தமிழக காங்கிரஸ் சென்னையில் நடத்திய பாதயாத்திரைக்கு போலீசார் அனுமதி தரவில்லை என்பதை அடுத்து செல்வபெருந்தகை காவல்துறை அதிகாரியிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வெறுப்பு அரசியலை கண்டித்தும், ராகுல் காந்தியை விமர்சனம் செய்வதை கண்டித்தும், தமிழக காங்கிரஸ் சார்பில் இன்று பாதயாத்திரை நடத்தப்படும் என்று செல்வபெருந்தகை அறிவித்திருந்தார்.
சென்னை ஜிம்கானா கிளப் காமராஜர் சிலை முன்பு இந்த பாதயாத்திரை செல்ல முடிவு செய்தபோது, அங்கு வந்த போலீசார் அண்ணா சாலை வழியாக பாதயாத்திரை செல்ல அனுமதி இல்லை என்று கூறினார். இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
செல்வபெருந்தகை, விஷ்ணு பிரசாத், சுதா, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் போலீஸ் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போலீசார் அனுமதி மறுத்ததால் மறியலில் ஈடுபட காங்கிரஸ் தொண்டர்கள் தயாரானார்கள்.
இதனால் அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டதாக பரபரப்பு ஏற்பட்டது. கடைசியில் மூன்று மூன்று பேராக செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அந்த வழியாக ஊர்வலம் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.