போது அதனை வெப்பஅலை என்று சொல்வார்கள். இந்த அளவையும் தாண்டி, தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெப்பஅலை வீசிக் கொண்டிருக்கிறது.
 
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், மதுரை, திருச்சி, கடலூர், பரங்கிப்பேட்டை, திருத்தணி, ஈரோடு, தூத்துக்குடி, நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் நேற்று வெப்ப அலை 38 டிகிரி செல்சியஸ்க்கு மேலாக வீசி இருக்கிறது. சென்னையில் மட்டும் 41.6 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்ப அலை வீசி இருக்கிறது. அதாவது, 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் வெயிலின் தாக்கம் இருந்து இருக்கிறது.
 
ஓரிரு இடங்களில் மழைப் பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்தாலும், பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. கடும் வெயிலின் தாக்கம் என்பது நீரிழப்பு, சோர்வு, மயக்கம், தலைச்சுற்றல், தலைவலி, வாந்தி, தசைப்பிடிப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
 
இதனைக் கருத்தில் கொண்டு, புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் மத்திய கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் பள்ளிகள் அனைத்தும் ஜூன் 6-ம் தேதிக்குப் பதிலாக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், அனைத்து வகைப் பள்ளிகளும் 10-06-2024 அன்று திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.


தற்போது தமிழ்நாடு முழுவதும் நிலவும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் மத்திய கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் பள்ளிகள் அனைத்தும் ஜூன் 10-ம் தேதிக்குப் பதிலாக ஜூன் மூன்றாவது வாரத்தில் திறக்க ஆவன செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கம், வெள்ளி விலை மீண்டும் சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!